• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

தமிழர்களுக்குத் தீர்வு தர அநுர தயாரில்லை! – யாழில் சுமந்திரன் சாட்டையடி

Byadmin

Nov 14, 2024


“மாற்றம் மாற்றம் என்று மாறி மாறி வலியுறுத்தும் ஜனாதிபதி அநுர, தமிழர்களுக்கு தேசிய இனப்பிரச்சினையைக்  கொஞ்சமும் கணக்கில் எடுக்கவில்லை. இதுதான் உண்மை.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இறுதிக் கட்டத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தனக்கு ஆதரவு கோரி ஜனாதிபதி அநுர எம்முடன் பேச்சு நடத்தியிருந்தபோது, தெற்கில் மாற்றம் வரவுள்ளது. இரண்டரை வருடங்களாக மக்கள் இந்த மாற்றத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அதில் நீங்கள் பங்காளிகளாக இருக்கப்போவதில்லையா? என்று எம்மிடம் வினவியிருந்தார். அதற்கு தெற்கில் வரவுள்ள மாற்றங்கள் நல்லவை என்றும், கேடான அரசியல் கலாசாரம், ஊழல் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கை என அனைத்துக்கும் எதிராக நாம் இணைந்து செயற்படுவோம் என்று அவரிடம் தெரிவித்திருந்தேன்.

ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்தில் நேற்று (நேற்றுமுன்தினம்) பரப்புரைக்காக வருகின்றார் என்றபோது, நான் அவரிடம் இரண்டரை வருடங்களாக தெற்கில் இருந்த மாற்றத்துக்கான காத்திருப்பில் பங்காளியாக வேண்டும் என்று எம்மிடக் கோரியிருந்தீர்கள். ஆனால், எழுபத்தைந்து ஆண்டுகளாக எங்கள் மக்கள் மாற்றத்துக்காக ஏங்குகின்றனர். இந்த மாற்றத்துக்கான ஏக்கத்தில் நீங்கள் பங்காளியாக இருப்பீர்களா? இல்லையா? இதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவரிடம் தெரிவித்திருந்தேன். ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் உரையாற்றும்போது இது தொடர்பில் மூச்சுக்கூட விடவில்லை. சமஷ்டி தொடர்பில் கதைப்பதற்கே அவர் தயாரில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டமாக இருக்கலாம், பார் பெமிட்கள் வழங்கப்பட்டவர்களின் விவரங்களை வெளிப்படுத்துவதாக இருக்கலாம் ஆட்சிப்பீடம் ஏறிய வெறும் ஒரு மாதத்துக்குள் தேசிய மக்கள் சக்தியினர் சொல்வது ஒன்றாக, செய்வது வேறொன்றாக இருக்கின்றனர். இது ஆபத்தானது.

நான் தேசிய மக்கள் சக்தியினர் தொடர்பில் இவ்வளவு நேரம் எதற்காகக் கதைக்கின்றேன் என்று உங்களில் பலர் கேட்கலாம். ஏனெனில், யாழ்ப்பாணம் மக்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கின்றது. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அந்தக் கட்சியைச் சேர்ந்தவருக்கு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஓர் ஆசனத்தையேனும் வழங்கிவிடுவார்கள். அது தியாகராஜா மகேஸ்வரனாக இருக்கலாம், விஜயகலா மகேஸ்வரனாக இருக்கலாம், அங்கயன் இராமநாதனாக இருக்கலாம், அல்லது எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சராக இருக்கின்ற டக்ளஸாக இருக்கலாம். இது மிகக் கெட்ட பழக்கம். சிந்திக்காத நடவடிக்கை.

இதேவேளை, தாங்கள்தான்  தேசியவாதிகள் என்று தையிட்டியில் விகாரை  கட்டி முடியும் வரை காத்திருந்து திறப்பு விழாவின் பின்பு அங்கே குந்தியிருப்போர் தேசியத்தைக் காக்க செயற்படுவதனைவிட நாங்கள்  அதிகமாகவே மேற்கொள்கின்றோம். ஆனால், நாங்கள் கூவித் திரிவதில்லை. நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றபோது அவற்றைக்கூற வேண்டியுள்ளது. உதாரணமாக கடந்த மாவீரர் தினத்துக்கு அண்மையாக கிளிநொச்சியிலே 7 பொலிஸ் நிலைய அதிகாரிகள் மாவீரர் தினத்தைத் தடை செய்யுமாறு மனு தாக்கல் செய்த போது அங்கிருந்த சட்டத்தரணி எனக்குத் தகவல் வழங்கினார். நான் வடமராட்சி கிழக்கில் இருந்து உடன் ஓடிச் சென்று நீதிமன்றத்தில் வாதாடி  அந்தத் தடை கோரல் மனுவை உடைத்தேன். அதனால் அந்த மாவீரர் தின நிகழ்வு தடையின்றி இடம்பெற்றது. அது இவர்களால் முடியவில்லை.” – என்றார்.

By admin