படக்குறிப்பு, தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்கட்டுரை தகவல்
எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
பதவி, பிபிசி தமிழ்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.
இவற்றை விரைவில் ஏலம் விடுவதற்கான வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில், ஏல நடைமுறைகள் தொடங்கினால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக கூறுகிறார், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா.
இந்த விஷயத்தில் அதிமுக தொடர்ந்து மௌனம் காக்கிறது. ஜெயலலிதாவின் உடைமைகளை ஏலம் விடும் முடிவை தமிழ்நாடு அரசு எடுக்குமா?
1996 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சோதனை நடத்தியது.
இந்தச் சோதனையில் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து நகைகள், நில ஆவணங்கள், வங்கி வைப்பு நிதி தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில், 27 கிலோ தங்க, வைர நகைகளும் சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருப்பத்தூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள 1526 ஏக்கர் நிலங்களும் அடங்கும் என கர்நாடக நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளன. இவை தவிர, 11,344 பட்டுப்புடவைகள், 750க்கும் மேற்பட்ட காலணிகள், 91 கைக்கடிகாரங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நகை மற்றும் சொத்து ஆவணங்களை என்ன செய்வது?’ என 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதியன்று வெளியான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
அந்த தீர்ப்பில், பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களை பொதுநோக்கம் அல்லது வளர்ச்சிக்காக பயன்படுத்தலாம். நிலங்களை விற்று அரசு நிதி திரட்டலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஏலம் விடப்படுமா?
“பல ஆண்டுகள் கடந்தும் கர்நாடக அரசுக்கு வழக்குக்கான செலவுத் தொகை வழங்கப்படவில்லை” எனக் கூறி 2023 ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.
பெங்களூரூ குடிமையியல் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், கர்நாடக மாநில அரசின் கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் நகை மற்றும் சொத்து ஆவணங்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதியன்று இவை தமிழ்நாடு அரசின் கருவூலத்துக்கு வந்துவிட்ட நிலையில், வருவாய்த்துறை மூலம் ஏலம் விடுவது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால், “ஏலம் விடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை” என உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக டிடி நெக்ஸ்ட் ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை செயலர் ராஜேஷ் லக்கானியின் கருத்தை அறிய பிபிசி தமிழ் முயன்றது. இந்த கட்டுரை வெளியாகும் வரையிலும், அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. அவர் பதிலளித்ததும் இந்த கட்டுரையில் சேர்க்கப்படும்.
‘வருத்தத்தைக் கொடுக்கும் செயல்’ – ஜெ.தீபா
பட மூலாதாரம், Facebook
படக்குறிப்பு, ஏல நடைமுறைகள் தொடங்கினால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக கூறுகிறார், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா
“முன்னாள் முதலமைச்சரின் உடைமைகளை ஏலம் விடுவது என்பது வருத்தத்தைக் கொடுக்கும் ஒரு செயல்.” என்றார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இவற்றை எங்களிடம் ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால், நான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாடு அரசிடம் ஜெயலலிதாவின் நகை உள்பட அவரது பொருட்களை கர்நாடக அரசு ஒப்படைத்துவிட்டது. இவற்றை ஏலம் விடுவதற்கு சில மாதங்கள் ஆகும். இதில் அடுத்தகட்டமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து வழக்கறிஞரிடம் ஆலோசிக்க உள்ளேன்” என்கிறார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க நிர்வாகிகள் மௌனம் காப்பது குறித்துப் பேசிய ஜெ.தீபா, “ஜெயலலிதா தொடர்புடைய எந்த வழக்காக இருந்தாலும் அதில் அ.தி.மு.க தலையிடுவது இல்லை. எந்தவித கருத்தையும் அவர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை” எனக் கூறுகிறார்.
‘ஜெயலலிதாவின் தனிப்பட்ட வழக்கு’
“தவிர, புதிதாக அவர்கள் எதையும் செய்யவில்லை என நாங்கள் கேட்கவும் முடியாது. எதிர்பார்க்கவும் முடியாது. இது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட தனிப்பட்ட வழக்குகளாக கருதப்படுகிறது” எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
“ஜெயலலிதாவின் தனிப்பட்ட சொத்துகளாக இவற்றைப் பார்க்க வேண்டும்” எனக் கூறும் ஜெ.தீபா, “அவரது உடைமைகள் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் நோட்டீஸ் கொடுக்கும் வரை நாங்களும் தலையிடவில்லை” எனக் கூறுகிறார்.
இந்த விவகாரத்தை சட்ட ரீதியாகவே தங்கள் குடும்பம் எதிர்கொள்ள உள்ளதாகவும் ஜெ.தீபா குறிப்பிட்டார்.
அ.தி.மு.க மௌனம் காப்பது ஏன்?
பட மூலாதாரம், Facebook
படக்குறிப்பு, பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுக்கு ஜெயலலிதாவே உரிமை கோரவில்லை எனக் கூறுகிறார் சி.பொன்னையன்
“ஏல விவகாரத்தில் அ.தி.மு.க மௌனமாக இருப்பது ஏன்?” என அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையனிடம் பிபிசி தமிழ் கேட்டது.
“முன்னாள் முதலமைச்சரின் உடைமைகளைப் பற்றிப் பேசுவது சரியாக இருக்காது. இது தனிப்பட்ட விவகாரம் என்பதால் கருத்து சொல்வதில் உடன்பாடு இல்லை” என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.
இதையே பிபிசி தமிழிடம் தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், “பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுக்கு ஜெயலலிதாவே உரிமை கோரவில்லை. அதன்பிறகு அவர் நகைகளை அணிய மறுத்துவிட்டார். அவரே விரும்பாத ஒரு விஷயத்திற்குள் அ.தி.மு.க தலைமை செல்வதற்கு வாய்ப்பில்லை” எனக் கூறுகிறார்.
ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு மட்டுமே கடந்த அ.தி.மு.க அரசு முயற்சி எடுத்ததாக கூறும் ஷ்யாம், “அந்த வீடும் நீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளுக்கு சென்றுவிட்டது” என்கிறார்.
‘தாக்கத்தை ஏற்படுத்தாது’ – மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்
பட மூலாதாரம், Facebook
படக்குறிப்பு, ஏலம் விடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முடிவெடுக்கும்போது அரசியல்ரீதியாக பாதிப்பு வருமோ என்று தான் யோசிப்பார்கள் எனக் கூறுகிறார் ஷ்யாம்
“ஜெயலலிதாவின் உடைமைகளை ஏலம் விடுவது பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துமா?” எனக் கேட்டோம்.
“அதற்கான வாய்ப்புகள் இல்லை. 1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்தது. இதன்பிறகு நகை, புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆனால், 1998 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 30 இடங்களில் அ.தி.மு.க வென்றது. மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என்கிறார்.
“தவிர, ஏலம் விடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முடிவெடுக்கும் போது அரசியல் ரீதியாக பாதிப்பு வருமோ என்று தான் யோசிப்பார்கள். அந்த வகையில் ஏலம் விடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே என்னுடைய கருத்தாக உள்ளது” எனக் கூறுகிறார் ஷ்யாம்.
தி.மு.க சொல்வது என்ன?
பட மூலாதாரம், Facebook
படக்குறிப்பு, ஏலம் விடுவதை மக்கள் வரவேற்கவே செய்வார்கள் எனக் கூறுகிறார் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்
ஆனால், இந்தக் கருத்தை தி.மு.க செய்தித் தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் மறுக்கிறார்.
“ஏலம் விடுவதன் மூலம் என்ன நேரும் என்பதை நாங்கள் பார்க்கவில்லை. அது மக்கள் பணம். அதை மக்களிடம் சேர்க்கும் போது ஊழல் செய்வது குறித்து மற்றவர்கள் அச்சப்படும் சூழல் ஏற்படும்” என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“எந்த அரசாக இருந்தாலும் ஏலம் விட்டுத் தான் ஆக வேண்டும். இதில் அரசியல் ரீதியான லாப, நஷ்டத்தைவிட சமூகத்துக்கு என்ன பலன் என்று தான் பார்க்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த வகையில், ஏலம் விடுவதை மக்கள் வரவேற்கவே செய்வார்கள் எனக் கூறுகிறார் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்.