பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
‘மறவாதீர்கள், உங்கள் சின்னம் ———-‘, ‘நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம்——–‘-
இத்தகைய குரல்களை 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் ஓர் அங்கமாக நாம் இன்னும் சில நாட்களுக்குத் தொடர்ந்து கேட்கப் போகிறோம்.
தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், சிறு கட்சிகள், அதன் சித்தாந்தங்கள், வேட்பாளர்கள், கடந்த கால வரலாறு என எல்லாவற்றையும் கடந்து, ஒரு கட்சியின் ‘சின்னம்’ என்பது ஒவ்வொரு தேர்தலிலும் குறிப்பிட்டளவு தாக்கம் செலுத்துகிறது, “குறிப்பாக பொது மக்களிடையே” என சில ஆய்வுகளும் கூறுகின்றன.
சுவர்களில் ஓவியங்களாக, சுவரொட்டிகளாக, பேனர்களில், பிரசார வாகனங்களில் என கட்சிகளின் சின்னங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன.
ஒரு கட்சி பிரிந்தால், ‘அதன் சின்னம் யாருக்கு?’ என நடக்கும் போட்டிகளை, சட்ட வழக்குகளை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 25 அக்டோபர் 1951 முதல் 21 பிப்ரவரி 1952 வரை நடைபெற்றது. அப்போது இந்தியாவின் கல்வியறிவு விகிதம் என்பது 18.32%, அதுவே 2011ஆம் ஆண்டின் தரவுப்படி கல்வியறிவு விகிதம் 72.98%.
இந்த வித்தியாசமே தேர்தலில் கட்சிகளுக்கான சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
தேர்தல்களில் வாக்களிக்க கல்வியறிவற்ற வாக்காளர்களுக்கு உதவும் வகையில், வேட்பாளரின் பெயருக்கு அருகில் கட்சி அல்லது வேட்பாளரின் சின்னம் இடம் பெறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
ஒரு வாக்காளர், கட்சியின் அல்லது வேட்பாளரின் பெயரைப் படிப்பதற்குப் பதிலாக, வாக்குச் சீட்டு/மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள சின்னத்தை நேரடியாகப் பார்ப்பது அவர்களுக்கு வாக்களிக்க உதவியாக இருக்கும்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படும் இந்தச் சின்னங்கள், கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்களில் பிரதானமாக காட்டப்பட்டு, அவர்களின் அடையாளங்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சின்னங்களின் தாக்கம் என்பது தமிழ்நாட்டின் தேர்தல்களில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே உள்ளது என சில ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன.
அது குறித்து பார்ப்பதற்கு முன், சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி பார்க்கலாம்.
சின்னங்கள் ஒதுக்கப்படும் முறை
பட மூலாதாரம், Getty Images
இந்திய தேர்தல் ஆணையம் இந்தச் சின்னங்களை இரு வகையாகப் பிரிக்கிறது.
1. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட சின்னங்கள்.
அந்த அங்கீகரிக்கப்பட்ட கட்சியால் அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் மட்டுமே தேர்தல்களில் இதைப் பயன்படுத்த முடியும்.
2. அங்கீகரிக்கப்படாத கட்சிகளும் சுயேச்சைகளும், இந்திய தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்படும் ‘பொதுச் சின்னங்கள்’ பட்டியலில் இருந்து தங்களுக்கு விருப்பமான சின்னங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
இதில் அங்கீகாரம் என்பது தேசிய கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.
ஒரு கட்சி மாநிலக் கட்சி என அங்கீகாரம் பெற பின்வரும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை ஒரு கட்சி பூர்த்தி செய்ய வேண்டும்.
- சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 6 சதவிகிதத்தைப் பெறுவது மற்றும் குறைந்தது 2 சட்டமன்ற உறுப்பினர்கள்.
- மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 6 சதவிகிதத்தைப் பெறுவது மற்றும் குறைந்தது 1 நாடாளுமன்ற உறுப்பினர்
- சட்டமன்ற இடங்களில் 3% அல்லது குறைந்தபட்சம் 3 இடங்கள்.
- மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு 25 மக்களவை இடங்களுக்கும் 1 நாடாளுமன்ற உறுப்பினர்.
- ஒரு பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 8 சதவிகிதத்தைப் பெறுவது.
அதுவே தேசிய கட்சிக்கான அங்கீகாரத்திற்கு,
- 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் செல்லுபடியாகும் வாக்குகளில் குறைந்தபட்சம் 6 சதவிகிதத்தைப் பெறுவதோடு, குறைந்தபட்சம் 4 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
- குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், மொத்த மக்களவை இடங்களில் குறைந்தது 2 சதவிகித இடங்களை வெல்ல வேண்டும்.
- குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
இப்படி அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சி பெறும் சின்னம் அக்கட்சியின் நிரந்தர அடையாளமாகிறது.
அக்கட்சி பிரிவுகளை எதிர்கொள்ளும்போது ‘கட்சியின் சின்னம்’ யாருக்கு என்பதே முதல் கேள்வியாக முன்வைக்கப்படும்.
- சட்டமன்ற உறுப்பினர்கள்/நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை,
- அமைப்பு ரீதியான பெரும்பான்மை,
- கட்சியின் அரசியலமைப்பு,
ஆகியவற்றின் அடிப்படையில் சின்னம் யாருக்கு என்பது முடிவு செய்யப்படும்.
இதற்கு மிகப் பிரபலமான ஓர் உதாரணம், அதிமுகவின் இரட்டை இலை சின்னம். 1987 டிசம்பரில் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அதிமுக கட்சி ஜானகி ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா ஆகியோருக்கு இடையே பிளவுபட்டது.
இந்திய தேர்தல் ஆணையம் ‘இரட்டை இலை’ சின்னத்தை முடக்கி, ஜானகியின் அணிக்கு ‘இரண்டு புறாக்கள்’ சின்னத்தையும், ஜெயலலிதாவின் அணிக்கு ‘சேவல்’ சின்னத்தையும் ஒதுக்கியது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற 1989 சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதாவின் அணி 27 இடங்களிலும், ஜானகியின் அணி 1 இடத்திலும் வெற்றி பெற்றது.
“அந்தத் தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வெற்றி அவர் தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற்றுக் கொடுத்தது, அவரது அரசியல் வாழ்க்கைக்கும் அது குறிப்பிடத்தக்க வெற்றியாக இருந்தது” என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு.
கடந்த 1989இல் நடந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணியில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு, இவர் வெற்றி பெற்றார்.
“சின்னங்கள்தான் கட்சிகளின் அடையாளம் என்றாலும், மக்கள் அவற்றைப் பெரும்பாலும் தலைவர்களுடன் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். தலைவர்கள் காட்டும் சின்னம்தான் மக்கள் மனதில் பதிகிறது” என்கிறார் அவர்.
சின்னங்களின் தாக்கம்
பட மூலாதாரம், Getty Images
“கடந்த 1980களில் ஒரு தேர்தல் பிரசாரத்தில் எங்கள் தலைவரை நான் நேரில் பார்த்தேன், அப்போதிருந்து எங்கள் தொகுதியில் யார் போட்டியிட்டாலும் வேட்பாளர்களின் பெயர்களை நான் பார்ப்பதில்லை, சின்னத்தை மட்டுமே பார்த்து வாக்களித்து விடுவேன்” என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த கமலா (82 வயது).
ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலிலும் ‘இதே முறையில்’ தான் வாக்களிக்கப் போவதாக அவர் கூறுகிறார்.
“கட்சிகளின் சின்னங்கள் வெறும் சின்னங்கள் மட்டுமல்ல, சிலர் அவற்றை உணர்ச்சிகளுடனும் கடந்த காலத்தின் சிறந்த தருணங்களுடனும் பொருத்திப் பார்க்கிறார்கள் என நான் நினைக்கிறேன். அதனால்தான் மக்களிடையே அவை தாக்கம் செலுத்துகின்றன” என்கிறார் ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் அதிகாரி மற்றும் எழுத்தாளர் கண்ணன் ராஜரத்தினம்.
“கடந்த 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்களில் அண்ணா தலைமையிலான திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றபோது, ‘நீங்கள் மக்களிடையே உதய சூரியனை ஒரு கடவுளைப் போல பிரபலப்படுத்தியுள்ளீர்கள்’ என்று அண்ணாவிடம் ராஜாஜி கூறினார். சின்னங்கள் எப்போதுமே கட்சிகளுக்குப் பெரும் பலமாக இருந்துள்ளன, இருக்கின்றன” என்கிறார் அவர்.
அதேநேரம், சில சின்னங்கள் மிக வேகமாக மக்களிடையே பிரபலமடைந்து விடும் எனக் குறிப்பிடும் கண்ணன் ராஜரத்தினம், “உதாரணத்திற்கு 1996இல் தமிழ்நாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னம் உடனடியாக மக்களிடையே பிரபலமடைந்தது” என்கிறார்.
பட மூலாதாரம், ECI
தமிழ்நாட்டின் தேர்தல்களில் சின்னங்கள் மக்களிடையே ஓரளவு தாக்கம் செலுத்துகின்றன என்றும், குறிப்பாக அங்கீகரிக்கப்படாத கட்சிகள் அல்லது சுயேச்சை வேட்பாளர்கள் ‘பொதுச் சின்னங்களை’ தேர்ந்தெடுக்கும்போது, பிரபல அரசியல் கட்சிகளின் கடந்த கால சின்னங்களையோ அல்லது அவற்றின் தற்போதைய சின்னங்களைப் போன்ற தோற்றமுடைய சின்னங்களையோ விரும்புகிறார்கள் என அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இதை 2011 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக எதிர்கொண்ட ஒரு சிக்கலுடன் நாம் பொருத்திப் பார்க்கலாம்.
“அந்தத் தேர்தலில் தேமுதிகவின் முரசு சின்னத்தை ஒத்திருக்கும் கூடை சின்னம் சுயேச்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டது சில தொகுதிகளில் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது” என்கிறார் தேமுதிகவை சேர்ந்தவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பார்த்தசாரதி.
‘சின்னங்களை மட்டுமே பார்த்து வாக்களிக்கப் போவதில்லை’
பட மூலாதாரம், Getty Images
ஆனால், இப்போது சின்னத்தை மட்டுமே பார்த்து வாக்களிக்கும் மக்கள் குறைந்துவிட்டார்கள் என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு.
“இப்போது ஒரு கட்சியின் சின்னத்தை பிரபலப்படுத்துவது என்பது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது, எனவே பெரும்பான்மையான மக்கள் சின்னங்கள் குறித்த தெளிவுடன் இருக்கிறார்கள். அதேநேரம், சின்னங்கள் என்பதைத் தாண்டி தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கட்சிகளின் கடந்த கால செயல்பாடுகளுக்கே இளைய தலைமுறை முக்கியத்துவம் அளிக்கிறது” என்கிறார்.

திருநாவுக்கரசு கூறும் கருத்தை முதல் தலைமுறை வாக்காளர்களின் மனநிலையோடு பொருத்திப் பார்க்க முடிகிறது.
“நிச்சயமாக நான் சின்னங்களை மட்டுமே பார்த்து வாக்களிக்கப் போவதில்லை” என உறுதியாகக் கூறுகிறார், வரும் சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கப் போகும் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி அம்ரிதா.
“நண்பர்களிடையே அரசியல் தொடர்பான விவாதங்களின்போது அடையாளத்திற்காக சின்னங்களைக் குறிப்பிட்டு பேசுவோம். மற்றபடி வேட்பாளர்கள் யார், அவர்களின் தகுதி என்ன என்பதே எங்கள் விவாதத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. சின்னங்கள் என்பவை எங்களைப் பொறுத்தவரை இரண்டாம்பட்சம்தான்” என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு