பட மூலாதாரம், Getty Images
சமக்ரா ஷிக்ஷா அபியான் எனப்படும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான பள்ளிக்கல்வி நிதி ரூ.2,152 கோடியை பிற மாநிலங்களுக்கு அளித்துவிட்டதாக மத்திய அரசு மீது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், இன்னும் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதி இன்னும் விடுவிக்கப்படவில்லை எனக் கூறியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மு.க.ஸ்டாலின் பொய்யைப் பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சமக்ரா ஷிக்ஷா அபியான் என்ற இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் கல்வி நிதி என்பது மாநிலத்தின் சமூக வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்று கல்வியாளர்கள் விமர்சிக்கின்றனர்.
ஆனால், வளர்ந்த மாநிலங்களைவிட வளரும் மாநிலங்களுக்கே, இத்தகைய நிதியின் தேவை அதிகமாக இருப்பதை உணர வேண்டும் என்கிறார் தமிழ்நாடு பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜலட்சுமி.
சமக்ரா ஷிக்ஷா அபியான் திட்டம் என்றால் என்ன? அந்த நிதி தமிழ்நாட்டுக்கு எவ்வளவு முக்கியமானது?
‘தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அநீதி’
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமான சமக்ரா ஷிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான ரூ.2,152 கோடியை பிற மாநிலங்களுக்குக் கொடுத்து மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்துவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மேலும், “தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்த காரணத்தால், தமிழக மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு எடுத்துக் கொடுத்துள்ளது.
இது அப்பட்டமான மிரட்டல். இந்திய வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும், ஒரு மாநிலத்திற்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையாக, கல்வியை அணுகுவதற்கான வாய்ப்புகளை நெரிக்கும் செயலைச் செய்ததில்லை. பாஜக அரசு, தங்கள் உரிமைகளுக்காக எதிர்த்து நின்றமைக்காக தமிழக மாணவர்களை மத்திய அரசு தண்டித்துள்ளது,” என்று விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கும் அதன் மாணவர்களுக்கும் அநீதி இழைப்பதன் மூலம், தனது வெறுப்பின் முகத்தை பாஜக மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பட மூலாதாரம், MK Stalin/X
அண்ணாமலை கூறியது என்ன?
ஆனால், சமக்ரா ஷிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் எந்த மாநிலத்திற்கும் இன்னும் நிதி விடுவிக்கப்படாத நிலையில், மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலைப் பரப்புவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், “தமிழகம் தனது பெருமையைத் தொலைத்து, எண் கணிதத்திலும், தாய்மொழி அறிவிலும் கடைசி இடத்தில் உள்ளது. கல்வியை அரசியலாக்கி, கல்வியின் தரத்தைக் குறைத்து, தமிழக குழந்தைகளுக்கு சமமான வாய்ப்புகளையும், உலகத் தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்தமைக்காக மு.க.ஸ்டாலினும் திமுகவும் வெட்கப்பட வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்தே பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் உள்பட சமக்ர ஷிக்ஷாவின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு உறுதி அளித்ததாகக் குறிப்பிட்ட அவர், “அந்த உறுதிமொழியை நிறைவேற்றினீர்களா இல்லையா? செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்றும் மாநில அரசைக் கேள்வியெழுப்பிள்ளார்.
அதோடு, “இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட நிதி அறிக்கைப்படி, எந்தவொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கும் 2024-25ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் நிதி விடுவிக்கப்படவில்லை” என்று கூறியுள்ள அண்ணாமலை, அப்படி இருக்கும் போது, தமிழகத்திற்கான நிதி மற்ற மாநிலங்களுக்கு திருப்பிவிடப்படுவதாக பொய்யைப் பரப்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
பட மூலாதாரம், Annamalai/X
சமக்ரா ஷிக்ஷா அபியான் திட்டம் என்பது என்ன?
தொடக்கப்பள்ளி முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வியில் அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் ஆசிரியர் பயிற்சி மையங்களை வலுப்படுத்துவதே சமக்ரா ஷிக்ஷா அபியான் திட்டத்தின் நோக்கம்.
இந்தத் திட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்கீழ், 2024-25 கல்வியாண்டுக்காக தமிழ்நாட்டிற்கென ரூ.3,586 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில், மத்திய அரசின் பங்களிப்பு 60%, மாநில அரசின் பங்களிப்பு 40%.
இந்நிலையில், தனது 60 சதவீதம் பங்கான ரூ.2,152 கோடி நிதியையே பிற மாநிலங்களுக்குத் திருப்பிவிட்டுவிட்டதாக மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
‘சமமான கல்வி கிடைப்பதைத் தடுக்கும் செயல்’
தமிழ்நாட்டு மக்களுடைய வரிப்பணத்தை, அதன் கல்வி செலவுகளுக்காக வழங்குவதை மத்திய அரசு நிறுத்தினால், அரசுப் பள்ளிகளில் போதிய மற்றும் தரமான ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று கூறுகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
“மத்திய அரசு நவோதயா வித்யாலயா, கேந்த்ரியா வித்யாலயா போன்ற சிறப்புப் பள்ளிகளை மட்டுமே நடத்துகிறது. அனைவரும் படிக்கும் வகையில் இருப்பது மாநில அரசுகள் நடத்தும் பள்ளிகளே. மற்றொரு புறம், கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே அதற்கான நிதியை வழங்க வேண்டும்.
ஆனால், அப்படி ஒரு மாநிலத்திற்கு உரித்தான நிதியை வழங்குவதற்கு, தேசிய கல்விக் கொள்கையில் உள்ள கூறுகளை ஏற்றுக்கொண்டாக வேண்டுமென்று நிபந்தனை விதிப்பதற்கான உரிமையை மத்திய அரசுக்கு வழங்கியது யார்?” என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
மாவட்டத்திற்கு ஒரு சிறப்புப் பள்ளியாக பி.எம்.ஸ்ரீ பள்ளியும் பிற பள்ளிகள் சாதாரணமானவையாகவும் இருக்கும் எனக் கூறும் மத்திய அரசு, சமத்துவக் கல்வி கோட்பாட்டிற்கு எதிரான இத்தகைய திட்டத்தை ஏற்காமல் போனால் நிதி கிடையாது எனவும் கூறுவது நியாயமல்ல என்றும் விமர்சிக்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் கிடைக்கும் நிதி பள்ளிக் கல்வியின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு செலவு செய்யப்படும் என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
அடிப்படையில், “அதை மாணவர்களின் கற்றலுக்கான செலவு எனக் கூறலாம். ஆசிரியர்களுக்கு மற்றும் பள்ளி சார்ந்த பிற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அந்த நிதி வேண்டும். அதோடு, கணினி, அறிவியல் ஆய்வுக்கூடங்களுக்குத் தனியாக பராமரிப்பாளர் நியமிப்பது, விளையாட்டு மைதானத்தைப் பராமரிப்பது, உடற்கல்வி பயிற்றுவிப்பது என அனைத்துக்கும் அந்த நிதி அவசியம்,” என்கிறார் அவர்.
அப்படிப்பட்ட மிக முக்கியமான நிதியை வழங்காமல் தவிர்த்தால் அது மிகப்பெரிய கேடாக முடியும் என எச்சரிக்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.
“முன்னேறாத மாநிலங்களுக்கு கூடுதல் நிதி அவசியம்”
மத்திய அரசை விமர்சிக்க எதுவுமில்லாத காரணத்தால், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதாகக் கூறுகிறார் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ராஜலட்சுமி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தமிழ்நாடு கல்வித்துறையில் நன்கு வளர்ந்துள்ளது. ஆனால், தொடக்கக் கல்வியில் கூட இன்னும் பெரியளவில் முன்னேறாத மாநிலங்களுக்கு கூடுதல் நிதியைக் கொடுப்பதன் மூலம் அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும். அத்தகைய மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது,” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஆனால், கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி சமூக முதலீடு எனக் குறிப்பிடும் கல்வியாளர் நெடுஞ்செழியன் அதைத் தடுப்பதால் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி பாதிக்கப்படும் என்கிறார்.
“கடந்த 70 ஆண்டுகளில் கல்வி போன்ற சமூக முதலீடுகளில் கவனம் செலுத்தியதன் மூலமே தமிழ்நாடு வளர்ந்த மாநிலமாக முன்னேறியுள்ளது. இதன்மூலம் நாட்டின் வளரும் மாநிலங்களும் தமிழகத்தில் இருந்து கிடைக்கும் வரியின் மூலம் பயனடைகின்றன. அப்படியிருக்கையில், வளர்ந்த மாநிலங்களில் இத்தகைய சமூக முதலீடுகளைக் குறைப்பது, எதிர்காலத்தில் இதேபோன்ற பயன்களைப் பிற மாநிலங்கள் அடைவதையும் தடுக்கும்” என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு