தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை பெற, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு தேசிய அரசியலில் பெரும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் வடிவமைக்கப்படும் பி.எம்.ஶ்ரீ மாதிரிப் பள்ளிகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு மறுக்கிறது. பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்காததால் சமக்ரா சிக்ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை.
பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்துக்கும் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதிக்கும் சம்பந்தம் இல்லை, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி என்ற மத்திய அரசின் நிபந்தனை நியாயமற்றது என்று தமிழக அரசு கூறுகிறது.
பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் என்றால் என்ன?
பி.எம். ஸ்கூல்ஸ் ஆஃப் ரைசிங் இந்தியா என்பதன் சுருக்கமே பி.எம்.ஸ்ரீ பள்ளிகள். இந்தியா முழுவதிலும் 14,500 பள்ளிகளை முன்மாதிரிப் பள்ளிகளாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இப்பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக மாற்றி, அப்பள்ளிகள் அவற்றுக்கு அருகிலுள்ள பள்ளிகளை வழிநடத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தப் பள்ளிகள் இருக்கும் என புதிய கல்விக் கொள்கை-2020இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவோதயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உட்பட மத்திய/மாநில/யூனியன் பிரதேச அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படும். உயர்தர கல்வி, பாதுகாப்பான சூழல், பரவலான கற்றல் அனுபவங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தப் பள்ளிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பள்ளிகளாக உருவாக்கப்படும் என மத்திய அரசு கூறுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என, 2022ஆம் ஆண்டு மத்திய அரசு தெரிவித்தது.
பட மூலாதாரம், Getty Images
பி.எம்.ஶ்ரீ ஒப்பந்தத்தில் தமிழ்நாடு கையெழுத்திட்டதா?
பிஎம் ஸ்ரீ பள்ளிகளை 2024-2025 கல்வியாண்டுக்குள் தொடங்குவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது.
மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா 2024-ம் ஆண்டு மார்ச் 15 அன்று எழுதிய கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை மத்திய கல்வித்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
அந்த கடிதத்தில், “தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு ஆர்வமாக உள்ளது. பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில், மாநில அளவிலான குழு அமைக்கப்படும். அக்குழுவின் பரிந்துரை அடிப்படையிலேயே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த நிதியாண்டிற்கான மூன்று மற்றும் நான்காம் நிதி தவணைகளை வழங்குமாறும் மத்திய அரசிடம் அதில் கோரப்பட்டிருந்தது.
மத்திய அரசு என்ன கூறியது?
மத்திய கல்வித்துறை அமைச்சகம் 2024-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி தனது எக்ஸ் தள பக்கத்தில், “பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக முக்கிய முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்பது புதிய கல்விக் கொள்கை-2020இன் படி அமைந்த முன்மாதிரி பள்ளிகள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2024-25 கல்வியாண்டுக்குள் தமிழ்நாடு அரசு கையெழுத்திடும் என்றும் தமிழ்நாடு அரசுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கும் இடையேயான இந்த ஒப்பந்தம், வலுவான மத்திய-மாநில உறவுகளைக் குறிப்பதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
தமிழ்நாடு மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்காக இதைத் தாங்கள் மனமார வரவேற்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இப்போது சர்ச்சை ஏன்?
பி.எம்.ஶ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ என்கிற ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.
நிதி வழங்குவதற்கும் பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் ஒப்பந்தத்துக்கும் தொடர்பு இல்லை என தமிழக அரசு கூறி வரும் நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கூட இதற்கான ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கும் போது. தமிழ்நாடு ஏன் எதிர்க்கிறது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமக்ரா சிக்ஷா அபியான் என்பது என்ன?
கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் பிரீ.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரையிலான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமாகும். அனைவருக்கும் தரமான சமமான கல்வி கிடைப்பதும், ஆசிரியர் பயிற்சி மையங்களை வலுப்படுத்துவதும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.
‘சமக்ரா சிக்ஷா அபியான்’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் கல்வி ஆண்டுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.2,152 கோடி. இந்தத் தொகையை மத்திய அரசு முறையாக ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வருகிறது.
2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காசி தமிழ் சங்க நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றால் தான் நிதி வழங்கப்படும் என்று வெளிப்படையாக கூறினார்.
அப்போது நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் ரூ.2000 கோடி வரை நிலுவைத் தொகை உள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது “எனக்கு அது தெரியும், ஆனால், அரசமைப்பின் விதிமுறைகளை தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், PTI
படக்குறிப்பு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
பி.எம்.ஶ்ரீ விவகாரத்தில் தமிழ்நாடு ‘யு டர்ன்’ அடித்ததா?
பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு முதலில் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அதன் பின்னர் ஏதோ காரணத்தால் மாநில அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாகவும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மார்ச் 10-ஆம் தேதி மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டினார்.
“தமிழ்நாட்டு எம்.பி.க்கள் என்னை நேரில் வந்து சந்தித்து பேசினர். அப்போது இத்திட்டத்தை ஏற்றுக் கொள்வதாகவே தெரிவித்தனர். எனக்கு கொடுத்த தகவலின்படி, தமிழ்நாடு முதல்வர் இதற்கு ஒப்புக்கொண்டார். அதன் பின் சூப்பர் முதல்வர் கூறியதால் ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர். தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த திமுக உறுப்பினர் கனிமொழி, “மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஏற்கவில்லை. தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்பதாக நாங்கள் எப்போதும் கூறவில்லை” என்று தெரிவித்தார்.