பட மூலாதாரம், PMD SRI LANKA
சுதந்திர இலங்கை அரசியல் வரலாற்றில் மாறி மாறி அதிகாரத்தில் இருந்த ஆட்சியாளர்களை பின்தள்ளி, புதிய ஆட்சியொன்று நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டு நேற்றுடன் ( செப்டெம்பர் 21) ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி ஜனாதிபதியாக கடந்த ஆண்டு பதவியேற்றார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரிந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி பீடம் ஏறிய நிலையில், புதிய கட்சியாக முதல் தடவையாக தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏறியுள்ளது.
ஊழல், மோசடி, வீண்விரயம் ஆகியவற்றை இல்லாதொழித்து, நாட்டின் பின்னடைவுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற உறுதி மொழியை வழங்கியே தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏறியது.
இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகள் எந்தளவு இந்த ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பதே இந்த கட்டுரையாகும்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கியமை
பட மூலாதாரம், UNP MEDIA
”வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய மக்கள் சக்தி தனது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டு கடந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகள், இந்த அரசாங்கத்தின் ஒரு வருட ஆட்சிக்குள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் வாக்குறுதியாக காணப்பட்ட இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அதிகாரப்பூர்வ வீடுகள், ஓய்வூதியம் போன்ற சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட புதிய சட்டமூலத்திற்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்ததன் அடிப்படையில், இந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.
ஊழல், மோசடி புகார்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ஊழல், மோசடி, வீண்விரயங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அரச நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ரணில் அதிபராக இருந்த போது தனது அமெரிக்காவிற்கான அதிகாரப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்து, அங்கிருந்து லண்டன் நோக்கி பயணித்தார். தனது மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துக்கொண்டமையின் ஊடாக அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடாத்தியிருந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார்.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமன்றி, முன்னாள் அமைச்சர்களாக மஹிந்தானந்த அளுத்கமகே, ராஜித்த சேனாரத்ன, ஷஷிந்திர ராஜபக்ஸ உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அது தவிர, ஊழல், மோசடி, வீண்விரயம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
போதைப்பொருளை ஒழித்தல்
பட மூலாதாரம், PMD SRI LANKA
இலங்கையில் போதைப்பொருளை ஒழிக்கும் திட்டம் தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போதைப்பொருட்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், மறைத்து வைக்கப்பட்டு போதைப்பொருட்கள் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் தலைமறைவாகி, இலங்கைக்குள் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்து வந்த நிழலுலக தலைவர்கள் என கருதப்படும் பிரதான சந்தேகநபர்கள் அண்மையில் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு, நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இதனூடாக நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் ரசாயண பொருட்கள் மீட்கப்பட்டன.
நிறைவேற்று அதிகாரத்தை நீக்குதல்
இலங்கை ஜனாதிபதிகள் வசம் காணப்படும் நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் உறுதிமொழியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது தேர்தல் கொள்கை பிரகடனத்தில் பிரதான உறுதிமொழியாக முன்வைத்திருந்தது.
எனினும், அந்த உறுதிமொழியை இதுவரை நிறைவேற்ற தவறியுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வருகின்றது.
ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை அடையாளம் காணுதல்
இலங்கையில் 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதி வழங்கியிருந்தது.
எனினும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முழுமையாக விசாரணைகள் முடிவடையாத நிலையில், அந்த உறுதிமொழியும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குதல்
பட மூலாதாரம், PMD SRI LANKA
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு தமிழர்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் கோரிக்கையானது, தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் பிரதான உறுதிமொழியாக காணப்பட்டது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு சட்டத்தை கொண்டு வரும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அறிவித்திருந்த போதிலும், கடந்த ஒரு வருட காலத்தில் அந்த உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை.
பிரதான உறுதிமொழிகள் உள்ளடங்கலாக மேலும் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழர்களின் காணி விடுவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் யுத்த காலத்தில் பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதிமொழி வழங்கியிருந்தது.
எனினும், அந்த உறுதிமொழியும் இதுவரை முழுமை பெறாதுள்ளது.
சில பகுதிகளில் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும், முழுமையாக காணிகள் இன்று வரை விடுவிக்கப்படவில்லை.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை
யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டு, இன்று வரை எந்தவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில், அவர்களின் விடுதலைக்கான தொடர்ந்தும் தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுத் தரப்படும் என்ற உறுதிமொழி தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட போதிலும், அது தொடர்பிலான இறுதி முடிவு இன்று வரை எட்டப்படாதுள்ளமையை காண முடிகின்றது.
பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் தமிழ் மக்களை மலையக தமிழர்கள் என ஏற்றுக்கொள்ளும் உறுதிமொழியும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
அத்துடன், லயின் அறைகளில் வசிக்கும் மலையக தமிழர்களுக்கு நிரந்தர வீடொன்றை கட்டிக்கொள்வதற்கான காணிகள் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை.
இவ்வாறு தேர்தல் மேடைகளிலும், கொள்கை பிரகடனத்திலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் முழுமையாக ஒரு வருட காலத்திற்கு நிறைவேற்றப்படவில்லை. எனினும், தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட சில உறுதிமொழிகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
வடக்கு கிழக்கு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதா?
வடகிழக்கு மாகாணங்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக பிரிக்கும் வகையில் தற்போதைய ஆளும் கட்சியாக இருக்கும் மக்கள் விடுதலை முன்னணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு 2006ம் ஆண்டு வழங்கப்பட்டது.
இதன்படி, வடகிழக்கு மாகாணம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், ஈழத் தமிழர் பிரச்னைக்கு இந்த அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிடைத்திருக்கின்றதா? என்ற கேள்வி அனைவரது மனங்களிலும் எழுகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பெருமளவான நம்பிக்கை வைத்து, வரலாற்றில் என்றுமே இல்லாதளவு வாக்குகளை கடந்த முறை வழங்கியிருந்தனர்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ் கட்சிகளுக்கு அதுவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்த அங்கீகாரம் இல்லாது செய்து, தேசிய மக்கள் சக்தி பாரிய வாக்கு வங்கியை அந்த மாகாணங்களில் பெற்றிருந்தது.
பட மூலாதாரம், PARAMESWARAN WIKNESHWARAN
தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய வாக்குகள், இன்று தமிழர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா?
இந்த விடயம் தொடர்பில் மூத்த செய்தியாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரன், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
”பொதுவாக இலங்கை மக்களுக்கு என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அது சிங்களமாக இருக்கலாம், தமிழர்களாக இருக்கலாம். இவர்களிடம் பொதுவான ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஊழல், மோசடிகளை இல்லாது செய்வோம். போதைப்பொருட்களை இல்லாது செய்வோம்.”
இந்த மாதிரியான சில பொதுவான கோரிக்கைகள் வெளிவந்தன. இந்த விடயங்களில் இந்த அரசாங்கம் ஓரளவு முன்னோக்கி செல்வதாக தெரிகின்றது. ஆனால், தமிழர்களின் கோரிக்கை என்று பார்த்தால், ஈழத் தமிழர் பிரச்னையாக இருக்கலாம். அரசியல்தீர்வு விடயமாக இருக்கலாம். கடந்த கால குற்றச்சாட்டுக்கள் மீதான தீர்வாக இருக்கலாம். இந்த மாதிரியாக விடயங்களில் இந்த அரசாங்கம் ஒரு அடியேனும் முன்நோக்கி வைத்ததாக தெரியவில்லை.” என்றார்.
வெளிப்படையாக தெரியவில்லை. அரசியல் தீர்வு, போர் குற்றச்சாட்டுக்கள், காணாமல் போனோர் விடயங்கள், வடக்கு கிழக்கு பொருளாதாரம், மலையக தமிழ் மக்களின் சம்பள பிரச்னையாக இருக்கலாம். இந்த விடயங்களில் இந்த அரசாங்கம் நழுவி செல்லும் போக்கை கடைபிடித்து செல்வது தெட்ட தெளிவாகவே தெரிகின்றது.
கடந்த அரசாங்கங்கள் செய்த அதேவேலைத்திட்டங்களை இந்த அரசாங்கம் தொடர்வதாக கூட இருக்கலாம். அரசாங்கத்தினால் வெளியிடப்படுகின்ற அறிவிப்புக்களின் தமிழர்களின் பிரச்னைக்கான தீர்வு இல்லை என்பதே உண்மை.” என மூத்த செய்தியாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.
எதிர்கட்சிகள் ஒன்றிணைவு
பட மூலாதாரம், UNP MEDIA
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு அடுத்த நொடியே, பிரதான எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளதை அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் ஒன்றிணைந்து ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர்.
அத்துடன், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிளவுப்பட்டு, தற்போது பிரதான எதிர்கட்சியாக விளங்குகின்ற ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ஏனைய கட்சிகளும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக குரல் வழங்க முன்வைத்திருந்தனர்.
ரணில் விக்ரமசிங்கவின் விடுதலை மற்றும் அரசாங்கத்திற்கு செயற்பாடுகளுக்கு எதிராகவே தாம் ஒன்றிணைந்ததாக கூறிய பிரதான எதிர்கட்சிகள், இன்று ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த சம்மேளனத்தில் என்றும் இல்லாதவாறு இம்முறை பிரதான எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரு மேடையில் ஒன்று கூடியிருந்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் அனைத்தும் ஒரு மேடையில் அமர்ந்து, அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
அரசாங்கத்தின் பதில் – பிமல் ரத்நாயக்க என்ன கூறுகின்றார்?
பட மூலாதாரம், FB/BIMAL RATHNAYAKE
ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடமாகியுள்ள போதிலும், தொடர்ச்சியாக தேர்தல்கள் நடத்தப்பட்டமையினால் தமக்கு வேலைகளை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு இடமளிக்கவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.
எனினும், உள்ளுராட்சி சபைத்தேர்தல் முடிவடைந்த பின்னரே தாம் வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
”இந்த நாட்டு மக்கள் 76 வருடங்கள் சென்ற பாதையை ஒரு புறம் வைத்து விட்டு, புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்தனர். 2024ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி புதிய பாதையில் செல்ல ஆரம்பித்தனர்.
அநுர சகோதரர் ஜனாதிபதியாகி ஒரு வருடம் ஆகியுள்ளது. உண்மையில் நாம் வேலை செய்ய ஆரம்பித்தது மே மாதம் 6ம் தேதிக்கு பின்னர். மே 6ம் தேதியே எமது உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவாகினார்கள். அதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சில வேலைகளை எமக்கு செய்ய இடமளிக்கவில்லை.
தேர்தல் நடாத்தப்படும் காலப் பகுதியில் எம்மால் அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாது. மே 6ம் தேதிக்கு பின்னரே நாங்கள் வேலை செய்ய ஆரம்பித்துள்ளோம்.” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகின்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு