பட மூலாதாரம், X- DMK/ADMK
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடக்கவுள்ளது. மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு தேர்தலையும் போலவே, இந்தத் தேர்தலும் குறிப்பிடத்தக்க அரசியல் கவனத்தை தேசியளவில் பெற்றுள்ளது.
தமிழ்நாடு, திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே மாறி மாறி ஆட்சி மாற்றம் நிகழும் இருமுனைத் தேர்தல் கட்டமைப்புக்காக நீண்ட காலமாக அறியப்படுகிறது.
இருப்பினும், 2026 தேர்தல் இந்த வழக்கமான பாணியில் நடைபெறும் மற்றொரு வழக்கமான போட்டியாக அமையவில்லை.
புதிய அரசியல் பிரவேசங்கள், மாறி வரும் தேசிய சூழல் ஆகியவற்றின் கலவை, இந்தத் தேர்தலுக்கு ஒரு தனித்துவமான மாறுபட்ட தன்மையை அளித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் முதல் விஜயின் அரசியல் பிரவேசம் வரை, திராவிட கட்சிகளின் லட்சியங்கள் முதல் தேசிய அளவிலான முக்கியத்துவம் வரை, பல காரணிகள் இந்தத் தேர்தலை தனித்துவமான வழிகளில் வடிவமைக்கின்றன.
இந்தச் சூழலில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முந்தைய தேர்தல்களில் இருந்து தனித்து நிற்பது ஏன் என்பதற்கான ஐந்து முக்கியக் காரணங்களை இங்கு தெரிந்துகொள்வோம்.
1. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் 19 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 97.30 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. பின்னர் தேவையான மாற்றங்கள் மற்றும் சேர்க்கைகளைச் செய்த பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் முன்பிருந்த பட்டியலைவிட 74,07,207 பேர் குறைவாக உள்ளனர். சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு முன்பு, 6,41,14,587 வாக்காளர்கள் இருந்தனர். முந்தைய வாக்காளர் பட்டியலில் இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கையைவிட பிப்ரவரியில் வெளியிடப்பட்ட பட்டியலில் 12 சதவிகிதம் குறைவாக உள்ளது. தற்போதைய பட்டியலின்படி, 5,67,07,380 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இத்தகைய சீர்திருத்தம் புதியதல்ல என்றாலும், இந்த செயல்முறை தமிழ்நாட்டில் அரசியல் ரீதியான முக்கியத்துவத்தை பெற்றது
வாக்காளர் சேர்க்கைகள், நீக்கங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து அரசியல் கட்சிகளால் கேள்விகள் எழுப்பப்பட்டன. வழக்கமான திருத்தங்களைப் போலன்றி, இந்த சிறப்புத் தீவிர திருத்தம் ஒரு பேசுபொருளாக மாறியது.
ஆனால், “எஸ்.ஐ.ஆர் மூலம் ஏற்பட்ட மாற்றங்களால் பெரியளவிலான தாக்கம் தேர்தல் முடிவுகளில் இருக்காது. முன்பு இருந்ததைவிட தற்போது பதிவாகும் வாக்குகளின் சதவிகிதம் அதிகரிக்கும். இருப்பினும், அதன் தாக்கம் தேர்தல் முடிவுகளில் எதிரொலிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு,” என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன்.
பட மூலாதாரம், Getty Images
2. விஜய் அரசியல் பிரவேசம்
நடிகர் விஜய் தீவிர அரசியலில் நுழைந்திருப்பது, 2026 தேர்தலுக்கு ஒரு புதிய மற்றும் கணிக்க இயலாத பரிமாணத்தைச் சேர்த்துள்ளது.
குறிப்பாக, இளம் வாக்காளர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு, பாரம்பரிய கட்சிகளின் சித்தாந்தங்களுடன் வலுவாக இணைந்திருக்காத ஒரு புதிய வாக்காளர் தளத்தை உருவாக்குகிறது.
“விஜய்க்கு கூடும் கூட்டத்தின் அடிப்படையில் அவருக்கு குறிப்பிட்ட சதவிகிதத்திலான வாக்குகள் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஆனால், அது இன்னும் உறுதியாக சோதிக்கப்படவில்லை. இந்தத் தேர்தலின் முடிவில்தான் அவருக்குக் கூடுகின்ற கூட்டம் வாக்குகளாக மாறுகின்றனவா என்பது குறித்த தெளிவான புரிதல் கிடைக்கும்,” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சிகாமணி.
“இருப்பினும், அரசியல் களத்தில் இதுவரை நாம் அவதானித்த காரணிகளின் அடிப்படையில் பார்த்தால், விஜயின் அரசியல் வருகை சற்று வித்தியாசமான பார்வையை வழங்குகிறது. உதாரணத்திற்கு விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது, அவருக்கு விவசாயிகள், தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்புகளிலும் இருந்தும் கணிசமான ஆதரவு கிடைப்பது போலத் தெரிந்தது.
ஆனால், விஜய்க்கு அப்படியல்லாமல் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மட்டுமே அதிகமான ஆதரவு இருப்பது போன்ற தோற்றம் தென்படுகிறது. இளைஞர்களின் வாக்குகளில் அனைத்தும் விஜய்க்கே வரும் எனச் சொல்லிவிட முடியாது என்றாலும், மிகைப்படுத்தப்பட்ட பிம்ப அரசியலின் மூலமாக மேற்கொள்ளப்படும் இந்த அணுகுமுறை குறிப்பிட்ட அளவிலான இளைய தலைமுறை வாக்குகளைப் பெறுவதற்கு வித்திடக்கூடும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், TVK/X
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் குறைந்தபட்சம் 8 முதல் 10 சதவிகிதம் வரையிலான வாக்குகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது என்கிறார் அரசியல் விமர்சகர் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.
அதேவேளையில், விஜயின் அரசியல் என்பது புதுவிதமான அரசியலாக இருக்கிறது என்கிறார் அவர்.
அதாவது, “எந்தவிதமான அரசியல் பணிகளையும் செய்யாமல், அரசியல் பின்புலமின்றி, தொடக்கத்திலேயே கட்சி அமைத்து, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முனையும் வகையில் நிலைமை மாறியுள்ளது.” என்று குறிப்பிட்டார் ராமு மணிவண்ணன்.

3. திமுகவின் முனைப்பு
அதிமுக உருவானதில் இருந்து, மாநிலத்தில் பெரும்பாலும் திமுக மற்றும் அதிமுக இடையே மாறி மாறி வரும் ஆட்சியே இருந்து வருகிறது.
குறிப்பாக, திமுக-வின் வரலாற்றில் 1971க்கு பிறகு இதுவரை இரண்டாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சி அமைப்பதென்பது நடந்ததில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக அக்கட்சி தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என கூறுகிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.
அதுகுறித்துப் பேசிய அவர்,” எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் தொடர்ந்து மூன்று முறை, ஜெயலலிதா காலகட்டத்தில் தொடர்ந்து இரண்டு முறை என அதிமுக ஆட்சிக்கு வந்துள்ளது. அப்படியான சாதகம் இருக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென திமுக முனைகிறது.” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன், “திமுகவுக்கு அதிமுகவுடன் ஒப்பிடுகையில் பெருமளவிலான பெண்களின் ஆதரவு இருந்தது கிடையாது. ஆனால் இந்த நிலையை மாற்றுவதில் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் ஸ்டாலின் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டுள்ளார்.” என்கிறார்.
அதேவேளையில், இரண்டாவது முறை வென்றாக வேண்டும் என்பதில் அக்கட்சி முனைப்புடன் இருந்தாலும் அதைச் சாத்தியப்படுத்துவதில் சில சவால்களும் இருப்பதாகக் கூறுகிறார் இளங்கோவன்.
தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு மனநிலை கொண்ட வாக்காளர்களின் வாக்குகளைப் பெறுவதில் திமுக கவனமாக இருக்கிறது. ஆனால், இந்த நிலையை தவெக-வின் வருகை மாற்றுவதாகக் குறிப்பிடுகிறார் அவர்.
மேலும், திமுக எதிர்ப்பு மற்றும் ஆட்சி எதிர்ப்பு மனநிலை கொண்டவர்களின் வாக்குகளை இழப்பது திமுகவுக்கு ஒரு சிக்கலாக அமையும் என்றும் கூறுகிறார் அவர்.
மேலும், “கூட்டணியில் காங்கிரஸ் உடன் ஏற்பட்ட சச்சரவுகள், அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன், அன்புமணி ஆகியோர் இணைந்தது திமுகவுக்கு அந்தந்த பிராந்தியங்களில் பலவீனமாக அமைந்துள்ளது. அதை ஈடுகட்ட தேமுதிக-வை உள்ளே கொண்டு வந்தார்கள். இருப்பினும், இந்தச் சவாலை எதிர்கொள்வதில் அது எப்படி பலனளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று விளக்கினார் இளங்கோவன்.
பட மூலாதாரம், Edappadi Palanisamy
4. அதிமுக-வுக்கு அழுத்தம் நிறைந்த தேர்தல்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 1967 முதல் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளே ஆட்சியமைத்து வருகின்றன. காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகள் இந்த இரண்டு திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் பங்கு வகிக்கும் சூழலே நிலவியது.
இந்த நிலையைச் சிறிதளவுக்கு மாற்றியது 2016-ஆம் ஆண்டில் உருவான மக்கள் நலக் கூட்டணிதான் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன்.
“அப்போதுதான், நிறைய கட்சிகள் ஒன்றுகூடி கூட்டணி அமைத்து, இந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கு சவால் கொடுத்தது. ஆனால் இந்தக் கூட்டணி ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமைந்து, திமுகவின் தோல்விக்கு வித்திட்டது. இதன்மூலம் தொடர்ந்து பத்து ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் நீடிக்க முடிந்தது.
அதற்குப் பிறகு மீண்டும் அதேபோல, திமுக, அதிமுக இடையிலான போட்டியாகவே தமிழக அரசியல் சூழல் தொடர்ந்தது. இப்போது 2026-இல் அந்த நிலையை விஜயின் அரசியல் பிரவேசம் மாற்றலாம்,” என்று விளக்கினார் அவர்.
ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவைத் தொடர்ந்து, தமிழக அரசியல் சூழல் வேறு பரிமாணத்திற்கு மாறியது. குறிப்பாக, அதிமுக உட்கட்சி சவால்களை எதிர்கொண்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அக்கட்சி தன்னை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முயன்று வருகிறது.
“விஜய்க்கு தற்போதுள்ள கணிசமான ஆதரவு, திமுக, அதிமுகவுக்கு நிகராக நெருக்கமான வாக்கு சதவிகிதத்தைப் பெற்றுவிடுவாரா என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. இது, 2016-இல் உருவான மக்கள் நலக் கூட்டணி எப்படி திமுகவுக்கு பாதகமாக அமைந்ததோ, அதேபோல, இப்போது புதிய சக்தியாக நுழைந்துள்ள தவெக யாரைப் பாதிக்கப் போகிறது என்ற மில்லியன் டாலர் கேள்வியை எழுப்பியுள்ளது.” என்கிறார் இளங்கோவன்.
பட மூலாதாரம், Getty Images
“இப்படிப்பட்ட சூழலில், திடீரென உள்ளே நுழைந்த விஜயின் தவெக, வாக்கு வங்கிகளைச் சீர்குலைத்துள்ளது. இதனால், வழக்கமாக தேர்தலின்போது கணிசமாக இருக்கும் ஆட்சி எதிர்ப்பு மனநிலை கொண்ட வாக்குகள் அதிமுகவுக்கு செல்வது போல நடக்காமல், அந்த வாக்குகள் சிதறடிக்கப்படும். இது அதிமுகவுக்கே பாதகமாக அமையக்கூடும்,” என்று கூறுகிறார் அவர்.
அவரது கூற்றை ஆமோதிக்கும் வகையில் பேசிய அரசியல் விமர்சகர் பேராசிரியர் ராமு மணிவண்ணன், “எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தற்போது இருக்கும் பலவீனமான நிலையில், அதன் வாக்கு சதவிகிதம் குறையக்கூடும். எடப்பாடி பழனிசாமிக்கு தனது தலைமையிலான கட்சியின் செயல்பாட்டை நிரூபித்தாக வேண்டிய கட்டாயமும் சவாலும் இருக்கிறது.” என்று விளக்கினார் ராமு மணிவண்ணன்.
மேலும், “முந்தைய தேர்தல்களில் திமுக, அதிமுக ஆகியவையே பிரதான கட்சிகளாக இருக்கும். இப்போது பாஜக பின்னணியில் ஒரு முக்கியக் கட்சியாகச் செயல்படுகிறது. மற்றொருபுறம், தவெக பிரதான கட்சிகளின் வாக்கு வங்கியை குலைக்கும் வகையில் செயல்படுகிறது.” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Edappadi Palanisamy
5. பாஜகவுக்கு இந்தத் தேர்தல் எவ்வளவு முக்கியம்?
பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாடு சவால் மிக்கதாகவும் முக்கியமான வாய்ப்பாகவும் விளங்குகிறது.
பாஜக தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய போதிலும், தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிப்பதற்கு அக்கட்சி போராடி வருகிறது.
“பாஜகவை பொறுத்தவரை, இந்தத் தேர்தல் உடனடி வெற்றிகளைப் பற்றியதாக மட்டுமின்றி, அதன் அமைப்பு ரீதியான அடித்தளத்தை வலுப்படுத்துவது, வாக்கு சதவிகிதத்தை அதிகரிப்பது, தன்னை ஒரு நம்பகமான மூன்றாவது சக்தியாக நிலைநிறுத்துவது ஆகியவற்றை முக்கிய இலக்குகளாகக் கொண்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கான அரசியலை அவர்கள் இன்னும் முன்னெடுக்கவில்லை.” என்கிறார் இளங்கோவன்.
தொடர்ந்து பேசிய அவர், “பாஜக மீதான எதிர்ப்பு மனநிலை மாநிலத்தில் இன்னமும் வலிமையாக இருக்கும் சூழலை உடைத்தாக வேண்டும் என்பதில் அவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். அதற்காகவே அதிமுக உடனான கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.” என்றும் தெரிவித்தார்.
இதற்கு முன்பு இருந்ததைவிட தற்போது கூட்டணியில் 27 தொகுதிகளை பாஜக பெற்றுள்ளது என கூறும் இளங்கோவன், “ஒருவேளை அவர்கள் குறைந்தபட்சம் 15 தொகுதிகளையாவது பிடித்துவிட்டால், தமிழ்நாடு பாஜக எதிர்ப்பு மாநிலம் என்ற பார்வையை அது மாற்றியமைக்கும். அதற்குப் பிறகு, தமிழ்நாடு பாஜக எதிர்ப்பு மாநிலம் என்று கூற முடியாது” என்கிறார்.
இந்தக் காரணிகள் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும்போது, 2026 சட்டமன்றத் தேர்தல் முந்தைய தேர்தல்களைப் போன்றதல்ல என்பது தெளிவாகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு