• Sun. Mar 9th, 2025

24×7 Live News

Apdin News

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் | 14 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy

Byadmin

Mar 7, 2025


ராமேசுவரம்: மன்னார் வளைகுடா கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் தீவு மீனவர்கள் கடந்த பிப்ரவரி 24-ல் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பிப் 28-ல் இருந்து தொடர்ந்து ஐந்து நாட்கள் தங்கச்சிமடத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவ பிரதிநிதிகளை டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து மீனவப் பிரச்சினை குறித்து வலியுறுத்தவும், இலங்கைக்கு தமிழக மீனவ பிரதிநிதிகளை அழைத்துச் சென்று அங்குள்ள மீனவ பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தமிழக அரசு சார்பில் அளித்த வாக்குறுதிகளை ஏற்று தொடர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை பாம்பன் தெற்கு கடற்பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 500 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மன்னார் வளைகுடா தெற்கு கடற்பகுதியில் வியாழக்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆரோக்கியம் என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின் போது சிறைப்பிடித்தனர்.

படகுகளிலிருந்த ஆரோக்கியம், செல்வம், ஜெயாஸ்டன், ஜோஸ்வா, சீமோன், முத்துராமன், முகிலன், ஆரோக்கியம், வால்டன், மாரிசெல்வம், ஜெயசூர்யா, ரிபாக்சன், தர்மன், .விக்னேஸ்வரன் ஆகிய 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். விசைப்படகையும், 14 மீனவர்களையும் தலைமன்னார் அருகே தாழ்வுபாடு கடற்படைமுகாமிற்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர் மன்னார் மாவட்ட மீன்வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வவுனியா சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.



By admin