• Wed. Nov 6th, 2024

24×7 Live News

Apdin News

தமிழக மீனவர்கள் 16 பேருக்கு நவ.20 வரை காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு | 16 fishermen have been extended till November 20

Byadmin

Nov 6, 2024


ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களுக்கு நவம்பர் 20 வரை நீதிமன்ற காவலை நீட்டித்துள்ளது இலங்கை நீதிமன்றம். இதையடுத்து அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடலுக்குச் சென்ற மகேந்திரன், ராமர்பாண்டி என்பவர்களுக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின் போது, கடந்த அக்டோபர் 22-ல் நெடுந்தீவு அருகே சிறைபிடித்தனர்.

அத்துடன் அந்தப் படகுகளில் இருந்த மோகன், மகேந்திரன், ராம்குமார், மாரிகணேஷ், கண்ணன், அன்பரசன், முனீஸ் பிரபு, குருசெல்வம், பாண்டி, முத்துக்கருப்பையா, ராமபாண்டியன் , தங்கராஜ், ராஜு, ஆண்டனி பிச்சை, பூமிநாதன், சுந்தரபாண்டி ஆகிய 16 மீனவர்களை கைது செய்த இலங்கைக் கடற்படை, அவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த 16 மீனவர்களின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து 16 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், 16 மீனவர்களுக்கும் நவம்பர் 20 வரையிலும் இரண்டாவது முறையாக நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து, மீனவர்கள் 16 பேரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.



By admin