• Mon. Oct 21st, 2024

24×7 Live News

Apdin News

தமிழ்த் தாய் வாழ்த்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம் | Ops talks on Tamil Thai Vazhthu song issue

Byadmin

Oct 20, 2024


சென்னை: தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தில் நேர்ந்த தவறுக்கு கவனச் சிதறலே காரணம் என தூர்தர்ஷன் விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘தமிழ்நாடு ஆளுநர் கலந்துகொண்ட சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாடும்போது, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரி விடுபட்டது மிகப் பெரிய தவறு. இதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. இது கவனக் குறைவு காரணமாக ஏற்பட்ட தவறு என்று சென்னை தூர்தர்ஷன் விளக்கம் அளித்திருக்கிறது.

எனவே, இது தூர்தர்ஷன் நிர்வாகம் செய்த தவறு. இதனை, ஆளுநர்தான் செய்தார் என்று கற்பனை செய்து கொண்டு, அவரை வசைபாடுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இந்தக் குற்றச்சாட்டினை ஆளுநரே மறுத்துள்ளார். இந்தத் தருணத்தில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த ‘பெற்றால்தான் பிள்ளையா’ என்ற படத்தில் வரும்,

‘தவறு என்பது தவறிச் செய்வது,

தப்பு என்பது தெரிந்து செய்வது,

தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்,

தப்புச் செய்தவன் வருந்தி ஆகணும்’

பாடல் வரிகளை சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். இதற்கேற்ப, செய்த தவறினை தூர்தர்ஷன் நிர்வாகம் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதற்குப் பிறகும், மேதகு ஆளுநர் அவர்களை வசைபாடுவது, அரசியல் விளம்பரத்திற்காக தரம் தாழ்ந்த விமர்சனங்கள் மேற்கொள்ளப்படுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துவிடும்.

தூர்தர்ஷன் நிர்வாகத்தில் ஏற்பட்ட கவனச் சிதறல் என்று தூர்தர்ஷன் நிர்வாகமே ஒப்புக் கொண்டிருப்பதையும், ஆளுநரே தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை மறுத்திருப்பதையும் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



By admin