(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடரை வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் முதல் கட்டுரை.)
”தொழிலுக்கு அடிப்படை மின்சாரம். காற்றாலை மின்சாரமே, சூழலுக்கும் உகந்தது, செலவு குறைவானது. அந்த வகையில் காற்றாலை மின்சார உற்பத்தி தமிழக தொழில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறது. அதில் தமிழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வந்தவர் கஸ்துாரி ரங்கையன். அதனால்தான் அவர் காற்றாலை மனிதர்!”
இப்படி அறிமுகம் தருகிறார், ‘கோவைக்கும் தொழில் என்று பேர்’ நுாலாசிரியர் சி.ஆர்.இளங்கோவன். கோவை குறித்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 10 நுால்களை இவர் எழுதியுள்ளார்.
காற்றாலை மின் உற்பத்தியில் மட்டுமின்றி, வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் கோவை இன்றைக்கு முன்னிலையில் இருப்பதற்கு முன்னோடியாக இந்த தொழிலைத் துவக்கி வைத்தவர் கஸ்துாரி ரங்கையன் என்கிறார் கோவையின் மூத்த தொழிலதிபரான ஏ.வி. என்கிற ஏ.வரதராஜன்.
”எனது முன்னோடி முனைவர் கஸ்தூரி ரங்கையனின் மகத்தான பங்களிப்பை ஒப்புக்கொள்வதன் மூலம் எனது பணியைத் துவங்குவதே பொருத்தமானது. 29 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய காற்றாலை சங்கம் (IWPA) தொடங்கப்பட்டதிலிருந்து, அவர்தான் இவ்வமைப்பிற்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஒருமித்த குரலாகவும் இருந்து வருகிறார்.” என்று வின்ட்ப்ரோ (WINDPRO) சங்க இதழில் எழுதுகிறார் அதன் புதிய தலைவர் சிவராமன்.
கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று தனது 94வது பிறந்தநாளைக் கொண்டாடிய கஸ்துாரி ரங்கையன், இந்திய காற்றாலை சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இப்போதும் உலக காற்றாலை சங்கத்தின் துணைத்தலைவராக அவர் இருந்து வருகிறார்.
இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டுமே, காற்றாலை மின் உற்பத்தி செய்வதற்கேற்ற இயற்கை அமைப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு வரையிலும் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகமே முதலிடத்தில் இருந்தது. பல ஆண்டுகளாக இருந்த முதலிடத்தை, தற்போது குஜராத்திடம் இழந்துள்ளது.
ஓய்வு வயதுக்குப் பின்பே காற்றாலை மின் உற்பத்தியில் கால் பதித்தவர்!
இப்போது தமிழகம் 12 ஆயிரம் மெகா வாட் அளவுக்கு காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலையில், குஜராத் 13 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்கிறது. தமிழகம் இதில் முன்னிலையை எட்டுவதற்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக அடித்தளமிட்டவர் கஸ்துாரி ரங்கையன்.
தமிழ்நாடு மின் வாரியம் காற்றாலை நிறுவும் முயற்சியில் தோல்வியடைந்த பின், தனியாருக்கு அழைப்பு விடுத்தபோது, அதற்கான முதல் முயற்சியைச் செய்து அதில் மாபெரும் வெற்றியை ஈட்டியவர் என்று தொழில் அமைப்பினர், காற்றாலை சங்கத்தினர் பலரும் ஒன்றாக கைகாட்டுவது கஸ்துாரி ரங்கையனைத்தான்.
கஸ்துாரி ரங்கையன் (வயது 94), கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவருடைய தந்தை குப்புசாமி நாயுடு, சிக்கதாசம்பாளையத்தின் மணியக்காரராக இருந்தவர். கஸ்துாரி ரங்கையனுடன் உடன் பிறந்தவர்கள் 6 பேர். இவருக்கு 12 வயதாகும்போதே தந்தை இறந்துவிட்டார். அவரின் தாயார் ரங்கநாயகிதான், எல்லோரையும் படிக்க வைத்துள்ளார்.
மேட்டுப்பாளையம் மகாஜன அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்வழிக்கல்வியில் படித்த கஸ்துாரி ரங்கையன், பி.எஸ்.ஜி. கலைக்கல்லுாரியில் இன்டர்மீடியட் படித்துள்ளார்.
