பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
தமிழ்நாடு அரசு பெண் ஊழியர்களுக்கு மூன்றாவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு ஓராண்டாக உயர்த்தப்படும் என, மனிதள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பு, தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதற்கான முன்னெடுப்பாக பல தரப்புகளிலும் பார்க்கப்படுகிறது.
பொருளாதார- சமூக மாற்றங்களை ஏற்படுத்தாமல் இத்தகைய ஊக்கத் திட்டங்கள் பயனளிக்காது என்று நிபுணர்கள், செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இது குழந்தைபேறை ஊக்குவிப்பதற்கான திட்டம் அல்ல, மாறாக தொலைநோக்கு பார்வையுடன் எடுக்கப்பட்ட முடிவு என தவெக தேசிய செய்தித் தொடர்பாளர் சசிரேகா தெரிவித்துள்ளார்.
அரசு பெண் ஊழியர்களுக்கு மூன்றாவது குழந்தைக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு என்பது ஏன் விவாதிக்கப்படுகிறது?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 18) அமைச்சர் சரத்குமார் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “தமிழ்நாடு அரசு பெண் பணியாளர்களுக்கு 3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்கள் வழங்கப்படும்.” என அறிவித்தார்.
ஏற்கெனவே தமிழ்நாடு அரசு பெண் ஊழியர்களுக்கு முதல் 2 குழந்தைகளுக்கான மகப்பேறு விடுப்பு பல்வேறு கட்டங்களில் உயர்த்தப்பட்டு தற்போது 365 நாட்களாக உள்ளன. தற்போது, மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கும் அதே அளவிலான மகப்பேறு விடுப்பு பலன் கிடைக்கும் வகையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு வழிவகை செய்துள்ளது. மூன்றாவது குழந்தைக்கு தற்போது 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஆரம்ப காலகடத்தில் முதல் குழந்தைக்கே மகப்பேறு விடுப்பு 90 நாட்கள் என்றிருந்த நிலையில், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் படிப்படியாக உயர்த்தி 365 நாட்களாக அதிகரித்தன.
பட மூலாதாரம், Getty Images
இந்த அறிவிப்பு குறித்து தவெகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “மகப்பேறு விடுப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என்றாலும், தந்தைக்கான விடுப்பு குறித்தும் பரிசீலிக்கப்பட வேண்டும்; அதேவேளையில், குடும்பங்களில் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுப்பதை அரசு ஊக்குவிக்கக் கூடாது. மூன்றாவது குழந்தையை வளர்ப்பதற்கான பொருளாதார வசதி குடும்பங்களிடம் உள்ளதா?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அதே சமயம், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “பொறுப்பான மக்கள்தொகை கொள்கைகள் மற்றும் பெண்களுக்கான அதிகாரமளித்தல் ஆகியவற்றில் தமிழ்நாடு நீண்ட காலமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. எந்தவொரு புதிய கொள்கையும், மூன்றாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளுமாறு பெண்களின் மீது மறைமுகமான அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடாது. குறிப்பாக, பாலின விருப்பம் அல்லது சமூக அழுத்தங்களை எதிர்கொள்ளக்கூடிய குடும்பங்களின் சூழலில் இது முக்கியமானது.” என தெரிவித்துள்ளார்.
மேலும், “பெண்களுக்குத் தாங்கள் விரும்பும் முடிவை எடுக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு அவர்கள் பெறத் தகுதியான பராமரிப்பு கிடைக்க வேண்டும். மேலும், அரசின் கொள்கையானது இவ்விரு தரப்பினரையும் பாதுகாக்க வேண்டுமே தவிர, யாரையும் நெருக்கடிக்கு உள்ளாக்கக் கூடாது.” என தமிழிசை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சரத்தின் இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் குழந்தை பேறு விகிதத்தை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் குறித்து யோசிக்கப்படும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்திருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “தமிழ்நாட்டில் குழந்தை பேறு விகிதம் மிகவும் குறைந்து வருகிறது. குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பது குறித்து அரசு யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தம்பதிகளுக்கு தற்போதிருக்கும் வேலை பளு, ஓய்வின்மைக்கு நடுவில் ஒரு குழந்தை பெற்றுக்கொள்வதற்கே யோசிக்கின்றனர். அவர்களை குழந்தை பெற்றுக் கொள்வதற்காகவே விடுப்பு அளிக்க வேண்டிய நிலை இனி ஏற்பட்டுவிடும்.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
குறையும் கருவுறுதல் விகிதம்
இந்தியாவில் மொத்த கருவுறுதல் விகிதம் மக்கள் தொகையை நிலையாக பராமரிக்கத் தேவையானதை விட குறைந்து விட்டதாக, கடந்த ஜூன் மாதம் வெளியான மாதிரிப் பதிவு முறை புள்ளிவிவர அறிக்கை 2024 கூறுகிறது.
இந்த அறிக்கையை பொதுப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் வெளியிட்டது.
அதன்படி, 2024-ஆம் ஆண்டில் தேசியளவில் இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.9 ஆக உள்ளது. இந்தியாவில் மக்கள் தொகையை நிலையானதாக பராமரிக்கத் தேவையானதை விட, அதாவது மொத்த கருவுறுதல் விகிதம் 2.1க்கும் கீழே குறைந்துள்ளது. எளிமையாக சொல்வதானால், ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மக்கள் தொகை தன்னைத்தானே நிலையாக ஈடுசெய்து கொள்வதற்குத் தேவையான அளவை விட மொத்த கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது.
மொத்த கருவுறுதல் விகிதம் என்பது ஒரு பெண் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையாகும்.
அந்த ஆய்வறிக்கையின்படி, மொத்த கருவுறுதல் அதிகமாக உள்ள மாநிலங்களில் பிகார் மாநிலம் (2.9) முதலிடத்தில் உள்ளது. மிக குறைவான கருவுறுதல் விகிதமாக டெல்லியில் 1.2 ஆக உள்ளது. கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மொத்த கருவுறுதல் விகிதம் 1.3 என்ற அளவில் உள்ளன.
இதுதவிர, கருத்தடையை கடுமையாக செயல்படுத்தி மக்கள் தொகையை குறைத்த தென் மாநிலங்கள், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றன.
ஆனால், மொத்த கருவுறுதல் விகிதம் குறைதல், தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பது போன்ற காரணிகள், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதால் சரியாகிவிடாது என பெண்ணிய செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
“கூடுதல் சுமையை ஏற்படுத்தும்”
“கருவுறுதல் விகிதம் குறைவதற்கு தீர்வு தேடுவதே அவசியமற்றது. குறிப்பாக, பெண் கல்வி அதிகரித்து ஏழ்மை நிலை குறையும்போது இயல்பாகவே குழந்தை பிறப்பு விகிதம் குறையும். நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பாதையிலேயே இந்தியா பயணிக்கிறது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் குழந்தைகள், பெரியவர்களை பார்த்துக்கொள்ளுதல், வீட்டு வேலைகள் ஆகியவை பெரும்பாலும் இந்தியாவில் பெண்கள் மீதே சுமத்தப்படுகிறது. பெண்கள் பலரும் வேலைக்கு சென்றுகொண்டே வீட்டு வேலைகளையும் சுமக்கின்றனர்.” என்கிறார் எழுத்தாளரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமான தாரா கிருஷ்ணசுவாமி.
இவர், பெண் எம்எல்ஏக்கள், எம்.பிக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வலியுறுத்தும் ‘பொலிட்டிக்கல் ஷக்தி’ எனும் அமைப்பின் இணை நிறுவனராக உள்ளார்.
