2025, மார்ச் 2-ஆம் தேதி தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
அரசு மருத்துவமனைகளில் 1,300 யோகா பயிற்றுநர்கள் நியமிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி கூறுகிறது.
அந்த செய்தியின்படி, அனைத்து தரப்பு மக்களும் யோகா பயிற்சியை மேற்கொள்ளும் வகையில், அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆயுஷ் தேசிய நல்வாழ்வு மையங்களில், 650 இருபாலர் யோகா பயிற்றுநர்கள் மற்றும் 650 பெண் யோகா பயிற்றுநர்கள் என 1,300 பேரை நியமிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
விஜயலட்சுமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘மாவட்ட சுகாதார சங்கம் சார்பில், யோகா பயிற்றுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். பகுதிநேர அடிப்படையில் நியமிக்கப்படும் அவர்களுக்கு, ஒரு மணி நேரத்துக்கு ரூ.250 வீதம் மாதத்துக்கு 32 வகுப்புகளுக்கு ரூ.8,000 வழங்க வேண்டும். இதில், 20 வகுப்புகள் மருத்துவமனைகளிலும், 12 வகுப்புகள் பள்ளிகள், முகாம்களில் நடத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளில் மட்டும் வகுப்புகள் நடத்துபவர்களுக்கு, மாதம் ரூ.5,000 வழங்க வேண்டும். இதன்படி, யோகா பயிற்றுநர்கள் நியமிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
ரயிலில் ரூ.77 லட்சம் ஹவாலா பணத்துடன் இளைஞர் கைது
அரியலூரில் ரூ.77 லட்சம் ஹவாலா பணத்துடன் வந்த இளைஞரை வருமான வரித்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து திருச்சி செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் பிப்ரவரி 28 நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் அரியலூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயில்வே போலீசார் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
ஒரு பயணியின் பையில் சோதனை செய்தபோது, அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த பயணியை ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர், பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (வயது 28) என்பதும், சென்னையில் இருந்து அவர் அரியலூர் வந்ததும் தெரியவந்தது.
அந்த பையில் ரூ.77,11,640 பணம் இருந்தது. இதுகுறித்து வினோத்குமாரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் சரியான பதிலையோ, உரிய ஆவணங்களையோ அளிக்கவில்லை. இதனால் இதுகுறித்து திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர்.
நேற்று காலை அரியலூர் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு வருமான வரித்துறையினரிடம் வினோத்குமாரையும், பறிமுதல் செய்த பணத்தையும் போலீசார் ஒப்படைத்தனர்.
தற்போது வினோத்குமார் கைது செய்யப்பட்டு திருச்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கே விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இந்த பணம் ஹவாலா பணமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. மேலும் இதுதொடர்பான தகவல் விசாரணையில்தான் தெரியவரும்’ என்று தெரிவித்தனர்,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Daily Thanthi
படக்குறிப்பு, இளைஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம்
கன்னியாகுமரி: தேர் பவனியின் போது மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி
கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறை பகுதியில் சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் நான்கு மீன்பிடித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், இனயம்புத்தன்துறை பகுதியில் புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழா கடந்த 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை அந்தோணியார் தேர் பவனி நடைபெற இருந்தது.
தேர்பவனி செல்லும் பாதையில் மின் இணைப்புக் கம்பிகளின் இடையூறைக் குறைக்கும் பணியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த விஜயன் (52), ஜஸ்டஸ் (33), சோபன் (45), மனோ (40) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
நான்கு சக்கரம் பொருத்தப்பட்ட உயரமான இரும்பு ஏணியை இந்த பணிகளுக்காக பயன்படுத்தினார்கள். அதனை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முயன்ற போது உயரழுத்த மின்கம்பியில் ஏணி உரசி, மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே நால்வரும் உயிரிழந்தனர்.
அரசுப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்பட்டால் ரோஹிஞ்சா மக்கள் நீதிமன்றத்தை நாடலாம்
மியான்மரியில் இருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்களின் குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்பட்டால் உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“ரோஹிஞ்சா குழந்தைகளுக்கு அரசுப்பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் சூர்யகாந்த், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கொலின் சோன்சால்வ்ஸ் வாதிடுகையில், “இந்தக் குழந்தைகள் அகதிகளுக்கான ஐ.நா. ஆணையர் வழங்கியுள்ள அட்டைகள் வைத்துள்ளனர். இவர்கள் ஆதார் அட்டை பெற முடியாது. ஆதார் அட்டை இல்லை என்பதால் அரசுப் பள்ளிகளில் இவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது,” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள்,”இக்குழந்தைகள் முதலில் அரசுப் பள்ளிகளை அணுக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அங்கே அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் அவர்கள் உயர் நீதிமன்றத்தை நாடலாம்,” என்று தெரிவித்தனர்.
ஏற்கனவே இந்த குழந்தைகளுக்காக தொடக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம், “கல்வி வழங்குவதில் எந்தக் குழந்தைக்கும் பாகுபாடு காட்டக்கூடாது,” என்று உத்தரவிட்டது” என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கல்வி வழங்குவதில் எந்தக் குழந்தைக்கும் பாகுபாடு காட்டக்கூடாது என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றொரு தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. (கோப்புப் படம்)
ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் ஏலம்
இலங்கை ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் வெள்ளிக்கிழமை (28 ) நடைபெற்றது என்று வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
பட மூலாதாரம், Virakesari
படக்குறிப்பு, வாகனங்களை சோதிக்கும் வர்த்தகர்கள்
“அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் மற்றும் நிதி பொறுப்புக்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இவ்வாறு ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 09 டிபெண்டர் ரக ஜீப்கள், வொல்வோ ரக ஜீப் ஒன்று, க்ரயிஸ்லர் ரக வாகனம் ஒன்று, மஹேந்திரா பொலெரோ வாகனம் ஒன்று, ரோஸா பஸ் ஒன்று, டிஸ்கவரி வாகனம் மற்றும் டொயாடோ மோட்டார் வாகனம் உள்ளடங்களாக 15 வாகனங்கள் நேற்று ஏலமிடப்பட்டிருந்ததுடன், மிகுதி வாகனங்களும் விரைவில் ஏலமிடப்படவுள்ளன.
இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் நிரந்தர பணிக்குழாமிற்காக வழங்கப்பட்டிருந்த வாகனங்கள் இல்லை என்பதுடன், முன்னாள் ஜனாதிபதியினால் தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (1) உறுப்புரையின் கீழ் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் பணிக்குழுவினால் பயன்படுத்தப்பட்ட வாகனங்களாகும்.
இந்த வாகனங்ளை கொள்வனவு செய்வதற்கு பெருமளவான கேள்வி காணப்பட்டதுடன் ஏலங்களை ஏற்றுக்கொள்வது நேற்று பகல் 12.00 மணி வரையில் இடம்பெற்றதுடன், இரவு 8.00 மணி வரையில் ஏலம் திறக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் 199 வர்த்தகர்கள் கலந்துகொண்டிருந்தனர்,” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.