• Fri. Mar 21st, 2025

24×7 Live News

Apdin News

தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள்! – ரணில் பேட்டி

Byadmin

Mar 21, 2025


“நான் இலங்கையைச் சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதை  எப்போதும் எதிர்த்து வந்துள்ளேன். எனினும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உள்ளகப் பொறிமுறையின் கீழ் நீதியை நிலைநாட்டுங்கள். யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள். மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குங்கள். முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள்  ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன் இணைந்து செயற்படுவது சுலபமானதாகக் காணப்பட்டது. அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பேட்டியொன்றில் இதனைக் குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையை சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதை நான் எப்போதும் எதிர்த்து வந்துள்ளேன். நான் என்ன தெரிவித்து வருகின்றேன் என்றால் சொன்னதைச் செய்யுங்கள். ஐ.நாவுக்கு இலங்கை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். உள்ளகப் பொறிமுறையின் கீழ்  தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள். இதனைச் செய்யக்கூடாது, செய்யவேண்டாம் என நான் ஒருபோதும் தெரிவித்ததில்லை. இதன் காரணமாகவே நான் தேர்தல்களில் தோற்றேன்.

நான் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டினார்கள். அது முடிவடைந்ததும் ராஜபக்ஷக்களுக்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டினார்கள்.

அதனை விடுவோம். ஆனால், நான் மேற்குலகில் சமீபத்தில் பார்த்தது என்னவென்றால் இரண்டு விதமான நிலைப்பாடுகள்.

உக்ரைன் தொடர்பில் இரட்டை நிலைப்பாடுகளைப் பின்பற்றுகின்றனர்.

ஆனால், உக்ரைனுக்கு வழங்குகின்ற சாதக தன்மையை மேற்குலகம் எங்களுக்கு வழங்காது. எனினும், உக்ரைன் ஜனாதிபதிக்கு அனைத்தையும் மாற்றுவதற்கான அனுமதியை அவர்கள் வழங்குகின்றார்கள்.

இதன் காரணமாகவே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஜெலென்ஸ்கியைப்  பார்த்து நீங்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவில்லை என்றார்.

அவர்களால் ஜனாதிபதி ட்ரம்பின் மீது பாய முடியுமென்றால்  எங்களின் நிலைமை  என்ன?

ஆகவே, எங்களால் என்ன செய்ய முடியுமென்றால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே.

அவர்களுடன் பேசுங்கள்  மாகாண சபைகளுக்கு மேலதிக பொறுப்புக்களை வழங்குங்கள்.

குற்றவாளிகள் யார் என்றாலும் தண்டியுங்கள். நான் பல நடவடிக்கைகளை ஆரம்பித்தேன்.

ஆனால், ஐக்கிய நாடுகள் மனிதகள் உரிமை பேரவை இரட்டை நிலைப்பாடுகளைப் பின்பற்ற விரும்பினால் இலங்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அது அமைந்திருக்கக் கூடாது.

நான் எவருக்கும்  எதிரானவன் அல்லன். ஐ.நா. மனித உரிமைகள்  ஆணையாளர் அலுவலகத்தின் ஆசியக் கிளையின் செயற்பாடுகள் குறித்து விசாரணை இடம்பெற்றால் நாங்கள் தொடர்ந்தும் நீடிக்கலாம்.

முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன் செயற்படுவது சுலபமாக இருந்தது. அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார். அவர் எங்களது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார். அவருடன் பேச முடியும்.

ஆனால், தற்போதுள்ளவர்கள் எங்களை நோக்கிச்  சத்தமிடுகின்றனர். எங்களால்தான் அவர்கள் அங்கிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

நாங்களே இரண்டாம் உலக யுத்தத்தில் போரிட்டோம். நாங்களே ஐரோப்பாவை விடுதலை செய்தோம்.

எத்தனை ஐரோப்பியர்கள் ஹிட்லருக்கு எதிராகப் போரிட்டார்கள். இரண்டரை மில்லியன் இந்தியர்கள் போரிட்டார்கள். இலங்கையர்கள் போரிட்டார்கள். ஆபிரிக்கர்கள் போரிட்டனர்.

நாங்கள் போரிட்டு ஹிட்லரைத் தோற்கடித்திருக்காவிட்டால் உங்களால் மனித உரிமை சாசனம் ஒன்றை உருவாக்க முடியாமல் போயிருக்கும்.” – என்றார்.

By admin