பட மூலாதாரம், ANI
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. இன்று (15-03-2026) மாலை 4 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி,
- தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடக்கிறது.
- அசாமில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- கேரளாவிலும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
- நான்கு மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
- வேட்புமனுத் தாக்கல் தொடக்கம் : 30-03-2026
- வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் : 06-04-2026
- வேட்புமனு பரிசீலனை : 07-04-2026
- வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் : 09-04-2026
- வாக்குப் பதிவு நாள் : 23-04-2026
- வாக்கு எண்ணிக்கை : 04-05-2026
தமிழ்நாட்டில் 2021ல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதன் ஐந்தாண்டு கால ஆட்சிக் காலம் மே மாதம் முடிவுக்கு வருகிறது.
அதேபோன்று, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக ஆட்சி, கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியின் 5 ஆண்டு பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.