தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களை நியமிக்கும் பணியை மாநில சுகாதாரத்துறை மேற்கொள்கிறது. இந்த இடங்களுக்கு மருத்துவத் தேர்வு வாரியம் மூலம் வாக்-இன் இன்டர்வியூ, அதாவது உடனடி நேர்காணல் நடத்தி மருத்துவர்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறைக்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் 270 மகப்பேறு மருத்துவர் இடங்கள் உள்பட, 658 உயர் சிகிச்சை வழங்கும் மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்குத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவர்கள் குறிப்பிட்ட தேதியில் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.
தமிழக அரசின் இந்த முடிவை அரசு மருத்துவர் சங்கங்கள் பல, கடுமையாகக் கண்டிக்கின்றன. இந்த முடிவு வெளிப்படைத் தன்மையற்றது, பொதுமக்கள் நலனுக்கு ஆபத்து, ஏற்கெனவே பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்குப் பாதகமானது ஆகிய காரணங்களால் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில், 270 மகப்பேறு மருத்துவர்கள், 16 இதயவியல் மருத்துவர்கள், 16 நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், 50 தடயவியல் மருத்துவர்கள், 12 முதியோர் நல மருத்துவர்கள், 71 மயக்கவியல் மருத்துவர்கள், 121 பொது மருத்துவர்கள், 121 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 42 கதிரியக்கவியலாளர்கள், ஒரு எலும்பு மூட்டு மருத்துவர் இடங்கள் காலியாக உள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் காலிப் பணியிடங்களின் பட்டியலை வாசித்தார்.
“ஒரு மாதத்துக்குள் இந்த இடங்கள் நிரப்பப்படும். பணி நியமனத்தின் போது இட ஒதுக்கீடு உள்பட அனைத்து விதிகளும் பின்பற்றப்படும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு
பட மூலாதாரம், Getty Images
“கடந்த 2020ஆம் ஆண்டு உடனடி நேர்காணல் மூலம் பணியில் அமர்த்தப்பட்டவர்கள், எந்தவித சிறப்புத் தகுதி தேர்வும் நடத்தப்படாமல் நிரந்தரப் பணியில் சேர்க்கப்பட்டனர். அப்போது இட ஒதுக்கீடும் பின்பற்றப்படவில்லை. மருத்துவர்களுக்கு வாக்-இன் நேர்காணல் நடத்தப்படாது என்று ஏற்கெனவே சுகாதாரத் துறை அமைச்சர் உறுதியளித்திருந்தார். சிறப்பு மருத்துவர்களை தேர்வுகள் நடத்தி அதன் மூலமே நியமிக்க வேண்டும்” என்று முதுநிலை அரசு மருத்துவர்கள் சங்கம் கூறுகிறது.
சுகாதாரத் துறையில் பணி நியமனங்களை தாமதமின்றி நடத்த, மருத்துவ தேர்வு வாரியத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கியது. ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தி, மதிப்பெண் அடிப்படையில், இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் இடங்களை நிரப்ப வேண்டும்.
மூன்று ஆண்டுகளாக ஏன் மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வுகளை நடத்த அரசு தவறிவிட்டது எனக் கேள்வி எழுப்புகிறார் முதுநிலை அரசு மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த ராமலிங்கம்.
“மருத்துவத் துறையில் ஆள் பற்றாக்குறையை நிரப்புங்கள் எனக் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். அரசு இப்போதுதான் விழித்துள்ளது.
கடந்த 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் ஏன் மருத்துவர் தேர்வு வாரியத்தின் தேர்வுகள் நடத்தப்படவில்லை? வாக் -இன் நேர்காணல் நடைமுறை, பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்பைப் பறித்துவிடும்” என்று கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் (சித்தரிப்புப் படம்)
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், “வாக்-இன் நேர்காணல் நடத்துவது ஊழல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். இத்தனை காலி இடங்கள் உருவாகும் என்று அரசுக்கு முன்பே தெரியாதா? அதற்குத்தானே மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.
சரியான நேரத்தில் தேர்வுகளை நடத்தி, பணி நியமனங்களைச் செய்திருக்க வேண்டும். அந்த தவறைச் சரி செய்வதற்காக, தற்போது வாக்-இன் நேர்காணல் என்ற மற்றொரு தவறைச் செய்யக்கூடாது,” என்றார்.
நேர்காணல் முறையில் மருத்துவர்களை நியமித்தால், அனைத்துத் துறைகளிலும் சீரான தரத்தைப் பராமரிக்க முடியாது, எனவே மதிப்பெண் மற்றும் தகுதி அடிப்படையிலேயே நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ரெசிடண்ட் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, சுமார் 1000 மருத்துவர் பணியிடங்கள் மருத்துவத் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டன. இந்த ஆண்டு, 2,553 இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வை சுமார் 24 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். அதன் முடிவுகள் வெளியாகி, அந்த இடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த தேர்வு இன்னும் மூன்று மாதங்களில் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை கூறுகிறது.
“மருத்துவ தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளைப் பல ஆயிரம் பேர் எழுதுகின்றனர். மற்ற மாநிலங்களைப் போல் இல்லாமல் தமிழ்நாட்டில் தகுதியான நிறைய மருத்துவர்கள் அரசுப் பணியில் சேர விரும்புகின்றனர்.
எம்.பி.பி.எஸ் படிப்பை தகுதியாகக் கொண்ட இடங்களுக்கு முதுநிலை படித்தவர்கள் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. அவர்களை முறையாக நியமனம் செய்தாலே காலி இடங்களை நிரப்பலாம்,” என்கிறார் ராமலிங்கம்.
வாக்-இன் நேர்காணல் ஏன் வேண்டாம்?
பட மூலாதாரம், Getty Images
வாக்-இன் நேர்காணல் வெளிப்படைத்தன்மையற்றது என்று அரசு மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இவை மருத்துவ தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படுவதாகவும், அனைத்து விதிகளும் பின்பற்றப்படும் என்று அரசு தெரிவிக்கிறது.
வாக்-இன் நேர்காணல் முறை வெளிப்படைத்தன்மையற்றது என்று குறிப்பிடும் தமிழ்நாடு ரெசிடண்ட் மருத்துவர்கள் சங்கம் நேர்காணலில் ஒரு மருத்துவரின் அறிவையும் திறமையையும் தெரிந்து கொள்வதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட வழிகள் இல்லை எனவும், இந்த நடைமுறை பாரபட்சம் காட்டுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது எனவும் கூறுகிறது.
அரசு முதுநிலை மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ராமலிங்கம், “நேர்காணலுக்கு வரும் மருத்துவர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்? ஒவ்வொருவரும் வெவ்வேறு பல்கலைக் கழகங்களில் பயின்று வந்திருப்பார்கள், அவர்களின் மதிப்பெண்களை எப்படி ஒப்பிட முடியும்? அனைவருக்கும் ஒரே தேர்வை நடத்தினால்தானே தரத்தை சீரானதாக வைத்துக் கொள்ள முடியும்” என்கிறார்.
மேலும் நேர்காணல் மூலம் சிறப்பு மருத்துவர்களை நியமிப்பது அரசாணை எண் 345க்கு எதிரானது என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“மருத்துவக் கல்வி இயக்ககப் பணிகள் (மருத்துவக் கல்லூரி பணியிடங்கள்) பணிமூப்பு வரிசையின் படியே நிரப்பப்பட வேண்டும் என்று அரசாணை கூறுகிறது. திடீரென வெளியிலிருந்து ஒருவரை நியமிப்பது விதிகளுக்குப் புறம்பானது” என்று மருத்துவர் ராமலிங்கம் கூறுகிறார்.
பட மூலாதாரம், PTI
படக்குறிப்பு, சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன்
பிபிசி தமிழிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன், “மருத்துவர்களுக்குத் தேர்வு நடத்தும் அதே மருத்துவ தேர்வு வாரியம் மூலமாகத்தான் இந்த நேர்காணல் நடைபெறுகிறது, அவர்கள்தான் இந்த வாக்-இன் நேர்காணலை நடத்துகிறார்கள். இது முதல் முறை நடத்தப்படுவதும் அல்ல, ஏற்கெனவே 2014, 2020 ஆகிய ஆண்டுகளில் வாக்-இன் நேர்காணல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நேர்காணலின்போது சாதி ஒதுக்கீடு முதல் அனைத்து விதிகளும் பின்பற்றப்படும். இந்த நேர்காணல் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற கருத்துகள் இருந்தால் அதையும் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்,” என்று தெரிவித்தார்.
ஆனால், “சாதி ரீதியான ஒதுக்கீட்டை இதுபோன்ற நேர்காணல்களில் பின்பற்றுவது நடைமுறைச் சாத்தியமில்லை. நேர்காணல்கள் ஒட்டுமொத்தமாக நடைபெறும். அதில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வராமல் இருக்கலாம், ஒரு சமூகத்தில் தேவையான ஆட்கள் இல்லாமல் இருக்கலாம், அப்படியான சூழலில், எப்படி இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற முடியும்?” என்கிறார் ராமலிங்கம்.
ஏற்கெனவே அரசு பணியில் இருக்கும் மருத்துவர்களைக் கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாதா?
காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப, அரசுப் பணியில் தற்போது தகுதியான மருத்துவர்கள் இருப்பதாகவும், அவர்களை மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி, நியமிக்கலாம் எனவும் அரசு மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அப்படிச் செய்தாலும் காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப முடியாது என்பதால், மக்களுக்கு மருத்துவர் பற்றாக்குறை இருக்கக் கூடாது என வாக்-இன் நேர்காணல் மூலம் நியமனங்கள் செய்யப்படுவதாக அரசு கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
கொரோனா பணியில் இருந்த மருத்துவர் தேவநாயகி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), நான்கு ஆண்டுகளாக அரசுப் பணியில் இருந்தும் தாங்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்றும் இதே போன்று 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த 140 மருத்துவர்கள் இருக்கின்றனர் என்றும் கூறுகிறார்.
“கடந்த 2020ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்து, கொரோனா பணிக்காக அரசுப் பணியில் சேர்ந்தோம். அரசுக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு முடித்தவர்கள், இரண்டு ஆண்டுகள் கட்டாயமாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும்.
அதன் காரணமாகவும், கொரோனா காலத்தில் மருத்துவர்கள் அதிகம் தேவைப்பட்டதாலும் உடனே பணியில் சேர்ந்தோம். கொரோனா காலத்தில் செய்த பணியை ஒப்பந்த காலத்துக்கான பணியாக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே அதற்கு பிறகும் இரண்டு ஆண்டுகள் பணி செய்துவிட்டோம். மொத்தம் நான்கு ஆண்டுகள் அரசுப் பணியில் இருந்துள்ளோம். எங்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்தி அரசுப் பணியில் முறையாக இணைக்க அரசிடம் பல மாதங்களாக வலியுறுத்துகிறோம்” என்கிறார்.
இவர்களைப் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து முறையாக தேர்வு நடத்தி, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்கிறார் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத்.
பட மூலாதாரம், Getty Images
“மருத்துவ தேர்வு வாரியம் மூலம் முறையாகத் தேர்வு செய்யப்பட்ட முதுநிலை மருத்துவ படிப்பு முடித்த தகுதியான மருத்துவர்கள் பொது சுகாதாரத் துறையின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிராமப்புறங்களில் பணியாற்றி வருகின்றனர்.
மிக அடிப்படையான மருத்துவ சேவைகளை வழங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், முதுநிலை படித்து முடித்த மருத்துவர்கள் சுமார் 300 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களை இந்தப் பணிகளுக்கு நியமிக்கலாமே” என்கிறார் அரசு முதுநிலை மருத்துவர்கள் சங்கத்தின் ராமலிங்கம்.
பிபிசி தமிழிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன், “பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி பணியிடங்களை நிரப்பினாலும், அதையும் தாண்டி காலியிடங்கள் உள்ளன. இந்த ஆண்டுக்கான மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வுகள் இன்னும் சில மாதங்களில் நடத்தப்படும்.
இருப்பினும், சிறப்பு மருத்துவர் காலிப் பணியிடங்கள் அதிகமாக உள்ளன, மகப்பேறு உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு மருத்துவர் இல்லாத நிலை ஏற்படக் கூடாது” என்று தெரிவித்தார்.