தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சரியாக 8 மணிக்கு தொடங்கி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காலை 10:35 நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 107 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 76 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 51 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 2277 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு அங்கு 12,916 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 8254 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 3299 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.
பெரம்பூர் தொகுதியில் முதல் சற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 6469 வாக்குகள் பெற்று விஜய் முன்னிலை வகிக்கிறார்.
சேப்பாக்கம் தொகுதியில், உதயநிதி ஸ்டாலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 293 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 3 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
சுமார் 08:30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
இந்த பகுதியை காண்பதற்கு ஜாவாஸ்கிரிப்ட் கொண்ட ஒரு நவீன உலாவியும், நிலையான இணைய இணைப்பும் தேவை.
முடிவு எதிர்பார்க்கப்படுகிறது
சமீபத்திய முடிவுகளைக் காண பக்கத்தைப் புதுப்பிக்கவும்
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
பிராந்தியக் கட்சிகள் தலைமையிலான இரண்டு முக்கிய கூட்டணிகள் களத்தில் உள்ளன. ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணி, மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தலைமையிலான கூட்டணி.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி மூலம் முதன்முதலாகத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.
சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.
சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம், ராமதாஸ் மற்றும் இதர அமைப்புகளுடன் இணைந்து கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி 120 தொகுதிகளில் போட்டியிட்டது.
படக்குறிப்பு, காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் (சூலூரில் உள்ள ஒரு வாக்கு எண்ணிக்கை மையம்)
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி 75,064 வாக்குச் சாவடிகளில் ஒரே கட்டமாக நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து நடைபெற்ற வாக்குப்பதிவில், இதுநாள் வரையில் இல்லாத அளவாக 85.10% வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்த வாக்குகள் அனைத்தும் மாநிலம் முழுவதும் 62 மையங்களில் எண்ணப்பட உள்ளன. தலைநகர் சென்னையில் மூன்று இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 234 வாக்கு எண்ணும் அரங்குகளும் தபால் வாக்குகளை எண்ணுவதற்காக கூடுதலாக 240 அரங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக 10,545 பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணும் நடைமுறையைக் கண்காணிக்க 4,624 மைக்ரோ கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொடு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தனித்தனியாக என 234 கண்காணிப்பாளர்களும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூன்றடுக்கு பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
முதல் கட்டமாக வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி 100 மீட்டர் அளவிற்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருபவர்களின் அடையாளம் காவல்துறையால் உறுதிபடுத்தப்பட்டு உரிய சோதனைகள் செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.
இரண்டாவது கட்டமான ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்தில் நுழைவு வாயிலிலும் காவல்துறையின் சோதனை சாவடி அமைக்கப்பட்டிருக்கும். வாக்கு எண்ணப்படும் இடத்திற்குள் உள்ளே நுழைபவர்கள் பரிசோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மொபைல் போன தொடர்பு சாதனங்கள் அனுமதிக்கப்படும்
மூன்றாவது கட்டமாக வாக்குகள் எண்ணப்படும் அரங்குகள் மற்றும் இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்கள் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். முழுமையான பரிசோதனைகளுக்குப் பிறகே தேர்தல் அலுவலர்கள் மற்றும் முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். வாக்கு எண்ணும் அரங்குக்கு உள்ளே மொபைல் போன்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
தற்போது முதல் முறையாக க்யூ-ஆர் அடிப்படையிலான அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் அரங்கிற்குள் க்யூ-ஆர் ஸ்கேனிங் மூலம் உறுதிசெய்யப்படும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்பிறகு சுமார் 08:30 மணிக்கு இவிஎம் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும்.
ஒவ்வொரு சுற்று முடிவின்போது பெறப்பட்ட வாக்குகள் தேர்தல் அலுவலர்களால் ஒலிப் பெருக்கிகள் மூலம் அறிவிக்கப்படும். அதே போல தேர்தல் ஆணையத்தின் செயலி மற்றும் இணையதளத்திலும் முடிவுகள் வெளியாகும்.
புதுச்சேரி தேர்தல் முடிவுகள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, புதுச்சேரியிலும் இதுநாள் வரையிலும் இல்லாத அளவில் அதிகபட்சமாக 91.23% வாக்குகள் பதிவாகியிருந்தன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக – அதிமுக கூட்டணி, காங்கிரஸ் – திமுக – விசிக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி தேர்தலைச் சந்தித்தன. இவை போக பாட்டாளி மக்கள் கட்சியும் சில இடங்களில் போட்டியிட்டது.
புதுச்சேரியிலும் இதுநாள் வரையிலும் இல்லாத அளவில் அதிகபட்சமாக 91.23% வாக்குகள் பதிவாகியிருந்தன.