பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக விஜய் அறிவித்த பின்பு, சிபிஐ, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மூலமாக அழுத்தம் தரப்படுகிறது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கூறியுள்ள கருத்து விவாதப் பொருளாகி இருக்கிறது.
இந்தக் கருத்தை முற்றிலும் மறுக்கும் பாஜக, தேர்தல் நெருங்கும் வேளையில் தவெகவுக்கு ஆதரவு குறைந்து வருவதால் இத்தகைய குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக கூறியுள்ளது.
ஆனால் இதுபோன்று வழக்குகளை வைத்து சிபிஐயால் ஒரு கட்சித்தலைவருக்கு அழுத்தம் தரமுடியாது என்கின்றனர் சிபிஐக்காக வாதாடியுள்ள வழக்கறிஞர் சண்முகம்.
பாஜகவை விஜய் விமர்சிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு காரணமாக மட்டுமின்றி, காங்கிரசுக்கு தரப்படும் மறைமுக சிக்னலாகவும் இந்த கருத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
சிபிஐ விசாரணையும் ஜனநாயகன் பட விவகாரமும்
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் துவக்கிய போது, திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் குறிப்பிட்டார். ஆனால் அடுத்தடுத்த கட்சி நிகழ்ச்சிகளில் பேசிய விஜய் திமுகவை மிகக் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு, பாஜகவை விமர்சிப்பதில்லை என்று திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதுதொடர்பாக விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட பலரிடமும் சிபிஐ விசாரணை நடத்தி, வாக்குமூலங்களை பெற்றுள்ளது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், விஜயின் கடைசிப்படம் என்று கூறப்படும் ஜனநாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் இந்த திரைப்படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பு சட்டப் போராட்டம் நடத்தியது.
பின்னர் ஒரு கட்டத்தில் வழக்கை வாபஸ் பெறுவதாக தயாரிப்பாளர் அறிவித்தார். ஆனால் தற்போது வரையிலும் எந்த தேதியில் படம் வெளியாகும் என்பது உறுதியாகவில்லை.
இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக ராகுல் காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றம் சாட்டியிருந்தனர்.
‘இப்போதுதான் பலவித அழுத்தம் தரப்படுகிறது’
படக்குறிப்பு, தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ்
பாஜகவை பற்றி விஜய் எந்த விமர்சனங்களும் வைப்பதில்லை, கடுமையாகப் பேசுவதில்லை என்பதால் அவர் மீது சந்தேகமாகவுள்ளது என்று மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கூறியிருந்தார்.
மதுரையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”ஒன்றியத்தில் இருக்கும் ஆளும்கட்சி, எவ்வளவோ முறைகளில் எவ்வளவோ வகைகளில் அழுத்தம் கொடுக்க முயற்சி செய்தது. ஆனால் மகாபலிபுரத்தில் மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என்று எங்கள் தலைவர் தனது நிலைப்பாட்டை அறிவித்துவிட்டார். இதைவிட ஒரு தெளிவான நிலைப்பாட்டை யாரால் கூறமுடியும்.” என்றார்.
பின்னர் எப்படி அவர் பாஜகவை எதிர்த்து எதுவும் சொல்லவில்லை என்று கூறுகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய அருண்ராஜ், ”அந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.” என்றார்.
அவரிடம் முதலில் கொள்கை எதிரி பாஜக என்று அறிவித்தபின்பு, ஏன் அந்தக் கட்சி பற்றி விமர்சிப்பதில்லை என்று மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ”அப்போதெல்லாம் அழுத்தம் கொடுக்கவேயில்லை. இப்போதுதான் சிபிஐ விசாரணை, படப்பிரச்னை என்று பலவித அழுத்தம் தரப்படுகிறது. இத்தனை அழுத்தங்களுக்குப் பிறகும் மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தமாக அவர் கூறியிருக்கிறார்.” என்றார் அருண்ராஜ்.
தவெக குற்றச்சாட்டுக்கு பாஜக பதில்
பட மூலாதாரம், AP Muruganandham
படக்குறிப்பு, பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம்.
தவெகவுக்கு இப்படி எந்த அழுத்தத்தையும் தருவதற்கு பாஜகவுக்கு எந்தத் தேவையும் இல்லை என்கிறார் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம். கட்சி துவங்கிய போது விஜய்க்கு இருந்த ஆதரவும் செல்வாக்கும் தேர்தல் நெருங்குகையில் குறைந்து, திமுகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்தான் போட்டி என்பது உறுதியாகிவிட்ட நிலையில், கவனத்தை ஈர்க்க இப்படியொரு பிரச்னையைக் கிளப்புவதாக அவர் விமர்சித்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய ஏ.பி.முருகானந்தம், ”சினிமா புகழ் என்பது வேறு; அரசியல் களம் என்பது வேறு. தவெகவினருக்கு இதுவரை எந்த அரசியல் அனுபவமும் கிடையாது. இரண்டாம் கட்டத் தலைவர்களே இல்லை. ஒரே நபரை நம்பியுள்ள கட்சி அது.” என்றார்.
”ஒரு படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பதற்கு மத்திய அரசு காரணமென்பது அபத்தம். பாஜக படிப்படியாக வளர்ந்த தேசியக்கட்சி. தவெக போன்று ஒரு மாநிலக்கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் அவசியம் எதுவும் பாஜகவுக்கு இல்லை. இந்தத் தேர்தலில் பாஜகவை உள்ளே விடக்கூடாது என்றுதான் திமுக கூறுகிறது. என்ன செய்யப்போகிறோம் என்று சொல்லவில்லை. அதனால் பாஜகவை தவிர்த்து தமிழக அரசியல் இல்லை என்பதால்தான் இப்படியொரு குற்றச்சாட்டை தவெக சொல்கிறது.” என்றார் ஏ.பி.முருகானந்தம்.
பட மூலாதாரம், KVN Productions
அருண்ராஜ் கூறியது என்ன?
கரூர் வழக்கு விசாரணை, ஜனநாயகன் பட விவகாரம் என இப்போதுதான் பாஜக அழுத்தம் கொடுக்கிறது என்று அருண்ராஜ் தெரிவித்த கருத்து பற்றி பிபிசி தமிழ் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, ”பாஜக அழுத்தம் கொடுக்கத் துவங்கியிருக்கிறது என்று நான் கூறியது உண்மைதான். அதுபற்றி இப்போது விரிவாகப் பேசத் தயாராகயில்லை. நேரம் வரும்போது பேசுகிறேன்.” என்று மட்டும் கூறி வேறு எதுவும் சொல்ல மறுத்துவிட்டார்.
கரூர் வழக்கில் விஜய்க்கு சிபிஐயால் அழுத்தம் தரமுடியுமா?
பட மூலாதாரம், Shanmugam
படக்குறிப்பு, மூத்த வழக்கறிஞர் சண்முகம்.
கரூர் வழக்கில் விஜய் மீது தனிப்பட்ட முறையில் எந்த சட்டப்பூர்வமான நடவடிக்கையையும் எடுப்பது கடினம் என்கிறார் மூத்த வழக்கறிஞர் சண்முகம்.
சிபிஐ வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ள வழக்கறிஞர் சண்முகம், ”சிபிஐ அமைப்பை வைத்து, ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. சிபிஐ 100 சதவீதம் இதைச் செய்யாது. உள்ளூர் காவல்துறையின் அதிகார வரம்பும் செயல்பாடுகளும் வேறு. சிபிஐயின் அதிகார வரம்பும் விசாரணை மரபுகளும் வேறு. குத்துமதிப்பாகச் சொல்லப்படும் ஒரு கருத்தை வைத்து சிபிஐ ஒரு வழக்கை எடுக்காது.” என்றார்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய அவர், ”கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்திருந்தாலும் அதற்காக யார் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய முடியாது. அது கவனக்குறைவால் ஏற்பட்ட மரணம்தான்.” என்றார.
“புகழ் பெற்ற நடிகரான விஜய், தன்னைப் பார்க்க எவ்வளவு கூட்டம் வருமென்று தெரிந்திருக்காதது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்படும், அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் சண்முகம். இது கவனமின்மையே தவிர குற்றமில்லை என்பதால் கவனமின்மையால் மரணத்தை ஏற்படுத்தும் பிரிவில்தான் நடவடிக்கை எடுக்க முடியும், அதிலும் அவரைச் சேர்க்கும் வாய்ப்பு குறைவு,” என்கிறார் அவர்.
”நிகழ்ச்சி நடத்த கடிதம் கொடுத்த நிர்வாகி மீது இந்த குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை தரப்படலாம். ஆனால் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையை உடனே தாக்கல் செய்யாததும், வழக்கிலிருந்தே விஜயை விடுவிப்பதும் சிபிஐ வசம்தான் உள்ளது. ஆனால் இவ்வளவு கூட்டம் வருமென்று தெரியாது, அந்த இடத்தில் நிகழ்ச்சி நடத்த போலீஸ் அனுமதியை ரத்து செய்திருக்கலாமே என்றெல்லாம் கூறி, அதற்கு நான் பொறுப்பு கிடையாது என்று விஜய் தரப்பில் கூறவும் வாய்ப்புள்ளது.” என்றார் வழக்கறிஞர் சண்முகம். அதேநேரத்தில், தமிழக அரசியல் வரலாற்றில் சட்டப்பூர்வமாகவும் இது மிகவும் கவனிக்கத்தக்க வழக்காகத்தான் இருக்கும் என்கிறார் அவர்.
‘ஒரு வழக்கையே எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார்’
ஆனால் இந்த ஒரு வழக்கையே எதிர்கொள்ள முடியாமல் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் திணறுவதாகக் குற்றம்சாட்டுகிறார் ஏ.பி.முருகானந்தம்.
”இன்றைக்கு அரசியலில் உள்ள பெரும்பாலான தலைவர்கள், நிர்வாகிகள், ஏராளமான வழக்குகள், சிறைகளைச் சந்தித்து வந்தவர்கள். ஆனால் விஜய் இந்த ஒரு வழக்கு விசாரணையை எதிர்கொள்ளவே அஞ்சி நடுங்குகிறார். இதுபோல இன்னும் 2 வழக்குகள் வந்தால் கட்சி நிர்வாகிகள் யாரும் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். அதனால் இது தேர்தலை திசை திருப்பும் குற்றச்சாட்டு. விசிறிகள் வேறு; வாக்காளர்கள் வேறு. விஜய் கூட்டத்துக்கு வரும் பெரும்பாலானவர்களுக்கு வாக்குகளே இல்லை. இது தேர்தல் முடிவில் தெரியவரும்.” என்றார் முருகானந்தம்.
காங்கிரஸ் கட்சிக்கு தரும் சிக்னலா?
பாஜக அழுத்தம் கொடுக்கிறது என்பதை காங்கிரஸ் கட்சிக்கு தவெக தரும் மறைமுக சிக்னலாகவும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது என்கிறார் பத்திரிகையாளர் ஷபீர் அஹமது.
பிபிசி தமிழிடம் பேசிய ஷபீர் அஹமது, ”திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், அடுத்து காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்று கேள்வி எழுந்துள்ள சூழலில், இத்தகைய கருத்தை தவெக வெளியிட்டுள்ளதைக் கவனிக்க வேண்டியுள்ளது. கரூர் சம்பவத்துக்குப் பின்பு ராகுலிடம் விஜய் பேசினார். இப்போது பாஜக தங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்று கூறுவதை காங்கிரஸ் கட்சிக்கு தகவல் சொல்கிற முயற்சியாக இருக்கலாம்.” என்றார்.