• Sat. Nov 16th, 2024

24×7 Live News

Apdin News

தமிழரசுக்கே தமிழ் மக்கள் பிரதான ஆணை! – சுமந்திரன் தெரிவிப்பு

Byadmin

Nov 16, 2024


“எங்களை விட்டு விலகி தனித்துச் சென்றவர்களுக்கு எந்தவிதமான ஆணையையும் கொடுக்காமல் தமிழரசுக் கட்சிக்கு வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பிரதான ஆணையைக் கொடுத்திருக்கின்றார்கள். அதற்காகத் தமிழரசுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“மக்கள் முன்பாக வந்து தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நான் தெரிவு செய்யப்படாத சூழலில் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் செல்வதை விரும்பவில்லை.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்திக்கு எங்களது வாழ்த்துதல்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதுவொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி. இந்தப் பிரதிநிதித்துவ முறைமை வந்த பிறகு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தனித்து ஒரு கட்சி எடுப்பது மிகவும் கடினமானதாக இருந்திருக்கின்றது.

உண்மையைச் சொல்லப்போனால் தேர்தல் முடிவுகளோடு எந்தக் கட்சிக்கும் இப்படியான பெரும்பான்மை கிடைத்தது இல்லை. 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வித்தியாசமான தேர்தல் முறையிலே ஆறில் ஐந்து பெரும்பான்மை ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசுக்குக் கிடைத்திருந்தது.

அப்படியான ஒரு பெரும்பான்மை கிடைக்காது என்ற அடிப்படையிலும்தான் இந்தப் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த கையோடு மஹிந்த ராஜபக்ஷ கூட தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுத்திருக்கவில்லை.

அதற்குப் பின்னர் கட்சி மாறல்கள், கட்சித் தாவல்கள் ஊடாகத்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது.

ஆனால், இந்தத் தடவை மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பதற்கும் அப்பால் சென்று 159 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கின்றது. இது உண்மையில் வியத்தகு வெற்றி. அப்படியான வெற்றியை ஈட்டியவர்களுக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதில் இன்னொரு விடயமாக கடந்த நாடாளுமன்றத்திலே மூன்றே மூன்று ஆசனங்களை வைத்திருந்த தேசிய மக்கள் சக்தி இந்த நாடாளுமன்றத்தில்  159 ஆசனங்களைத் தனித்துப் பெற்றிருப்பது இன்னொரு சாதனை.

கட்சி தாவல்கள் நிறைந்த எங்களுடைய அரசியல் கலாசாரத்திலே அவர்கள் தெட்டத் தெளிவாக வேற கட்சிகளில் இருந்து தங்களுடைய கட்சிக்கு யாரும் வர வேண்டாம் என்றும், தாங்கள் யாரையும் எடுக்க மாட்டோம் என்றும்  சொல்லி தனித்து இந்த வெற்றியை ஈட்டியிருக்கின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதே வியப்பான விடயமாகப் பலராலும் நோக்கப்பட்டது. அதற்கு ஒருபடி மேலே சென்று இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அப்பால் மிகப் பெரியதொரு பெரும்பான்மையை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள்.

இந்த இடத்திலே தேசிய மக்கள் சக்தி தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே மக்களுக்குச் சொன்ன விடயங்களை நாங்கள் ஞாபகப்படுத்த விரும்புகின்றோம். இப்படியாக மக்கள் ஆணை உங்களுக்குக் கொடுக்கப்பட்டு இருப்பது முக்கியமாக தேர்தல் அறிக்கை விஞ்ஞாபனத்திலே தாங்கள் குறிப்பிட்ட வாக்குறுதிகளுக்காகவேதான். ஆகையினால் அதைச் செய்து நிறைவேற்றும்படியாக இந்த ஆணை கொடுக்கப்பட்டும் இருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் சொன்னதற்கு மக்கள் உங்களுக்கு ஆணை கொடுத்தார்கள். அதனை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்திலே மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மை தேவையாக இருந்த நிலையில் இப்போது அதனையும் கொடுத்திருக்கின்றார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் அடிப்படையான கொள்கைகளில் ஒன்று நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான். மேலும் அவர்களது தேர்தல் அறிக்கையிலே தெட்டத் தெளிவாக புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்பதையும் கூறியிருக்கின்றார்கள்.

குறிப்பாக ஐனாதிபதித் தேர்தலில் அவர்கள் வெளியிட்ட தேர்தல்  அறிக்கையிலே 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான நல்லாட்சி என்று தங்களை அழைத்துக் கொண்ட அந்த ஆட்சியின் காலகட்டத்திலே செய்யப்பட்ட வரைபைப் பூர்த்தியாக்குவோம் என்று ஒரு வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கின்றது. அப்படியாக பல விடயங்கள் அவர்களுடைய வாக்குறுதிகளிலே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த விடயங்களைத் துரிதமாக அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அந்த விடயங்களிலே எங்களுடைய கட்சியின் ஆதரவு சரியான திசையில் அவர்கள் செல்வதற்கு எங்களுடைய பூரணமான ஒத்துழைப்பு இருக்கும் என்பதையும் இந்த வேளையில் நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

இவ்வாறு பல விடயங்கள் அடுத்த வருட ஆரம்பத்திலே செய்ய இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியிருக்கின்றார். அத்தோடு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சீக்கிரமாக நடத்தப்பட வேண்டும் என்று  நீதிமன்றக் கட்டளை இருக்கின்றது. அதனையும் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

அதற்கும் மேலாக முடக்கப்பட்டு இருக்கின்ற மாகாண சபைத் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும். உரிய சட்ட திருத்தத்தின் மூலமாக அது செய்யப்படலாம். சென்ற நாடாளுமன்றத்தின் இறுதி நாட்களில் அந்தச் சட்ட மூலத்தின் இறுதி வாசிப்பு  நிறைவேற்றப்பட்டு வெறுமனே மூன்றாம் வாசிப்பு அறிவிப்பு செய்யப்பட இருந்த நேரத்தில் அது செய்யப்படாமல்  கைவிடப்பட்டது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்.

ஆகையினாலே இந்தச் சிறிய சட்ட திருத்தத்தை உடனடியாகச் செய்து மாகாண சபை முறைமையை திரும்பவும் அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் முன்வைக்கின்றோம். அதற்கான வாக்குறுதிகளையும் அவர்கள் ஏற்கனவே கொடுத்தும் இருக்கின்றார்கள்.

மேலும் இந்தத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட்டது எல்லலோருக்கும் தெரியும். தமிழரசுக் கட்சியோடு இணைந்து வெவ்வேறு கட்சிகள் கூட்டுச் சேர்வதும் பின்னர் விலகிச் செல்வதும் வழக்கமாக இருந்திருக்கின்றது.

இந்தத் தேர்தலுக்கு முன்னர் எங்களோடு கூட்டுச் சேர்ந்திருந்த பங்காளிக் கட்சிகளான ரெலோவும் புளொட்டும் விலகி புதிதாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என்று குத்துவிளக்குச் சின்னத்திலே அவர்கள் பயணித்தார்கள். இதற்குப் பின்னர் இப்போது இதனைச் சங்கு சின்னமாக மாற்றியிருக்கின்றார்கள்.

ஆகையினால் தமிழரசுக் கட்சி தனித்து மக்கள் முன்பாக ஆணைக்காகச்  செல்லுகின்றபோது பலருடைய விமர்சனங்கள் இருந்தன. அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து விட்டது, தமிழரசுக் கட்சி சின்னாபின்னமாகி விட்டது, சுக்குநூறாகி விட்டது என்றவாறாக இந்தத் தேர்தல் காலத்தில் கூட சொல்லப்பட்டது.

எங்களுடைய கட்சியில் இருந்தும் சிலர் விலகிச் சென்று வேறு கட்சிகளிலும், சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிட்டிருக்கின்றார்கள். ஆனால், இந்தத் தேர்தல் முடிவு எங்களுடைய கட்சிக்குப் பலமான மக்கள் ஆணையைக் கொடுத்திருக்கின்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பத்து ஆசனங்கள் இருந்த போதிலும் தமிழரசுக் கட்சிக்கு ஆறு ஆசனங்கள்தான் அதில் இருந்தன. இப்போது தனித்துப் போட்டியிடுகின்றபோது எங்களுக்கு எட்டு ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. எங்களை விட்டு விலகி தனித்துச் சென்றவர்களுக்கு எந்தவிதமான ஆணையையும் கொடுக்காமல் தமிழரசுக் கட்சிக்கு வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பிரதான ஆணையைக்  கொடுத்திருக்கின்றார்கள். அதற்காகத் தமிழரசுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இந்தத் தேர்தல் பரப்புரை காலத்திலே நாங்கள் தெளிவாக ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தோம். அதாவது இணைந்த வடக்கு – கிழக்கு எங்களது தாயகம், அதிலே எங்களுக்கு சுயநிர்ணய உரித்து உண்டு. நாங்கள் ஒரு மக்களாக – ஒரு தேசமாக அதிலே வாழுகின்றோம் என்பதை உறுதி செய்வதற்காக வடக்கு – கிழக்கு முழுவதும் ஒரு கட்சிப் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் எனக் கேட்டிருந்தோம்.

அதுவும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த வேறு எந்தக் கட்சிகளுக்கும் அந்த ஆற்றல் இல்லை என்று மக்களுக்கு நாங்கள் தெளிவாகச் சொல்லியிருந்தோம். இன்று வெளியாகி இருக்கின்ற தேர்தல் முடிவுகளிலே அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் மக்கள், எமது கட்சி பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ளனர்.

இதில் மட்டக்களப்பில் விசேடமாக மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளோம். இதேநேரம் வேறு இடங்களிலும் ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுள்ளோம். இது எங்களது கட்சிக்குத் தோல்வி என்பதை ஒப்புக்கொள்கின்றோம். இதில் மிக விசேடமாக யாழ்ப்பாணம் ஒரேயொரு ஆசனத்தைப் பெற்றிருக்கின்றோம்.

என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட ரீதியிலும், கடந்த 14 வருடங்கள்  நாடாளுமன்றத்திலும் சேவை செய்த நான் இந்த முறை மக்களால் தெரிவு செய்யப்படவில்லை. மக்களுடைய தெரிவை நான் மதிக்கின்றேன், ஏற்றுக்கொள்கின்றேன். இத்தனை காலமாக  எனக்கு எல்லா விதங்களிலும் உறுதுணையாக உதவி செய்து வந்த அனைவருக்கும் எனது நன்றியைத்  தெரிவித்துக்கொள்கின்றேன். எங்களுடைய சேவை வடக்கு – கிழக்கு மட்டுமல்லாது முழு நாட்டுக்கும் தொடர்ந்து இருக்கும். மிகவும் பொறுப்புணர்வோடு நாங்கள் எங்கள் பயணத்தை மக்களோடு சேர்ந்து முன்னெடுப்போம் என்ற வாக்குறுதியை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

புதிய அரசமைப்பு வரைவில் நானும் ஜயம்பதி விக்கிரமரட்னவும்  முக்கிய பங்காற்றியிருக்கின்றோம். ஆனால், அவரும் நானும் இந்த நாடாளுமன்றத்தில் இல்லை. ஆனால், அவரும் நானும் இலங்கையில்தான் இருக்கின்றோம். ஆகவே, எந்தவிதமான பங்களிப்பு தேவைப்பட்டாலும் அப்படி தேவைப்படுகின்ற பங்களிப்பை நிச்சயமாக கொடுத்து உதவுவோம்.

தமிழரசுக் கட்சிக்கான தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் தமிழரசின் மத்திய செயற்குழு கூடி முடிவு எடுக்கப்படும். அவ்வாறான சகல முடிவுகளும் எப்போதும் கட்சி முடிவாகவே எடுக்கப்படும். ஆகவே, கட்சி என்ன தீர்மானம் எடுக்கும் என்று நான் முன்கூட்டியே சொல்லல முடியாது.

எங்களது கட்சியைப் பொறுத்த வரையில் கட்சியின் முடிவே இறுதியாக இருக்கும். நான் கட்சியின் சகல முடிவுகளுக்கும் கட்டுப்பட்டவனாக இருப்பேன். ஆனால், தேசியப் பட்டியல் ஆசன விடயத்தில் நான் என்னுடைய நிலைப்பாட்டைத் தெளிவாக ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

அதாவது மக்கள் முன்பாக வந்து தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நான் தெரிவு செய்யப்படாத சூழலில் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் செல்வதை விரும்பவில்லை என்பதைத் தெளிவாகவே சொல்லியுள்ளேன். ஆனாலும், என்னுடைய அரசியல் செயற்பாடு தொடர்ந்தும் இருக்கும்.

சிறீதரன் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கின்றார். அதிகளவான விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளார். அவர் உட்பட தமிழரசுக் கட்சியில் இம்முறை  வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.” – என்றார்.

By admin