தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இன்று காலை 9 மணி அளவில், மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற தலைப்பில் மார்ச் 13ஆம் தேதி வெளியிட்ட, 2025 பட்ஜெட்டுக்கான முன்னோட்ட காணொளி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், இன்று சட்டமன்றத்தில் தென்னரசு தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழ்மொழி வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்துப் பேசிய அவர் “வருங்காலங்களில் தமிழ் புத்தகக் கண்காட்சிகளை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய பெருநகரங்களான புதுடெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய வெளிநாடுகளிலும் புத்தகக் கண்காட்சி நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்தார்.
ஆண்டுக்கு நூறு புத்தகங்கள் வீதம் வருகின்ற ஐந்து ஆண்டுகளில் 500 தமிழ்ப் புத்தகங்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நிதி அமைச்சர் அறிவித்தார்.
பட மூலாதாரம், Thangam Thennarasu/X
வெளிநாடு வாழ் இளம் தமிழர்களுக்கு தமிழ் மரபை அறிமுகம் செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கு தமிழ் மரபை முறையாக அறிமுகம் செய்திடும் வகையில், அயலக தமிழர் நல வாரியம் மூலம் அவர்களுக்கு தமிழ் மொழி மற்றும் நாட்டுப்புறக் கலையைப் பயிற்றுவிக்கும் 100 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை வைத்து நேரடி வகுப்புகளை நடத்திட ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டி குறித்து அறிவிப்பு
“தமிழின் பெருமை மற்றும் சிறப்பை உலகத் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற நகரங்களில் உள்ள பள்ளிகளிலும், உலகத் தமிழ் மையங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு கணினி வழி உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும்” என்று தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
பட மூலாதாரம், @CMOTamilnadu
படக்குறிப்பு, மார்ச் 13ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்
‘ரூ’ தொடர்பாக எழுந்த சர்ச்சை
காணொளியில் நிதிநிலை அறிக்கை குறித்த இலச்சினையில் ரூபாயை குறிக்கும் ‘₹’ என்ற தேசிய சின்னத்திற்குப் பதிலாக தமிழில் ‘ரூ’ என்று தமிழ்நாடு அரசு பயன்படுத்தி இருந்தது.
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பள்ளி கல்வித்துறைக்குத் தேவையான நிதியை வழங்க இயலும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார்.
பட மூலாதாரம், MK Stalin
படக்குறிப்பு, தேசிய இலச்சினை நீக்கப்பட்டு தமிழில் ‘ரூ’ பயன்படுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையே மும்மொழிக் கொள்கை, ஹிந்தி திணிப்பு போன்ற விவகாரங்களில் நீடித்த வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.
இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் ‘ரூ’வை பயன்படுத்தியது தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.