கோவையில் 1951 ஆம் ஆண்டில், பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லுாரி முதல் முறை துவக்கப்பட்டபோது, அதன் முதல் பேட்ஜ் மாணவராக சேர்ந்து பி.இ. (மெக்கானிக்கல்) முடித்து 1995 ஆம் ஆண்டில் மெட்ராஸ் பல்கலையில் பட்டம் வாங்கியுள்ளார். அதன்பின் கோயம்புத்துார் தொழில்நுட்பக் கல்லுாரியில் (சிஐடி) 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராகவும், 5 ஆண்டுகள் சிஐடி சாண்ட்விச் பாலிடெக்னிக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தொழில் துவங்கும் கனவுடனே இருந்த கஸ்துாரி ரங்கையன், வாகன உதிரி பாகங்களுக்குத் தேவையான வார்ப்படத் தொழிற்சாலையை (foundaries) துவக்கினார். தரமான தயாரிப்பில் அதிக கவனம் செலுத்திய அவர், 1975 ஆம் ஆண்டிலேயே தனது நிறுவனத்தின் வார்ப்புகளுக்கு ISI (இந்திய தரநிலை நிறுவனம்) சான்றிதழ் பெற்றார். வார்ப்புகளுக்கான தரச்சான்றைப் பெற்ற முதல் நிறுவனம் இவருடையதே.
அந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை பிபிசி தமிழிடம் விளக்கினார் கஸ்துாரி ரங்கையன்.
”லுாதியானாவிலிருந்துதான் அப்போது இரும்பு வார்ப்படம் வந்து கொண்டிருந்தது. அதைவிட தரமாகச் செய்வோம் என்று கொல்கத்தாவில் மூலப்பொருள் வாங்கிச் செய்தேன். அதை விற்றுக் கொடுக்க முன் வந்தவர், ஒரு கட்டத்தில் பின் வாங்கிவிட்டார். அதனால் நானே ஊர் ஊராகச் சென்று இரும்பு விற்றேன். 15 நாட்கள் உற்பத்தி செய்வேன். அடுத்த 15 நாட்கள் மார்க்கெட்டிங் செய்வேன்.” என்று நினைவுகூர்ந்தார்.
மேலும் தொடர்ந்த கஸ்துாரி ரங்கையன், ”மதுரை டிவிஎஸ் நிறுவன முதலாளி, என்னுடைய வேலையைப் பார்த்து, ஃபியட் கார் அண்டர்சேஸ் செய்யும் ஆர்டர் கொடுத்தார். அப்போது மதுரைக்கு நானே காரை ஓட்டிக் கொண்டு போவேன். அதன்பின் எல்லா நிறுவனங்களும் ஆர்டர் கொடுத்தன. ஒரு கட்டத்தில் இங்கிருந்து தில்லி வழியாக லுாதியானாவுக்கு வார்ப்படம் அனுப்பும் நிலையை உருவாக்கினோம்.” என்கிறார்.
காற்றில் மின்சாரமா? கடன் கொடுக்க மறுத்த வங்கிகள்!
வார்ப்படம், வாகன உதிரி பாகங்கள் என பல்வேறு தொழில்களிலும் ஒரு தொழில் முனைவோராக வெற்றி பெற்ற பின்னர், ஓய்வு வயதில்தான் கஸ்துாரி ரங்கையனின் வெற்றிகரமான இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமானது என்கிறார் இந்திய காற்றாலை சங்கத்தின் செகரட்டரி ஜெனரலாகவுள்ள மோகன்குமார்.
”தொலைநோக்கு என்றால் அது கஸ்துாரி ரங்கையன்தான். அவரால் 1996 ஆம் ஆண்டில் 21 உறுப்பினர்களுடன் நிறுவப்பட்ட இந்திய காற்றாலை சங்கம், இப்போது 7 மாநிலக்குழுக்களுடன் 1600க்கும் அதிகமான உறுப்பினர்களுடன் 32 GW திறனுடன் நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றல் உற்பத்தியில் 60 சதவீதம் பங்களிக்கிறது என்றால், இந்த வளர்ச்சிப்பாதைக்கு அடித்தளமித்தட்டவர் அவர்தான்.” என்கிறார் அவர்.
காற்றாலை உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கக் காரணம், நமக்கு அமைந்துள்ள இயற்கை அமைப்புதான் என்கிறார் கஸ்துாரி ரங்கையன். அதிலும் குறிப்பாக கோவைக்கு மேற்குத் தொடர்ச்சி மலையும், பாலக்காடு கணவாய்க் காற்றும் இயற்கை தந்த மாபெரும் வரம் என்று விளக்கும் அவர், அந்த கணவாய்க் காற்றின் மீதான நம்பிக்கையில்தான் இதில் பாதம் பதித்ததாகச் சொல்கிறார்.
”தொழில் துவங்கிய பின், மின்சாரச்செலவு மிக அதிகமானது. பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போதுதான் ஒரு மின்வாரிய அதிகாரி, கோவை தொழில் வர்த்தகசபைக்கு வந்து பேசும்போது, ‘காற்றில் மின்சாரம் எடுக்கலாம், அதற்கு முதலீடு செய்ய தொழில்முனைவோர் முன்வர வேண்டும்’ என்றார்.
அந்த முயற்சியை முதலில் நான் செய்கிறேன் என்று கூறினேன். ஆனால் 1993 ஆம் ஆண்டிலேயே ஒரு காற்றாலை நிறுவுவதற்கு 80 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. வங்கியில் கடன் கேட்டேன். காற்றிலே மின்சாரம் எடுக்கிறீர்களா, நம்ப முடியாது என்று கடன் தர மறுத்துவிட்டார்கள்.” என்று விளக்கிய கஸ்துாரி ரங்கையன் மேலும் தொடர்ந்தார்.
”அதன்பின் மத்திய அரசின் நிறுவனமான ‘இரடா’விடம் (IREDA-The Indian Renewable Energy Development Agency) கேளுங்கள் என்றார்கள். அங்கே பக்தவத்சலம் என்ற தமிழர் இருந்தார். அவர் கோவை பிஎஸ்ஜி தொழில் நுட்பக் கல்லுாரியில் எனக்கு ஜூனியர். அவரிடம் ஒரு காற்றாலை நிறுவக் கடன் கேட்டேன். அவர் 4 காற்றாலை போடச்சொன்னார். துணிவுடன் அப்போதே மூன்றே முக்கால் கோடி ரூபாய் கடன் வாங்கினேன். அதை நிறுவ சூலுார் விமான நிலையத்திற்கு மேற்கில் இடையர்பாளையத்தில் 70 ஏக்கர் இடம் வாங்கினேன். ஆனால் அதை நிறுவுவதற்கு வழக்கு, போலீஸ் புகார் என்று பல இடையூறுகள் வந்தன.” என்கிறார் அவர்.
நீதிமன்ற உத்தரவு வாங்கி, காவல்துறை பாதுகாப்புடன் 250 கிலோ வாட் உள்ள 4 காற்றாலைகளை முதன் முதலில் நிறுவிய பின் 1994 மார்ச் 31 இரவு அது இயங்கத் துவங்கி, மின்சாரம் உற்பத்தி துவங்கியது என்கிறார் கஸ்துாரி ரங்கையன். அப்போது சென்னையிலுள்ள தேசிய காற்றாலை ஆராய்ச்சி மையத்தின் (National Institute of Wind Energy) விஞ்ஞானி அன்னமணி என்ற கேரள பெண்மணி, தமிழகத்தில் எங்கெங்கு காற்றாலை நிறுவ ஏற்ற இடம் என்பதை ஆராய்ச்சி செய்து அந்த இடங்களை பட்டியலாகக் கொடுத்ததும் தங்களுக்கு பெரும் உதவியாக இருந்ததை நினைவு கூர்கிறார் கஸ்துாரி ரங்கையன்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட காற்றாலை மின்சாரம்!
அதற்குப் பின்பே, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள், தொழில் முனைவோர் என பலரும் கோவை, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காற்றாலை நிறுவ முன் வந்ததாகச் சொல்கிறார். தமிழகத்தில் தற்போது 12 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு காற்றாலை மின் உற்பத்தி நடப்பதாகச் சொல்லும் கஸ்துாரி ரங்கையன், ”மார்ச் துவங்கி, நவம்பர் வரையிலான தென்மேற்குப் பருவக்காற்றில்தான் அதிகளவு காற்றாலை மின் உற்பத்தி நடக்கும்.” என்கிறார்.
அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகரித்து உச்சம் தொடும் என்பதை விளக்குகிறார். இந்த ஆண்டில் ஜூன் 13 அன்று 11.59 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, புதிய உச்சத்தை எட்டியதை அவர் சுட்டிக்காட்டினார்.
