3
தமிழ் ஒலிபரப்பு துறையில் ஒரு முன்னோடியாக இருந்த “ஆனந்தி அக்கா” பிபிசி தமிழ் சேவையில் இணைந்த முதல் தமிழ்ப் பெண்மணியாக பல தடைகளைத் தாண்டி பிபிசி தமிழோசையின் இயக்குநராக உயர்ந்த பெருமைக்குரியவர்.
பல ஆண்டுகளாக தாயக மக்களுக்கு செய்திச் சேவையை தொடர்ந்து வழங்கி வந்த பிபிசி ‘ஆனந்தி அக்கா’ பெப்ரவரி 21இல் இலண்டனில் இயற்கை எய்தினார்.
‘தமிழோசை ஆனந்தி’ என தமிழ் உலகம் அறிந்திருக்கும் திருமதி. ஆனந்தி சூரியப்பிரகாசம் பி.பி.சி தமிழோசையில் அவர்கள் பணியாற்றிவந்த காலத்தில் தாயக உறவுகளின் அவலங்களையும் தமிழோசை வாயிலாக உலகெங்கும் கொண்டு சென்றதில் பெரும் பங்கு வகித்தார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவரான ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள், இலங்கை வானொலியில் உருவான பல நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்றார். அத்துடன் அக்காலத்தில் வானொலியில் சிறந்த அறிவிப்பாளராகவும் திகழ்ந்தார்.
இங்கிலாந்துக்கு 1970 காலகட்டத்தில் குடிபெயர்ந்த ஆனந்தி சூரியப்பிரகாசம் பி.பி.சி தமிழோசையின் பகுதிநேர அறிவிப்பாளராக ஆரம்பத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் , நிரந்தர அறிவிப்பாளராகிப் பொறுப்புகள் ஏற்றுச் செயற்பட்டார்.
மூன்று தசாப்தங்களாக பி.பி.சி தமிழோசையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர் பல இளைய தலைமுறையினரை ஊக்குவித்து பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
இறுதியாக அவர் தமிழோசையில் இருந்து ஓய்வு பெற்றாலும், தமிழர் கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகளில் இனித்த முகத்துடன் எப்போதும் காணலாம்.
போர்க்காலத்தில் பல செய்தித் தணிக்கைகள் மத்தியிலும் தாயக மக்களுக்காக களத்தில் நிகழும் நிகழ்வுகளை தொகுத்து உடனுக்குடன் வழங்கி வந்தார். பி.பி.சி தமிழோசையில் ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் பணியாற்றிவந்த காலத்தில் தாயக உறவுகளின் அவலங்களையும் தமிழோசை வாயிலாக உலகெங்கும் கொண்டு சென்றதில் பெரும் பங்கு வகித்தார்.
கொடூரமான போர் நடந்த காலத்தில் துணிகரமான தாயகம் வந்து தமிழ் மக்களின் உண்மை நிலையை உலகறியச் செய்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணலை சர்வதேச ஊடகங்கள் மூலமாக வெளியிட்டார்.
தமிழர் உலகம் மாத்தரமன்றி, சர்வதேசம் எங்கும் அப்போது மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசத்துடனான நேர்காணல் பலத்த வரவேற்பை பெற்றது.
இலண்டனிலிருந்து கொழும்பு சென்றதுமே இலங்கை அரசின் கெடுபிடியை அவர் சந்தித்தார்.
அவரது பயணத்திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்தார்கள். பின்னர் அவரை தொடர்ந்து கண்காணிக்கவும் செய்தார்கள்.
அப்போது வவுனியாவுக்கு முன் வரை மட்டுமே இலங்கை படைகளின் ஆதிக்கம் இருக்கும். அதன் பிறகு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குள் வருவதற்குள் பல்வேறு தடைகளை அரசு ஏற்படுத்தி இருந்தது.
அதையெல்லாம் மீறி புலிகளுன் பாதுகாப்புப் பகுதிக்கு வந்த அவர் யாழ்ப்பாணத்தில் தேசியத் தலைவர் பிரபாகரனை சந்தித்தார்.
பலருக்கும் நினைவிருக்கும் அவருடைய நேர்காணலை உலகெங்கும் தமிழ் மக்கள் பார்த்து வியந்தனர். அந்த நேர்காணலின் பின்னரே பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்றார் பிபிசி புகழ் ஆனந்தி அக்கா.
தமிழ் கூறும் நல்லுலகம் ஆனந்தி அக்காவின் கணீரென்ற குரலை ஒரு போதும் மறவாது. தமிழ் கூறும் நல்லுலகிற்கு அரும் பணிபுரிந்த ஆனந்தி அக்காவிற்கு அஞ்சலிகளும் ஆராதனைகளும் உரித்தாகட்டும்!