பட மூலாதாரம், Tara Krishnaswamy
இந்தியாவின் நேரப் பயன்பாட்டுக் கணக்கெடுப்பின்படி, 15 முதல் 59 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒவ்வொரு நாளும் ஏழு மணி நேரத்துக்கும் மேலாக ஊதியம் பெறாத வீட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளில் செலவிடுகின்றனர் என, ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) கூறுகிறது. அதன்படி, ஆண்கள் மூன்று மணி நேரத்துக்கும் குறைவாகவே செலவிடுகின்றனர். இந்தியாவின் நகர்ப்புறங்களிலும் இதே விகிதம் காணப்படுகிறது. இருவருமே பணியில் இருக்கும்போதும் கூட, சராசரியாக, பெண்கள் ஆண்களை விட 2.6 மடங்கு அதிகமாக ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளைச் செய்கிறார்கள்.
அதிக வருமானம் தரும் வேலைகளை வழங்குதல் போன்ற பொருளாதார மாற்றத்தையும், குழந்தைகளை கவனித்துக்கொள்ளுதல் ஆண் – பெண் இருவருடைய பொறுப்பே என்ற சமூக மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் அரசின் முதன்மை பணியாக இருக்க வேண்டும் என்கிறார் தாரா கிருஷ்ணசுவாமி.
“இந்த மாற்றங்களை செய்தால் தானாகவே குழந்தை பேறு அதிகரிக்கும். அப்போது சில ஊக்கத் திட்டங்களை அறிவிக்கலாம். ஆனால், இந்த மாற்றம் ஒருநாள் இரவில் ஏற்படாது. மாறாக இதுவொரு நீண்ட கால நடைமுறை. பொருளாதார முன்னேற்றம் ஏற்படாமல் இன்னொரு குழந்தைக்கான கல்வி உள்ளிட்ட செலவுகளுக்கு எங்கே செல்வார்கள்?” என்கிறார்.
எனினும், அரசின் இத்தகைய அறிவிப்பு தற்போதைக்கு ஓர் ஊக்கத் திட்டமாகத்தான் பார்க்க வேண்டும், அதை அரசு செய்யலாம் எனக்கூறும் தாரா கிருஷ்ணசுவாமி, மாறாக அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதை திணித்தால் கண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதிக குழந்தைகளை பெறும் நிலை ஏற்பட்டால் பெண்கள் பணிச்சூழலை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்றும், அதனால் அவர்கள் கல்வியில் பின்னோக்கி செல்வதற்கான ஆபத்தும் உள்ளதாக அவர் கூறுகிறார்.
குழந்தை பேறு விகிதம் குறைவது என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமான பிரச்னை அல்ல. தென் மாநிலங்களில் கடந்த பல தசாப்தங்களாக தீவிரமாக கருத்தடை செயல்படுத்தப்பட்டதால் குழந்தை பேறு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளது.
தமிழ்நாடு போன்று மற்ற சில மாநிலங்களும் குழந்தை பேறை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை அறிவித்துவருகின்றன. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து பேசிவருகிறார்.
ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தலில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வோர் போட்டியிட தடை விதிக்கும் வகையிலான சட்ட விதியை மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு 2024ஆம் ஆண்டில் அம்மாநில அரசு கைவிட்டது. மேலும், மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு ஒருமுறை ரூ. 30,000, நான்காவது குழந்தைக்கு ஒருமுறை ரூ. 40,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது.
உடல், மன நல பாதிப்புகள்
ஆனால், அதிக குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்கள் உடல், மனதளவில் மிகுந்த பாதிப்புகளை சந்திப்பதாக கூறுகிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளரும் மகப்பேறு மருத்துவருமான சாந்தி ரவீந்திரநாத்.
“குழந்தையை கவனித்துக்கொள்வதற்காக மூன்றாவது குழந்தைக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றேடுக்கும் பெண்கள் உடல், மன நலன் மிகவும் பாதிக்கப்படுகிறது. அதனால்தான் மகப்பேறு சட்டங்கள் மகப்பேறு விடுப்பு போன்றவற்றை இரு குழந்தைகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என கூறியுள்ளது. பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கும் இயந்திரம் அல்ல. அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதை குறைக்க வேண்டும் என, பல சட்ட-திட்டங்கள் பரவலாக உள்ளன” என்றார் அவர்.
பட மூலாதாரம், Shanthi Ravindranath
இரு பெண் குழந்தைகளை கொண்டுள்ள பெண் மீது, ஆண் குழந்தைக்காக மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு அதிக சுமை மற்றும் அழுத்தத்தை இந்த அறிவிப்பு ஏற்படுத்தலாம் என்றும் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழக அரசாங்கத்தில் நிரந்தர அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் மிகவும் குறைவு, அதில் பெண் ஊழியர்கள் பாதி அளவு இருக்கலாம் என குறிப்பிடும் சாந்தி ரவீந்திரநாத், “அதிலும் குழந்தை பெற்றுக் கொள்ளும் வயதில் இருக்கும் இளம் பெண்கள் எண்ணிக்கையும் அவர்களுள் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு” என குறிப்பிடுகிறார்.
அவரின் கூற்றுப்படி, தமிழ்நாடு அரசில் சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் பணிபுரியும் தற்காலிக ஒப்பந்த பெண் தொழிலாளர்கள் மிக அதிகம்.
“அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு முதல் குழந்தைக்கும் கூட ஊதியத்துடன் கூடிய மகப்பேறு உள்ளிட்ட எந்த விதமான மகப்பேறு வசதிகளும் செய்து தரப்படுவது இல்லை. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு இவர்களுக்கு மகப்பேறு விடுப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்” என வலியுறுத்துகிறார் சாந்தி ரவீந்திரநாத்.
பட மூலாதாரம், Sasirekha
“தொலைநோக்கு முடிவு”
ஆனால், இது பெண்களின் நலனுக்காகவே எடுக்கப்பட்ட முடிவு என்றும், அவர்களின் உரிமை மீறப்படாது என்றும் தமிழக வெற்றிக் கழக செய்தித் தொடர்பாளர் சசிரேகா கூறியுள்ளார்.
பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.3 ஆகக் குறைந்துவிட்டது. ஆனால், இந்த விகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 15-20 ஆண்டுகளில் பெரும் மாற்றம் ஏற்படும். வருங்காலத்தில் தமிழ்நாட்டில் முதியவர்களே அதிகமாக இருப்பார்கள். எனினும், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதை அரசு ஊக்குவிப்பதாக இதன்மூலம் எடுத்துக்கொள்ளக் கூடாது. அரசு ஊழியர்களுக்கு அத்தகைய தேவை இருந்தால் மகப்பேறு விடுப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.” என அவர் கூறினார்.
“பொது சுகாதாரம், பெண்களின் நலன் இந்த அரசில் பாதுகாக்கப்படும். தொலைநோக்கு உணர்வுடன் எடுக்கப்பட்ட முடிவு இது. எல்லா வகையிலும் ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.” என சசிரேகா தெரிவித்தார்.
இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் பிறப்பு விகிதம் குறைவது முக்கியமாக விவாதிக்கப்பட்டுவருகிறது. குழந்தை பேறை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் பல நாடுகள் எடுத்துவருகின்றன.
தென் கொரியாவில் ஒரு குழந்தையின் வாழ்க்கையின் முதல் எட்டு ஆண்டுகளுக்குள், தாய் மற்றும் தந்தை இருவருமே ஓராண்டு விடுப்பு எடுக்க உரிமை பெற்றுள்ளனர். ஆனால் 2022-ஆம் ஆண்டில், புதிதாகத் தந்தையானவர்களில் 7% பேர் மட்டுமே தங்கள் விடுப்பின் ஒரு பகுதியைப் பயன்படுத்தியிருந்தனர்; அதேவேளையில், புதிதாகத் தாயானவர்களில் 70% பேர் இந்த விடுப்பை பயன்படுத்தியிருந்தனர். அவ்வாறு செய்திருந்தனர்.