நவம்பருக்குப் பின் துவங்கும் வடகிழக்குப் பருவக்காற்றில் காற்று வலுவாக இருக்காது என்பதால் மின் உற்பத்தி குறைந்துவிடும் என்கிறார். சீசன் காலத்தில் மாலை 6 மணிக்குதான் காற்றின் வேகம் உச்சம் பெற்று மின் உற்பத்தி அதிகம் நடக்குமென்றும் விளக்குகிறார்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை மத்திய, மாநில அரசுகள் வாங்கும் நிலையில், தமிழகத்தில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரம், சொந்த தொழிற்சாலைகளுக்கே பயன்படுவதாகவும் அவர் விளக்கினார். முதல்வர் ஸ்டாலின் கூறிய பரவலான வளர்ச்சியை தமிழகம் எட்டுவதற்கு தமிழக அரசின் இந்த கொள்கையும் முக்கியக் காரணமென்றும் அவர் தெரிவித்தார்.
”உலக அளவில் டென்மார்க்தான் காற்றாலை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1970 களுக்கு முன்பே, காற்றாலை உற்பத்தி செய்வதற்கு இயந்திரங்களை டென்மார்க் இலவசமாக வழங்கியது. ஆனால் மின் வாரியம் நிறுவிய அந்த முயற்சி தோல்வியடைந்தது. 1994 ஆம் ஆண்டில் கஸ்துாரி ரங்கையன் காற்றாலையை நிறுவிய பின்பே வெற்றிகண்டது.
அன்றிலிருந்து இதுதொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, தொழில்நுட்ப குறைபாடுகளைச் சரி செய்து, காற்றின் வேகத்துக்கு ஏற்ப இயந்திரங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்ததில் அவரின் பங்களிப்பு மகத்தானது.” என்கிறார் சிஆர் இளங்கோவன்.
தற்போது 1.5 மெகா வாட் திறனுள்ள காற்றாலை நிறுவுவதற்கு ரூ.10 கோடியிலிருந்து ரூ.11 கோடி வரை செலவாகும் என்று கூறும் கஸ்துாரி ரங்கையன், அதனால் ஓராண்டில் 40 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்.
“வானிலை அறிக்கையில் தெரிவிப்பதுபோன்று, காற்றின் வேகத்தை வைத்து, தமிழகத்தின் அன்றைய காற்றாலை மின் உற்பத்தியைக் கணிக்கும் திறனுள்ளவர்” என்பது கஸ்துாரி ரங்கையன் குறித்து சிஆர் இளங்கோவன் கூறிய கருத்து. இது கஸ்துாரி ரங்கையனிடம் நேரில் பேசும்போது தெரியவந்தது. இந்த 94 வயதிலும் காற்றாலை குறித்து அவர் கூறும் தொழில்நுட்ப புள்ளி விபரங்கள், பிரமிக்க வைப்பதாகவுள்ளன.
இந்திய காற்றாலை சங்கத்தை கோவையில் கடந்த 1996 ஆம் ஆண்டில் துவக்கியதிலிருந்து 3 முறை, அதாவது 18 ஆண்டுகள் அதன் தலைவராக கஸ்துாரி ரங்கையன் இருந்துள்ளார். மற்ற ஆண்டுகளில் துணைத்தலைவராக இருந்துள்ள அவர், இப்போதும் உலக காற்றாலை சங்கத்தின் துணைத்தலைவராக இருக்கிறார்.
கொடிசியா எனப்படும் கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கத்தின் தலைவர், கொடிசியா மூலப்பொருட்கள் சங்கத்தின் தலைவர், இன்டெக் கண்காட்சித் தலைவர், கொடிசியா தொழிற்காட்சி வளாக இயக்குநர் என பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். தொழில் மற்றும் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளை கெளரவிக்கும் விதமாக இவருக்கு கற்பகம் பல்கலைக்கழகம் முனைவர் பட்டத்தை வழங்கியுள்ளது.
”இந்தியாவில் காற்றாலை உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வர முக்கியக் காரணம் அவர்தான். அதில் அவர் பேரறிவு படைத்தவர். இந்திய காற்றாலை சங்கத்தை நிறுவி, அரசிடம் பல விஷயங்களிலும் போராடிய போராளி அவர். சிறிதும் அச்சமறியாதவர்.
இப்போது கோவை வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. அந்தத் தொழிலைத் துவக்கியதிலும் அவர்தான் முன்னோடி. பல நாடுகளில் தமிழரின் பெருமையை நிலை நாட்டியவர்.” என்கிறார் ஏ.வரதராஜன்.
