திருவாரூரில் 1930-களில் பள்ளி மாணவனாக இருந்தபொழுதே கலைஞர் அவர்களின் தமிழ்ப்பணி தொடங்கியது. தமிழ்மொழியை காக்க வேண்டிய போராட்டக்களத்தில்தான் கலைஞரின் அரசியல் வாழ்வு அடித்தளமிடப்பட்டது.
இயல், இசை, நாடகம் மட்டுமில்லாமல் 92 அடையாளங்களால் தமிழை உருவகப்படுத்தினார். தமிழை மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியங்களையும், தமிழ் ஆளுமைகளையும் கொண்டாட தவறவில்லை. அவர் ஆட்சிப்பொறுப்பேற்ற பொழுது தமிழில் உறுதி மொழி எடுத்துக்கொண்டவர்.
சென்னையில் வள்ளுவருக்கு கோட்டம், குமரிமுனையில் வள்ளுவருக்கு சிலை, பூம்புகாரில் சிலப்பதிகார கலைக்கூடம், எனப் பல நினைவுச் சின்னங்களை இன்றைய தலைமுறைக்காக வடிவமைத்தார். தமிழுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தி நம் அன்னைத்தமிழுக்கு செம்மொழி தகுதி பெற்றுத்தந்து மொழிக்காவலர் ஆனார்.
பொது அரசியல் என்பதைத்தாண்டி மொழி அரசியல் மூலம் இந்த சமூகத்தை கட்டமைத்தவர் கலைஞர் என்றால் அது மிகையாகாது. அவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சிறப்பான திட்டங்கள் இதோ.
தமிழ் பாரம்பரியத்தை காக்க நடவடிக்கை
10-ம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயம் என்ற சட்டத்தை கலைஞர் நிறைவேற்றினார். இது தமிழ்நாட்டின் மொழியியல் மற்றும் கலாசார அடையாளத்தை வலுப்படுத்தியது. பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. மொழிப் புலமை, இலக்கியம் மீதான மதிப்பு, மற்றும் பாரம்பரியத்தை இந்த சட்டம் பாதுகாக்கிறது.
செம்மொழியாம் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் ‘செம்மொழி படிப்புக்கான மத்திய கல்வி நிறுவனத்தை சென்னையில் கலைஞர் தொடங்கினார். அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான மையமாக விளங்கி, தமிழின் வளமான மரபு பற்றிய ஆழமான புரிதலை வளர்க்கிறது.
மெய்நிகர் வகுப்புகள்
கலைஞர் ஆட்சியில் மெய்நிகர் வகுப்புகள் தொடங்கின. கம்ப்யூட்டர் புரட்சியால் தொலைதூர கல்வி சாத்தியமானது. ஏராளமான மென்பொருள் வல்லுநர்கள் உருவானார்கள்.
பிளஸ் 2-வில் கம்ப்யூட்டர் பாடம்
கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வளர்ச்சியை உணர்ந்து பிளஸ்-2 வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை அறிமுகப்ப
டுத்தினார். ஆண்டுக்கு ரூ.186 கோடி செலவில் ஒவ்வொரு ஆண்டும் 48 ஆயிரம் மாணவர்கள் இந்த படிப்பை முடித்து வருகிறார்கள்.
கணினி பயிற்சி வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கலைஞரை ஆதரித்து தீர்ப்பு வழங்கியது. அனைவருக்கும் சம வாய்ப்பையும் சமூக நீதியையும் வழங்கும் கல்வி முயற்சியாக இது போற்றப்பட்டது.
கல்வி வளர்ச்சி அடுத்த நிலையை எட்டும் வகையில் கலை அறிவியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, கால்நடை கல்லூரி போன்றவற்றிலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் கல்வியின் வளர்ச்சியை தரப்படுத்தினார். இதன் மூலம் ஆண்டுக்கு 60 ஆயிரம் மாணவர்கள் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பயின்று வருகிறார்கள்.
உலக செம்மொழி மாநாடு
தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டின் ஆழமான சாரத்தைக் கொண்டாட அறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் கலைஞர்களை ஒன்றிணைக்கும் வகையில், 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடந்தது. இலக்கியம், இசை, நடனம், கலை ஆகியவற்றில் தமிழ் பாரம்பரிய மரபுகளை வெளிப்படுத்தும் விவாதங்கள், விளக்கக்காட்சிகள் இடம்பெற்றது.
அரசு அலுவலகங்களில் கணினி தொழில்நுட்பம்
கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தியதில் கலைஞருக்கு பெரும் பங்கு உண்டு. பதிவுத்துறை, மோட்டார் வாகன பதிவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேகமாகவும் தவறில்லாமலும் பணிகள் நடப்பதற்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது.