உத்தரப்பிரதேசத்தின் கடனை விட தமிழ்நாட்டின் கடன் மிக அதிகம் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீண் சக்கரவர்த்தி ஒரு சமூகவலைதள பதிவில் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரவீண் சக்கரவர்த்தியின் கருத்து பொருளாதார ரீதியாக சரியா?
சமீபத்தில் தி.மு.கவின் மகளிரணி மாநாடு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “அ.தி.மு.க. ஆட்சியைவிட்டு வெளியேறியபோது தமிழ்நாடு மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. எந்த வளர்ச்சியும் இல்லாமல், கடன் சுமையால் சூழப்பட்டிருந்தது; இப்போது, தி.மு.க. தமிழ்நாட்டை முன்னேறிய, வளர்ந்த மாநிலமாக மாற்றியுள்ளது” என்று கூறியிருந்தார்.
இந்தச் செய்தி தொடர்பான சமூகவலைதளப் பதிவை மேற்கோள்காட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புரொஃபஷனல் காங்கிரஸ் பிரிவின் தலைவரான பிரவீண் சக்கரவர்த்தி தெரிவித்த கருத்துகள்தான் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
கனிமொழியின் கருத்தை மேற்கோள் காட்டிய பிரவீண் சக்கரவர்த்தி , “எல்லா மாநிலங்களிலும் பார்க்கையில், தமிழ்நாட்டிற்கே அதிக கடன் இருக்கிறது. 2010ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்திற்கு தமிழ்நாட்டைப் போல இரு மடங்கு கடன் இருந்தது. தற்போது, உத்தரபிரதேசத்தைவிட அதிக கடனை தமிழ்நாடு வைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் வட்டிச் சுமை என்பது சதவீத அடிப்படையில் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கு அடுத்ததாக, மூன்றாவது இடத்தில் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கடன்/ஜிடிபி விகிதம் என்பது, கோவிட் காலத்திற்கு முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிட்டால் அதிகமாகவே இருக்கிறது என்றும் தமிழ்நாட்டின் கடன் நிலைமை அபாயகரமாகவே இருக்கிறது” என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பட மூலாதாரம், Praveen Chakravarty/X
படக்குறிப்பு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் பிரவீண் சக்கரவர்த்தி
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அவரது இந்தப் பதிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் அவரது இந்தப் பதிவை முன்வைத்து கேள்விகளை எழுப்பின. விரைவிலேயே, காங்கிரஸ் கட்சியினரே இதற்குப் பதிலளிக்க ஆரம்பித்தனர்.
பிரவீண் சக்கரவர்த்தியின் பதிவுக்கு கீழேயே அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சசிகாந்த் செந்தில், ஜோதிமணி உள்ளிட்டோர் பிரவீண் சக்கரவர்த்தியின் கருத்து சரியானதல்ல என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதன் உச்சகட்டமாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகையே பிரவீண் சக்கரவர்த்தியின் கருத்து, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என குற்றம்சாட்டினார்.
ஆனால், பிரவீண் சக்கரவர்த்தி மட்டுமல்ல, வேறு பலரும் பல தருணங்களில் மாநிலங்களின் கடன்களைச் சுட்டிக்காட்டி விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். தமிழ்நாடு எந்த அளவுக்குக் கடன் வாங்கியுள்ளது? மாநிலங்கள் எந்த அளவுக்குக் கடன் வாங்கலாம்?
தமிழ்நாட்டின் கடன் எவ்வளவு?
இந்திய ரிசர்வ் வங்கி தரும் புள்ளி விவரங்களின்படி 2025 – 26ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் 9,55,690.5 லட்சம் கோடி ரூபாய். உத்தரப்பிரதேச அரசின் மொத்தக் கடன் 8,57,844 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.
தொகை என்ற அடிப்படையில் பார்க்கும்போது உத்தர பிரதேசத்தின் கடனைவிட, தமிழ்நாட்டின் கடன் தொகை அதிகம்தான்.
பட மூலாதாரம், Getty Images
ஆனால், ஒரு மாநிலத்தின் கடன் சுமையை தொகை அடிப்படையில் அளவிடுவது சரியல்ல என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
“பொதுவாக ஒரு மாநிலத்தின் கடன் என்பது, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஜிடிபி-யில் (ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி) எத்தனை சதவீதம் என்ற அடிப்படையில்தான் கணக்கிட வேண்டும். உதாரணமாக, ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குபவரும் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவரும் ஒரே தொகையை கடனாகப் பெற்றிருந்தாலும் இருவரது கடன் சுமையும் ஒன்றல்ல. இந்த அடிப்படையில்தான் மத்திய அரசே கடன் வரம்புகளை நிர்ணயிக்கிறது” என்கிறார் ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான கே. பிரபாகர்.
அரசின் கடன் என்பது என்ன?
உலகம் முழுவதுமே அரசுகள் பல விதங்களில் கடன்களை வாங்குகின்றன. இந்தியாவிலும் மத்திய அரசும் மாநில அரசுகளும் கடன்களைப் பெறுகின்றன. மாநில அரசுகளைப் பொறுத்தவரை நேரடியாக மத்திய அரசிடமிருந்து கடன் பெற முடியும். மத்திய அரசின் அனுமதியைப் பெற்று வேறு விதங்களிலும் கடன்களைப் பெற முடியும்.
உதாரணமாக, மாநில அரசுகள் நீண்ட கால கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் கடன்களைப் பெறுகின்றன. இவையெல்லாம் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும். இது தவிர, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களும் கடன்களைப் பெறுகின்றன. இவற்றைச் செலுத்த வேண்டியது அந்தந்த நிறுவனங்களின் பொறுப்பு.
ஆனால், அரசுகள் தாங்கள் விரும்பும் அளவுக்கு கடன் வாங்கிவிட முடியாது. இந்தியாவில் மத்திய அரசும் மாநில அரசுகளும் எந்த அளவுக்கு நிதிப் பற்றாக்குறையை (fiscal Deficit) வைத்திருக்கலாம், எந்த அளவுக்குக் கடன் வாங்கலாம் என்பதற்கு சில வரையறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
பட மூலாதாரம், Getty Images
நிதிப் பற்றாக்குறை, கடன்கள் ஆகியவற்றை வரையறுப்பதற்காக 2003ல் ஆம் ஆண்டில் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை (Fiscal Responsibility and Budget Management Act – FRBMA) என்ற சட்டம் இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில் நிதி ஆணையங்கள் கடன் வரம்புகளையும் நிதிப் பற்றாக்குறை வரம்புகளையும் நிர்ணயிக்கின்றன.
தற்போது அமலில் உள்ள 15வது நிதி ஆணையம் வரையறுத்த வரம்புகளின்படி 2025 – 26ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கடன், மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 28.7 சதவீதமாக இருக்கலாம். தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின்படி தமிழ்நாட்டின் மொத்தக் கடன், இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26.7 சதவீதமாக இருக்கும். உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை, இந்தக் கடன் அளவு அந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 29.4 சதவீதமாக இருக்கும்.
இந்த விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால், உத்தரபிரதேசத்தின் கடன் விகிதம் தமிழ்நாட்டின் கடன் விகிதத்தைவிட அதிகம்.
இந்திய ரிசர்வ் வங்கியும் மாநிலங்களின் நிதி நிலை அறிக்கைகளின் அடிப்படையில் கடன் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது. அதன்படி பார்த்தால் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதவாக்கில், தமிழ்நாட்டின் கடன் விகிதம், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30.3 சதவீதமாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் கடன் விகிதம் 31.8 சதவீதமாக இருக்கிறது.
இருந்தபோதும் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் கணிசமாக உயர்ந்திருக்கிறது என்பது உண்மைதான்.
2020 -21ல் சுமார் 5.7 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மாநிலத்தின் மொத்தக் கடன் 2024-25ல் சுமார் ஒன்பது லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.
“இதில் வெவ்வேறு விதமான கணக்கீடுகள் உள்ளன. 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கடனை எடுத்துக்கொண்டால், அதனை இருவிதமாகப் பார்க்கலாம். ஒன்று, நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் கடன். இது சுமார் 8.3 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். ஆனால், நிதிநிலை அறிக்கைக்கு வெளியில் வாங்கும் கடன்கள், மத்திய திட்டங்களுக்கு அளிக்க வேண்டிய நிதி பாக்கி ஆகியவற்றையும் சேர்த்தால் இது சுமார் 9 லட்சம் கோடி ரூபாயைத் தொடும்” என்கிறார் கே. பிரபாகர்.
அதே நேரத்தில் உத்தரப்பிரதேசத்தின் கடன்களும் கடந்த ஐந்தாண்டுகளில் கணிசமாக அதிகரித்திருக்கின்றன.
2020-21ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தின் மொத்தக் கடன் 5.64 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2024-25ல் இந்தத் தொகை 8.13 – 8.17 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
“அதே நேரத்தில் நிதிப் பற்றாக்குறையைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை 2024-25ஆம் நிதியாண்டில் 3 சதவீதமாக இருக்கிறது. ஆனால், உத்தரப்பிரதேசத்தின் நிதிப் பற்றாக்குறை 3.46 சதவீதமாக இருக்கிறது. தவிர தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி மிகச் சிறப்பாக இருப்பதால் உத்தரப்பிரதேசத்தைவிட, தமிழ்நாட்டின் கடன் தாங்கும் திறன் அதிகம்” என்கிறார் கே. பிரபாகர்.
பொருளாதாரப் பேராசிரியர் ஜோதி சிவஞானமும் இதே கருத்தை எதிரொலிக்கிறார். “நிதி ஆணையம் ஒரு வரம்பை நிர்ணயித்த பிறகு அதனைத் தாண்டி கடன்பெற முடியாது. அப்படி கடன் பெற மத்திய அரசின் அனுமதி தேவை. வரம்பைத் தாண்டி கடன்பெற கேரளா விரும்பிய போது மத்திய அரசு அனுமதிக்கவில்லை. ஆகவே அனுமதித்த வரம்புக்குள்தான் தமிழ்நாட்டின் கடன்கள் இருக்கின்றன. இரு மாநிலங்களின் கடன்களை தொகை அடிப்படையில் (Absolute terms) பார்ப்பது சரியல்ல” என்கிறார் அவர்.
இந்த ஒட்டுமொத்த சர்ச்சையும் பிரவீண் சக்கரவர்த்தியின் பதிவிலிருந்துதான் துவங்கியது. இது தொடர்பாக அவரது கருத்தைப் பெற முயன்றபோது, அவர் பதிலளிக்கவில்லை.