சீனாவில் ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் உள்ளிட்ட கருத்தடை சார்ந்த பொருட்களுக்கு 13% விற்பனை வரி விதிக்கப்பட்டது. அதே சமயம், குழந்தை பராமரிப்பு சார்ந்த பொருட்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
பட மூலாதாரம், RS Neelakandan
என்ன செய்ய வேண்டும்?
ஆனால், குழந்தை பேறு விகிதத்தை அதிகரிப்பது தமிழ்நாட்டுக்கு தேவையா என பார்க்க வேண்டும் என்கிறார், எழுத்தாளர் ஆர்.எஸ். நீலகண்டன். இவர், ‘தெற்கு vs வடக்கு: இந்தியாவின் பெரும் பிளவு’ நூலின் ஆசிரியர் ஆவார்.
“என்னைப் பொறுத்தவரை இது தேவையில்லாத விஷயம். மக்கள்தொகை குறைந்தால் பொருளாதார வளர்ச்சி குறையும் என நினைக்கின்றனர். ஆனால் அது மொத்த உள்நாட்டு உற்பத்திதான். நாம் தனிநபர் வருமானத்தை தான் பார்க்க வேண்டும். ஜப்பானில் மக்கள்தொகை குறையும்போது அவர்களின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைகிறது. ஆனால், தனிநபர்களை பொறுத்தவரை நன்றாக இருக்கின்றனர். சாமானியர்களுக்கு தனிநபர் வருமானம் தான் முக்கியம்.” என்கிறார் அவர்.
“இத்தகைய ஊக்குவிப்பு திட்டங்கள் அளித்தால் தமிழ்நாட்டு பெண்கள் நிச்சயம் மூன்றாவதாக குழந்தை பெற்றுக்கொள்வார்கள் என்பது கிடையாது. அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், மூன்றாவது குழந்தை குறித்து பெரிதும் சிந்திக்க மாட்டார்கள். ஆனால், மகப்பேறு விடுப்பு போன்ற கொள்கை ரீதியிலான முடிவை கொண்டு வருவது குறித்து நன்கு சிந்தித்திருக்க வேண்டும்.” என்கிறார் ஆர்.எஸ். நீலகண்டன்.
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 15-20 ஆண்டுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, முதியவர்களே அதிகம் இருப்பார்கள் என்ற தவெகவின் சசிரேகாவின் கருத்துடன் ஆர்.எஸ். நீலகண்டன் உடன்படவில்லை.
“ஒரு சமூகத்தில் வேலை செய்பவர்கள், வேலை செய்யாதவர்களின் விகிதமும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும்போதுதான் இத்தகைய நெருக்கடி ஏற்படும். இது ஜப்பானில் கிட்டத்தட்ட இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இத்தகைய நிலை ஏற்படுவதற்கு பல தலைமுறையாகும்.வெற்றிகரமாக கருத்தடையை செயல்படுத்தியிருக்கிறோம் என தொகுதி மறுவரையறை குறித்த விவாதங்களில் பேசும் நாமே, இனி நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்கிறோம் என்று கூறுவது பின்னோக்கி செல்வதாக உள்ளது. இதைவிடுத்து, கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
ஆர்.எஸ். நீலகண்டனின் கூற்றுப்படி, “இந்தியாவில் மிகவும் குறைவான மக்கள்தொகை இருந்தால் தான் கடினம். இந்தியாவில் இப்போது 1.4 பில்லியன் மக்கள் உள்ளனர். இதில், பாதி இருந்தால் கூட நாம் பல சிறப்பான விஷயங்களை செய்ய முடியும். இப்போது பிறக்கும் குழந்தையின் வாழ்நாள் முழுக்க இதே விகிதம் இருந்தால் 1.4 பில்லியனுக்கு பதிலாக ஒருவேளை இந்தியாவின் மக்கள் தொகை 1.2 பில்லியனாக குறையக்கூடும். அதனால் பெரிய மாற்றம் இருக்காது”.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு