• Wed. Nov 6th, 2024

24×7 Live News

Apdin News

தமிழ்த் தேசியம் பற்றி அரசியல்வாதிகளிடம் சரியான புரிதல் இல்லை

Byadmin

Nov 3, 2024


“தமிழ்த் தேசியம் தொடர்பில் அரசியல்வாதிகளிடம் சரியான புரிதல் இல்லை. தமிழ்த் தேசியம் என்பது தனியே அரசியல் சார்ந்தது மாத்திரமல்ல. அது மக்கள் வாழ்க்கை சார்ந்தது. அரசியல், பொருளாதாரம், பண்பாடு, கலாசாரம், கல்வி அனைத்திலும் நாங்கள் செழித்து வாழ்கின்ற வாழ்க்கைதான் தமிழ்த் தேசியத்தை உறுதிப்படுத்துகின்ற விடயம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட  நாடாளுமன்ற வேட்பாளர் திருமதி கிருஷ்ணவேணி சிறீதரன் தெரிவித்தார்.

கனடா தமிழ் வண் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்கள் தங்களது அன்றாட தேவைகளை, போதைப்பொருள் பாவனை தொடர்பான பிரச்சினைளை, கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு போன்ற விடயங்களைக் கதைப்பது தமிழ்த் தேசியத்துக்கு எதிரான விடயமல்ல. இதற்கான புரிதல் மக்களிடமும்  எமது அரசியல் தலைமைகளிடமும் வர வேண்டும்.

மக்களைப் பட்டினி போட்டுவிட்டு தொடர்ந்து உரிமைக்காக மட்டும் குரல் கொடுக்கும்படி நாம் எதிர்பார்க்க முடியாது. அவ்வாறெனில் முழு தமிழ்த் தேசமும் பட்டினி இருப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். முழு தேசமும் தங்களுடைய அனைத்துப் பிரச்சினைகளையும் ஒதுக்கிவிட்டு நாடு காண்பதற்குப் புறப்பட வேண்டும். அனால் இங்கு ஒருசாரார் தங்களை வளப்படுத்திக்கொண்டு போகும்போது மக்களில் பெரும்பாலானோர் தங்களுடைய நாளாந்த தேவைகளுக்காக அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில் பேச்சளவில் போலித் தேசியம் பேசுவதில் அர்த்தம் இல்லை.

துரோகிப் பட்டங்களுக்குப் பயப்படாமல் சில முன்னெடுப்புகளை அரசியல் தலைமைகள் முன்னெடுக்க வேண்டும். அதேநேரம் அதனை மக்களிடமும் புரியவைக்க வேண்டும். அவை இரண்டும் சம காலத்தில் நடைபெற வேண்டும்.

நான் எப்போதும் துரோகிப் பட்டங்களுக்கு பயப்பட்டது இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்திலே அவர்களின் தவறான விடயங்களை விமர்சித்த அதேவேளை போராட்டத்தோடு பயணித்தவள். எனவே, பட்டங்களுக்குப் பயப்படாமல் நாங்கள் சில செயல்களைச் செய்ய வேண்டிய காலம் இது. மக்களின் விருப்பங்களின் பாதையில் பயணிக்கும் அதேநேரம் அவர்களை வழிநடத்திச் சென்றால் எமது அரசியல் பயணம் தெளிவானதாக இருக்கும்.” – என்றார்.

By admin