• Wed. Jan 21st, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு அரசு – ஆளுநர் மோதல்: ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடரை ஆளுநர் உரையின்றி தொடங்கலாமா?

Byadmin

Jan 21, 2026


ஆளுநர், ஆர்.என். ரவி, ஆளுநர் உரை, தமிழ்நாடு சட்டப்பேரவை, மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசு vs ஆளுநர்
படக்குறிப்பு, கோப்புப் படம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரின் தொடக்க நாளில், ஆளுநர் உரையை படிக்க மறுத்து ஆர்.என். ரவி வெளிநடப்புச் செய்தார். ‘ஆளுநர் உரை தேவையில்லை’ என அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கோரப் போவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சிக்கலாகவே நீடிக்கும் இந்த பிரச்னைக்கு தீர்வு என்ன?

தமிழ்நாடு அரசு vs ஆளுநர் மோதல் போக்கு

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2026ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று (20.01.2026) துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்புச் செய்தார். 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற ஆர்.என். ரவி, 2022ஆம் ஆண்டின் ஆளுநர் உரையைத் தவிர, மற்ற ஆண்டுகளில் அதாவது தொடர்ந்து 4-வது ஆண்டாக ஆளுநர் உரை எதனையும் முழுமையாகப் படிக்கவில்லை.

2023ஆம் ஆண்டில் உரையை வாசித்த ஆளுநர் ஆர்.என். ரவி “பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் கொள்கைகளைப் பின்பற்றி திராவிட மாடல் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது,” என்ற வரியை வாசிக்காமல் புறக்கணித்தார். இதையடுத்து ஒரு தீர்மானத்தின் மூலம் ஏற்கனவே அச்சிடப்பட்ட ஆளுநர் உரையே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினார்.

2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் அந்த ஆண்டின் பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கியது. இதற்குப் பிறகு ஆளுநர் உரையை வாசிக்க ஆரம்பித்த ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவை துவங்கும் முன்பாகவும் முடியும்போது தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லையென்று குறிப்பிட்டார்.

By admin