• Sat. Oct 26th, 2024

24×7 Live News

Apdin News

தமிழரின் தீர்வு சார் நிலைப்பாட்டுக்கு எதிராக

Byadmin

Oct 26, 2024


வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக தாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அக்கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் உறுதியளித்தார்.

வடக்கு மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது தமிழ் மக்கள் விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசின் போக்கு தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அவர், இந்த அரசு தேசிய மக்கள் சக்தியாக அடையாளப்படுத்தப்படினும், அரசியல் ரீதியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான சகல அதிகாரங்களும் மக்கள் விடுதலை முன்னணி வசமே இருக்கின்றன என்று சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தம் மற்றும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்தை மேற்கோள்காட்டிய கஜேந்திரகுமார், இவ்வாறானதொரு பின்னணியில் இந்த அரசிடம் இருந்து முன்னேற்றகரமான நகர்வுகளை எதிர்பார்க்க முடியும் எனத் தாம் கருதவில்லை என்றும் குறிப்பிட்டார் .

அதேபோன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய அமெரிக்கத் தூதுவரின் கேள்விக்குக் கஜேந்திரகுமார் பதிலளிக்கையில், “ஏற்கனவே நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கில் பதிவான மாற்றம், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பதிவாகும். இருப்பினும் அந்த மாற்றம் தேசிய மக்கள் சக்திக்குச் சாதகமானதாக இருக்காது. மாறாக எமக்குச் சாதகமான, எம்மை நோக்கிய மாற்றமாகவே இருக்கும்.” – என்று சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, “கடந்த காலங்களைப் போலன்றி, நாம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானதில் இருந்து சகல தமிழ்த் தேசிய கட்சிகளும் ‘தேசியம்’ என்ற கொள்கையையும், முழுமையான சமஷ்டி தீர்வையும் முன்னிறுத்தி செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. எனவே, நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஒற்றையாட்சி மற்றும் அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தம் என்பவற்றைப் புறக்கணித்து, முழுமையான சமஷ்டி தீர்வை சகலரும் வலியுறுத்தும் சாத்தியம் உருவாகும்.” – என்றும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி இவ்வாறானதொரு சூழ்நிலை தோற்றம் பெறும் பட்சத்தில், அந்தக் கொள்கை மாற்றத்தை அமெரிக்கா அதன் கொள்கையில் உள்வாங்க வேண்டும் எனவும், அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் எனவும் அமெரிக்கத் தூதுவரிடம் கஜேந்திரகுமார் கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், எதிர்வரும் தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாகத் தாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் என்றும் உறுதியளித்தார்.

By admin