பட மூலாதாரம், Narendra Modi | X
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
இரண்டு நாள் அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு, இலங்கையின் கௌரவ விருது வழங்கப்பட்டது. மேலும், இந்தியா இலங்கை இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்திய பிரதமர் மோதிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோதியை வரவேற்கும் நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்நிலை தூதுக்குழுவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்திருந்தனர்.
இந்த நிகழ்வை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி செயலகம் நோக்கி பயணித்திருந்தார். ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்த மோதிக்கு, மீண்டும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்தியா – இலங்கை உடன்படிக்கைகள் சில கைச்சாத்திடப்பட்டன
பட மூலாதாரம், High Commission of India | X
உடன்படிக்கைகள் என்னென்ன?
- இந்தியா – இலங்கைக்கு இடையிலான எரிசக்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி புரிந்துணர்வு உடன்படிக்கை.
- இந்தியா – இலங்கைக்கு இடையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை.
- இந்தியா – இலங்கை – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையில் திருகோணமலை எரிசக்தி தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை.
- இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை.
- கிழக்கு மாகாணம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை
- இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் சுகாதாரம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை.
- இந்தியாவின் மருத்தக நிறுவனம் மற்றும் இலங்கை தேசிய மருந்தாக்கல் கூட்டுதாபனம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.
அத்துடன், இந்திய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வை, ஜனாதிபதி செயலகத்திலிருந்து மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, தம்புள்ளை குளிரூட்டப்பட்ட விவசாய களஞ்சியசாலையை திறந்து வைக்கும் நிகழ்விலும் பிரதமர் நரேந்திர மோதி ஈடுபட்டார்.
மேலும், 5000 மதத் தலங்களுக்கு சூரிய மின் கட்டமைப்பு வழங்கும் நிகழ்வும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பட மூலாதாரம், PMD
கூட்டு செய்தியாளர் சந்திப்பு
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு, அபிவிருத்தி திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோதிக்கு கௌரவ விருது வழங்கப்பட்டதை அடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர்.
இந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில் முதலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உரை நிகழ்த்தியிருந்தார்.
இலங்கை மற்றும் இந்திய மீனவப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தான் பிரதமர் நரேந்திர மோதியிடம் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
அத்துடன், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு முறை தொடர்பில் அநுர குமார திஸாநாயக்க இதன்போது தெளிவூட்டியிருந்தார்.
மீனவர் பிரச்னை
மீனவர்கள் விவகாரம் குறித்து பேசிய அநுர, ”மீனவப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கின்றமை தொடர்பான ஒத்துழைப்பு குறித்தும் நாங்கள் பேசியுள்ளோம். இரு நாடுகளிலும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையான இழுவை முறையிலான மீன்பிடி முறை காரணமாக பாரிய சுற்று சூழல் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இதனை அடையாளம் கண்டு அதனை நிறுத்துவது மற்றும் நிர்ணயிக்கப்படாத மீன் வகைகளை பிடிப்பதை நிறுத்துவதற்கான தலையீட்டை செய்யுமாறு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். எரிசக்தி, பாதுகாப்பு, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், கடன் மறுசீரமைப்பு போன்ற உடன்படிக்கைகள் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் இன்று இடம்பெற்றது.” என தெரிவித்தார்.
மேலும்,” இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது காணப்படுகின்ற விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தோம். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் விதத்தில் இலங்கையின் பூமியை பயன்படுத்த இடமளிக்கப்படாது என்பதை நான் மீண்டும் உறுதி செய்துள்ளேன்”என்றார்
பட மூலாதாரம், X
மோதி பேசியது என்ன?
இந்திய இலங்கை மீனவப் பிரச்னை விடயத்தில் மனிதாபிமான முறையில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்தி, மாகாண சபைத் தேர்தலை நடத்தி, தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
”நாங்கள் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளோம். இந்த விடயத்தில் மனிதாபிமான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என நாங்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றோம். மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும். மீனவர்களின் படகுகள் திருப்பி அனுப்ப வேண்டும் என நாம் வலியுறுத்தியுள்ளோம். இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் சமரசம் தொடர்பில் நாங்கள் பேசியுள்ளோம். தனது தொலைநோக்கு பார்வை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறினார். தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என நாங்கள் நம்புகின்றோம். இலங்கை அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்தி, இலங்கை மாகாண சபை தேர்தலை நடத்தும் கடமைகளை நிறைவேற்றும் என நம்புகின்றோம்.” என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.
கௌரவ விருது
இலங்கையில் அரசத் தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் அதிவுயர் கௌரவ விருதான ஸ்ரீலங்கா மித்ர விபூஷண விருது, பிரதமர் நரேந்திர மோதிக்கு வழங்கப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இந்த விருது வழங்கி வைக்கப்பட்டது.
”ஸ்ரீலங்கா மித்ர விபூஷண விருது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடமிருந்து வழங்கப்பட்டமை இட்டு நான் மிகவும் கௌரவமாக உணர்கின்றேன். இது சாதாரணமாக கௌரம் அல்ல. இது எனக்கு மாத்திரம் கிடைத்துள்ள கௌரவம் கிடையாது. இந்தியாவிலுள்ள 1.4 பில்லியன் மக்களுக்கு கிடைத்த கௌரவமாகவே நான் கருதுகின்றேன். இதனூடாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்பு மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க தொடர்புகளுக்கான கௌரவமாகவுமே நான் இதனை பார்க்கின்றேன். எனக்கு வழங்கப்பட்ட இந்த கௌரவத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும், அரசாங்கத்திற்கும், இலங்கை வாழ் மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.” என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.
பட மூலாதாரம், X/ narendramodi
தமிழ் தலைவர்களுடன் சந்திப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கையின் தமிழ் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை பிரதமர் நரேந்திர மோதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மலையக கட்சிகளின் தலைவர்களை ஒரே சந்தர்ப்பத்திலும், வடக்கு கிழக்கு கட்சிகளின் தலைவர்களை ஒரே சந்தர்ப்பத்திலும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் 1964ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஸ்ரீமா-சாஸ்திரி உடன்படிக்கையை போன்றதொரு உடன்படிக்கை, இந்த காலக் கட்டத்தில் அவசியம் என மலையக மக்கள் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த உடன்படிக்கையில் மலையக மக்களுக்கு பல்வேறு சலுகைகள் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
அத்துடன், மலையக மக்களுக்கான உதவித் திட்டங்கள் தொடர்பிலும், வீட்டுத் திட்டம், காணி உரிமை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோதியுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துகின்றமை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் தெரிவிக்கின்றன.
இலங்கை – இந்திய உடன்படிக்கையின் அடிப்படையில் தான் இலங்கையில் தமிழ்த் தேசிய பிரச்னைக்கான ஒரு தீர்வு இருக்க முடியும் என்பதை தாம் நம்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், இந்திய – இலங்கை மீனவப் பிரச்னை குறித்தும் இந்த சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழ் கட்சிகள் குறிப்பிடுகின்றன
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு