நாகப்பட்டினம் மாவட்டத்தில் `திருக்கோளிலி’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட திருக்குவளை கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கும் 3-வது மகனாகப் பிறந்தார் கலைஞர் என்று உலகம் போற்றும் கருணாநிதி. அவருக்கு முன் பிறந்த தமக்கையர் இருவர், பெரிய நாயகம் மற்றும் சண்முகவடிவு.
பெற்றோரும், தமக்கையரும் சீராட்டி சீர்மிகு அன்பில் பாராட்டி வளர்த்ததில் போராட்ட குணமும், எதையும் ஆராய்ந்து கேள்வியெழுப்பும் பகுத்தறிவும், ஏற்றத்தாழ்வுகளை விரும்பாத சுயமரியாதை மிக்கவராகவும் வளர்ந்தார். சிறுவயது முதலே மான உணர்ச்சியும், கொண்ட கொள்கையில் பிடிவாதம் மிக்கவருமான கலைஞர், தந்தையார் ஏற்பாடு செய்த இசைப்பயிற்சி வகுப்பில் நிலவிய சாதி ஏற்றத்தாழ்வை கண்டு இனி இசை வகுப்புக்கு செல்வதில்லை என்று தீர்மானமாக தன் தந்தையாரிடம் தெரிவித்தார்.
திருக்குவளை கிராமத்தில் ஆரம்பக்கல்வியும், பின்னர் திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற கலைஞர், பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை மற்றும் சொற்பொழிவு ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் மாணவராக கலைஞர் சேர்ந்ததே வியப்பான நிகழ்வு. வயதின் காரணமாக அனுமதி மறுக்கப்பட, பள்ளியில் இடமளிக்கவில்லை என்றால் எதிரே இருக்கும் குளத்தில் வீழ்வேன் என்று தலைமை ஆசிரியரிடம் போராடி பள்ளியில் சேர்ந்தார். அந்தப் போராட்ட குணமே கலைஞரின் அடையாளமாக இறுதிவரை நிலைத்தது. 1939-ம் ஆண்டு, கலைஞர் 8-ம் வகுப்பு படித்தபோது, பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில், ‘நட்பு’ என்ற தலைப்பில் பேசினார். இதுவே, கலைஞரின் முதல் மேடைப் பேச்சு.
விளையாட்டிலும் கலைஞருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. ஹாக்கி விளையாட்டு அவருக்கு மிகவும் பிடிக்கும். திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளி ஹாக்கி அணியில் கலைஞர் பங்கு பெற்றிருந்தார். கிரிக்கெட்டும் கலைஞருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு.
15-வது வயதில் கலைஞர் மு. கருணாநிதி தனது சொந்த பதிப்பகப் பயணத்தை தொடங்கினார், மாணவநேசன் என்ற பத்திரிகையை உருவாக்கினார்.
இது தோராயமாக “மாணவர்களின் நண்பர்கள்”என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 75 ரூபாய் நிதியில், 1941-ல் தமிழ்நாடு தமிழ் மாணவர் சங்கத்தை நிறுவினார். ஒரு வருடம் கழித்து, சங்கம் அதன் ஆண்டு விழாவை நடத்தியது. இதில் பாரதிதாசன், கே.ஏ.அன்பழகன், கே.ஏ.மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருவாரூரில் மு.கருணாநிதி எழுத்துக்கள் பிரபலமடைவதால் தனது பதிப்பகத்தை விரிவுபடுத்துவதற்காக முரசொலியை தொடங்கினார். அண்ணா துரை கருணாநிதியை நேரில் சந்தித்தபோது, அவர் வெறும் 18 வயது பள்ளி மாணவர் என்பதை கண்டு வியப்படைந்தார்.
மு.கருணாநிதி தமிழ் அரசியலில் எழுச்சி பெற உதவிய முக்கிய தருணங்களில் ஒன்று, 1953 -ம் ஆண்டு தனது 29-வது வயதில் கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தான். அங்கு சிமென்ட் தொழிற்சாலை வைத்திருந்த இடத்திற்கு “டால்மியாபுரம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
டால்மியாபுரம் என்ற பெயர் வட இந்திய ஆதிக்கத்தையும், சுரண்டல் வணிக நடைமுறைகளையும் குறிக்கிறது என்று கருதிய கருணாநிதியும் அவரது தோழர்களும் ஊரின் பெயரை மீண்டும் கல்லக்குடி என மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
போராட்டத்தின்போது மு.கருணாநிதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரெயில் நிலையத்தில் டால்மியாபுரம் என்ற பெயரை துடைத்தெறிந்ததோடு, ரெயில் தண்டவாளத்தில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். துரதிர்ஷ்டவசமாக, 6 பேர் உயிரிழந்தனர். கருணாநிதி கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
1965 -ம் ஆண்டில், மத்திய அரசு இந்தியை ஒரே அலுவல் மொழியாக அறிவித்தது. இது தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தூண்டியது. சி.என்.அண்ணாதுரை தலைமையில் தி.மு.க. இந்த முடிவுக்கு எதிராக தொடர் பேரணிகளை நடத்தியது. “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” என்ற முழக்கங்கள் மாநிலம் முழுவதும் எதிரொலித்தது. வன்முறை வெடித்தது மற்றும் சிலர் தீக்குளித்தனர்.
தி.மு.க-வின் இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியப் பிரமுகரான மு. கருணாநிதி 1965-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பெயரை என்றென்றும் சொல்லும் வகையில் முத்தான திட்டங்களை தந்த கலைஞர் புகழ் கிராமங்கள் வரை நிலைத்து நிற்கிறது.
இந்தியாவின் 1957-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைப்பெற்றது. தி.மு.க.வின் சார்பில் கலைஞர் திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதியில் நின்றார். வென்றார். தனது 33-ம் வயதில் சட்டசபைக்குள் நுழைந்தார். இதற்குப் பின் 2016 ஆண்டு வரை 13 முறை நடந்த சட்டசபை தேர்தலில் ஒன்றில் கூட தோற்காமல் வெற்றி வாகை சூடினார். 1984-ல் மட்டும் அவர் தேர்தலில் நிற்கவில்லை. தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாபெரும் சாதனையாளர் கலைஞர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது பல திட்டங்கள் செயல்படுத்தினார்.
கலைஞர் என்று அன்புடன் நினைவு கூறப்படும் முத்துவேல் கருணாநிதி தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக பதவி வகித்தார். அவர் சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினரை மேம்படுத்துவதற்கும், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் அரும்பாடுபட்டார். சாதி அடிப்படையிலான பாகுபாட்டை குறைப்பதற்கும் அனைவருக்கும் சம வாய்ப்புகளைப் பெறுவதற்கும் அவர் பல கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியராகவும் இருந்தார். தமிழில் பல இலக்கியப் படைப்புகளை எழுதினார். கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவந்தார். அதில் உள்ள முக்கிய திட்டங்கள்:
2-வது காவல் ஆணையம்
அதிகரித்து வரும் குற்றச்செயல் விகிதங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும், காவல்துறையை நவீனப்படுத்தவும் 1989-ம் ஆண்டு 2-வது காவல் ஆணையத்தை கலைஞர் அறிமுகப்படுத்தினார்.
ஊதியக் குழு, உயர்ந்த சம்பளம்
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு நியாயமான ஊதியத்தை மத்திய அரசு தரத்துடன் கலைஞர் சீரமைத்தார். அவர் ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வழக்கமான சம்பளத் திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார். பொங்கல் பண்டிக்கைக்கான முன்பணம், பண்டிகை மற்றும் பயணப்படிகள், மருத்துவச் செலவுகளைத் திரும்ப வழங்குதல் போன்றவற்றையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
நெல் கரும்பு உற்பத்தி அதிகரிப்பு
கலைஞரின் பல்வேறு விவசாய நடவடிக்கைகளே நெல் உற்பத்தியை 3.5 மில்லியன் டன்னிலிருந்து 5.6 மில்லியன் டன்னாகவும், கரும்பு உற்பத்தியை 9.5 மில்லியன் டன்னிலிருந்து 29.7 மில்லியன் டன்னாகவும் உயர்த்தியது. மேலும் மலிவு விலை அரசி திட்டம், உணவு பற்றாக்குறையைச் சமாளித்து அரிசி உற்பத்தியில் பஞ்சாபை மிஞ்சியது.
உழவர் சந்தை
விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இடையே பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் உழவர் சந்தைகளைக் கலைஞர் அறிமுகப்படுத்தினார். இடைத்தரகர்கள் இல்லாமல் மலிவு விலையில் காய்கறிகளை வழங்க மதுரையில் நவம்பர் 14, 1999-ல் முதல் சந்தை திறக்கப்பட்டது. இந்த முயற்சி பிரபலமடைந்து, நவம்பர் 14, 2000-ல் 100-வது சந்தை சென்னை பல்லாவரத்தில் திறக்கப்பட்டது.
பெண்களுக்கு இலவச பட்டப்படிப்புத் திட்டம்
ஈ.வெ.ரா – நாகம்மையார் நினைவு மகளிர் இலவச பட்டப்படிப்புத் திட்டம் தமிழ்நாட்டில் பெண்கள் கல்விக்குப் பெரிய உதவியாக இருந்தது. உயர்கல்வி கிடைப்பதற்கு வழிவகை செய்தார் கலைஞர். இந்த மாற்று முன்முயற்சியானது, பாலின சமத்துவத்தை ஏற்படுத்தி பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு அதிகாரம் அளித்து, தேசிய அளவில் ஏற்கப்பட்டது.
இளைஞர் நல வாரியம்
கலைஞர், தமிழ்நாடு இளைஞர் நல வாரியத்தை நிறுவினார். விளையாட்டுக் கழகங்கள் அமைக்கப்பட்டு, இளம் வீரர்களின் திறமைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. மாநில இளைஞர் விழா நடத்தி விளையாட்டுப்போட்டிகள், கலை மற்றும் கலாசாரத்தில் திறமைகளை ஊக்குவித்தது. “பள்ளியில் கபடி” போன்ற திட்டங்கள் மூலம் மாநிலத்தில் விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தியது.
மீன்பிடிப்பு அதிகரிப்பு
1966-ம் ஆண்டில், மொத்த மீன் பிடிப்பு 1,26,286 டன்களாக மட்டுமே இருந்தது. ஆனால் மீனவர்களுக்குக் கலைஞர் அளித்த தொடர் ஆதரவால் 2010-ம் ஆண்டில் கடல் மீன் பிடிப்பு 3,96,827 டன்களாக அதிகரித்தது.
தமிழ்த்தாய் வாழ்த்து
மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதிய நீராருங்கடலுடுத்த என்ற தமிழ் வாழ்த்துப் பாடலை அரசு மற்றும் கல்வி நிகழ்வுகளில் பயன்படுத்த ஆணை பிறப்பித்தார் கலைஞர். தமிழ்மொழியின் மேன்மையை போற்றும் வகையில் இன்றளவும் இந்தப் பாடல் தமிழ்நாட்டில் விழாக்களில் பாடப்படுகிறது.
பெரியார் சமத்துவபுரம்
1997-ல் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தை கலைஞர் தொடங்கினார். இது பெரியாரின் சமூக நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளை மதிப்பதை நோக்கமாகக் கொண்டது. பெரியாரின் கொள்கைகளை ஊக்குவித்து, தமிழ்நாட்டில் சமூக நீதியை முன்னெடுத்தது.
கை ரிக்சா ஒழிப்பு
மனிதனை மனிதன் வாகனத்தில் உட்கார வைத்து இழுத்துச் செல்லும் கை ரிக்சாக்களை கலைஞர் ஒழித்து, அதற்கு மாற்றாகச் சைக்கிள் ரிக்சாக்களை அறிமுகப்படுத்தினார்.
குடிசைகள் இல்லாத தமிழகம்
குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டுமென்பது கலைஞரின் லட்சியம். இந்தியாவிலேயே முதன் முறையாகக் கலைஞரின் ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. குடிசை வாழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் குடிநீர், வடிகால் அமைப்புகள், மின்வசதி போன்ற உள்கட்டமைப்புடன் அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கி தரப்பட்டன.
நில உச்சவரம்பு
நில சீர்திருத்தச் சட்டத்தை முன்மொழிந்து நில உச்சவரம்பு ஒரு நபருக்கு 30 ஏக்கர் என்றிருந்ததை 15 ஏக்கர் என குறைத்தார் கலைஞர். இது நில உரிமை வேறுபாடுகளை குறைத்தது. பலரை நில உரிமையாளராகவும் மாற்றியது.