60 நாடுகளுக்கு ஏற்றுமதி: 500 பேருக்கு வேலை வாய்ப்பு!
கஸ்துாரி ரங்கையனின் மகன்கள் மூவரும் பொறியாளர்கள். மூத்தவர் பிரபு, அமெரிக்காவில் ஓட்டல்கள் நடத்தி வருகிறார். இரண்டாவது மகன் இளங்கோ, மூன்றாவது மகன் ரஜினிகாந்த் ஆகியோர், பிரேக் டிரம் உற்பத்தி நிறுவனம், காற்றாலைகள் போன்றவற்றை நிர்வகித்து வருகின்றனர். இந்த நிறுவனங்கள் எதற்குமே அரசிடம் மின்சாரம் பெறுவதில்லை. இந்த தொழிற்சாலைகள் அனைத்துக்கும் தேவையான மின்சாரம் முழுவதுமே காற்றாலை மின்சாரத்திலிருந்தே எடுக்கப்படுகிறது என கூறுகின்றனர்.
இவர் துவக்கிய வாகன உதிரி பாக நிறுவனத்தில் தற்போது 500 பேர் பணியாற்றுகின்றனர். இங்கு உற்பத்தியாகும் பிரேக் டிரம் அமெரிக்காவை தவிர்த்து 60 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்த நாடுகள் உட்பட உலகில் தான் செல்லாத நாடுகள் மிகக்குறைவு என்கிறார் கஸ்துாரி ரங்கையன். இவற்றில் பல நாடுகளில் காற்றாலை மின்சாரம் குறித்து உரை நிகழ்த்தியிருக்கிறார். தனது மனைவி நிர்மலா இல்லாமல் எந்த நாட்டுக்குமே சென்றதில்லை என்பதையும் குறிப்பிட்டுச் சொல்கிறார் அவர்.
”அப்பாவிடம் நாங்கள் தனித்துவமாகக் கருதுவது 3 விஷயங்கள். தொலைநோக்கு, விடாமுயற்சி, தீராத உழைப்பு. கடந்த ஆண்டில் 93 வயதிலும் தில்லியில் நடந்த காற்றாலை சங்கக் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றார். நாங்கள்தான் அவருக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று பொறுப்புகளிலிருந்து விடுபடச் சொன்னோம்.” என்கிறார் கஸ்துாரி ரங்கையனின் மகன் இளங்கோ.
மாசில்லா மின் உற்பத்திக்குப் பெரும் பங்காற்றும் கஸ்துாரி ரங்கையனின் இல்லத்திலும் சூரியமின் ஒளி மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அவரும் எலக்ட்ரிக் காரை மட்டுமே பயன்படுத்துகிறார். வீட்டிலுள்ள கழிவுகளைக் கொண்டு எரிவாயு உற்பத்தி செய்து வீட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. தோட்டத்தில் முழுக்க முழுக்க சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் முறையில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு, அதில் விளையும் காய்கறிகளே வீட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
தற்போது 94 வயதாகும் நிலையிலும் காற்றாலை குறித்த இணைய வழிக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசுகிறார் கஸ்துாரி ரங்கையன். ஏராளமான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குகிறார். தினமும் காலையில் முக்கால் மணி நேரம் யோகா செய்வதாகக் கூறும் அவர், இப்போதும் மாலையில் நடைபயிற்சி மேற்ொள்வதாக சொல்கிறார்.
”அசைவம் உண்பேன். ஆனால் பொரித்த உணவை சாப்பிடுவதில்லை. எல்லாக் கோவில்களுக்கும் செல்வேன். ஆனால் இஷ்ட தெய்வம் என்று எதுவுமில்லை. நேரு மிகவும் பிடித்த தலைவர். ஆனால் அரசியலில் ஆர்வமில்லை. தமிழ்வழிக்கல்வியில் அரசுப்பள்ளியில் படித்தவன் நான். பொறியியல் படித்து, தொழில் துவங்கி, பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கியதிலும், தமிழகத்தில் சிறுதொழில் வளர்ச்சிக்கு உதவும் காற்றாலை மின் உற்பத்தியைப் பெருக்கியதிலும் எனது பங்களிப்பை பெருமையாகக் கருதுகிறேன்.” என்கிறார் கஸ்துாரி ரங்கையன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.