0
இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையை வழிநடத்திச் செல்லும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பட்டாம்பூச்சி ‘எனும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ எனும் திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி , ‘தலைவாசல்’ விஜய், சாய் தீனா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். வட தமிழகத்தில் பெருன்பான்மையாக வாழும் வன்னிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த ‘காடுவெட்டி’ குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நிர்மல் சரவணனராஜ் – எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 19ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஏ பட்டாம்பூச்சிக்கு பட்டுத்துணி போட்டது போல..’ எனத் தொடங்கும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து எழுத, பின்னணி பாடகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி பிரகாஷ் குமார் மற்றும் பின்னணி பாடகி மதுஸ்ரீ ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். ‘ஏ வன்னி தமிழா வாய்யா..’ என்ற வரிகள் இடம் பிடித்திருப்பது இந்தப் பாடலுக்கு தனித்துவத்தை வழங்குகிறது. மேலும் திருமணமான இளம் தம்பதிகளின் காதல் நெருக்கத்தை பற்றி கிராமிய பின்னணியிலான தாள லய இசையில் உருவாகி இருக்கும் இந்தப் பாடல் கிராமப்புற ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.