பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் 2023-ஆம் ஆண்டில் பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பட்டியலின மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தமிழ்நாட்டில் 12.2 சதவிகிதம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ‘இது தேசிய சராசரியில் (31.9%) பாதியளவு கூட இல்லை’ என்கிறது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
பட்டியல் சாதி மக்களுக்கு அரசியல்ரீதியாக பிரதிநிதித்துவம் கொடுக்கப்படாததால் அவர்கள் மீதான குற்றங்கள் அதிகரிப்பதாகவும் அக்கட்சி விமர்சித்துள்ளது. இதனை தி.மு.க மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனை விகிதம் குறைந்துள்ளதா? இதர மாநிலங்களில் என்ன நிலவரம்?
இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் பட்டியல் சாதி மக்களுக்கு எதிராக நடந்துள்ள குற்றங்கள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இவை வெளியிடப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அளித்த தரவுகளின் அடிப்படையில் இவை பட்டியலிடப்பட்டுள்ளதாக என்சிஆர்பி தெரிவித்துள்ளது.
ஓராண்டில் அதிகரித்த குற்றங்கள்
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டில் பட்டியல் சாதி மக்களுக்கு எதிராக 1,921 குற்றங்கள் பதிவாகியுள்ளன. முந்தைய 2022 ஆம் ஆண்டில் 1,761 குற்றங்கள் நடந்துள்ளன. ஆனால், 2021 ஆம் ஆண்டில் 1,377 குற்றங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
2021-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2023-ஆம் ஆண்டில் பட்டியல் சாதி மக்களுக்கு எதிராக 544 குற்றங்கள் அதிகமாக பதிவாகியுளன.
ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 2022 ஆம் ஆண்டைவிட 2023 ஆம் ஆண்டில் பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான குற்றங்கள் ஓரளவு குறைந்துள்ளன.
ஆந்திராவில் 2021 ஆம் ஆண்டில் 2,014 குற்றங்கள் நடந்துள்ளன. இவை 2022 ஆம் ஆண்டில் 2,315 என்பதாக அதிகரித்துள்ளது. ஆனால், 2023 ஆம் ஆண்டில் 2,027 குற்றங்கள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை கூறுகிறது.
கர்நாடக மாநிலத்தில் 2021 ஆம் ஆண்டில் பட்டியல் சாதி மக்களுக்கு எதிராக 1,673 குற்றங்கள் நடந்துள்ளன. 2022 ஆம் ஆண்டில் 1,977 குற்றங்களாக அதிகரித்துள்ளன. 2023 ஆம் ஆண்டில் 1,923 என்ற அளவில் சற்று குறைந்துள்ளது.
பட மூலாதாரம், NCRB
வடமாநிலங்களில் என்ன நிலவரம்?
உத்தரபிரதேசத்தைப் பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டில் பட்டியல் சாதி மக்களுக்கு எதிராக 13,146 குற்றங்கள் நடந்துள்ளன. அதுவே 2022 ஆம் ஆண்டில் 15,368 குற்றங்களாக அதிகரித்துள்ளன. ஆனால், 2023 ஆம் ஆண்டில் 15,130 என்பதாக குறைந்துள்ளது.
ராஜஸ்தானில் 2021 ஆம் ஆண்டில் 7,524 குற்றங்கள் நடந்துள்ளன. அதுவே, 2022 ஆம் ஆண்டில் 8,752 குற்றங்களும் 2023 ஆம் ஆண்டில் 8,449 என்ற அளவில் குற்றங்கள் நடந்துள்ளதாக என்.சி.ஆர்.பி கூறுகிறது.
பிகாரில் 2021-ஆம் ஆண்டில் பட்டியல் சாதி மக்களுக்கு எதிராக 5,842 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது 2022 ஆம் ஆண்டில் 6,509 என்பதாக அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டிலும் 7,064 என்ற அளவில் அதிகரித்துள்ளது.
‘பாதியளவு கூட தமிழ்நாட்டில் தண்டனை இல்லை’
தமிழ்நாட்டில் பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் தண்டனை வழங்கப்படும் சதவிகிதம் குறைவாக உள்ளதை தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் காண முடிகிறது.
தேசிய அளவில் பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை அளிக்கப்படுவது சராசரியாக 31.9% என உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 12.9% அளவுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதுவே, உத்தரப் பிரதேசத்தில் 65.6% வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது பிகாரில் 30.1% என்ற அளவிலும் ராஜஸ்தானில் 61.4% என்ற அளவிலும் தண்டனை விகிதம் உள்ளதாக என்.சி.ஆர்.பி தெரிவித்துள்ளது.
‘எதிர்த்துப் போராடினால் தான் வழக்குப் பதிவு’
“தேசிய சராசரியில் பாதியளவுக்குக் கூட தமிழ்நாட்டில் தண்டனை வழங்கப்படவில்லை. பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான வழக்குகளில் அரசுத் தரப்பு போதிய கவனம் செலுத்தாதது தான் காரணம்” எனக் கூறுகிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இதுபோன்ற குற்றங்களில் அரசுத் தரப்பு சரியான முறையில் வழக்குகளை நடத்துவதில்லை. குற்றத்தை எதிர்த்துப் போராடினால் தான் வழக்கே பதிவு செய்யப்படுகிறது. அதிலும் தண்டனை விகிதம் குறைவாக இருக்கிறது” என்கிறார்.
பட மூலாதாரம், Facebook/Ravikumar
வடமாநிலங்களுடன் ஒப்பிடலாமா?
“தமிழ்நாட்டைவிடவும் வடமாநிலங்களில் தண்டனை விகிதம் அதிகமாக உள்ளதாக வி.சி.க கூறுகிறது. ஆனால், இப்படிப்பட்ட ஒப்பீட்டைச் செய்வதால் எந்தப் பயனுமில்லை” எனக் கூறுகிறார், தமிழ்நாடு எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் புனித பாண்டியன்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையில் குற்றங்கள் நடப்பதாகக் கூறும் அவர், “வடமாநிலங்களில் ‘காப்’ பஞ்சாயத்துகள் முதலில் தோன்றின. அதன் பிறகு இங்கு ஆணவக் கொலைகள் வந்தன” என்கிறார்.
ஒருசில வட மாநிலங்களில் ‘காப்’ பஞ்சாயத்துகள் என்பது, சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கும் குழுக்களாகும். இது சர்ச்சைக்குரிய அமைப்பாகவும் சட்டபூர்வமற்றதாகவும் உள்ளதாக விமர்சனங்கள் உள்ளன.
“பட்டியல் சாதி மக்கள் மீதான தீண்டாமை வன்கொடுமைகள் எல்லா மாநிலங்களிலும் நடக்கின்றன. வடமாநிலங்களில் தண்டனை விகிதம் அதிகமாக உள்ளது என்றால் அங்குள்ள காவல் துறை அதிகாரிகள் திறம்பட பணியாற்றுகிறார்கள் என எடுத்துக்கொள்ள முடியாது” என்கிறார், புனித பாண்டியன்.
“வடமாநிலங்களில் குற்றங்களும் அதிகளவில் நடைபெறுகின்றன. எனவே, தண்டனை விகிதமும் அதிகமாக உள்ளதாகவே பார்க்க முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.
“ஆளும்கட்சியின் கூட்டணியில் இருப்பதால் அரசிடம் முறையிடலாமே?” என ரவிக்குமார் எம்.பியிடம் பிபிசி தமிழ் கேட்டது.
“பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான குற்றங்களின் நிலவரம் குறித்து, முதலமைச்சர் தலைமையில் மாநில அளவில் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டங்கள் நடக்கின்றன. அதில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுப்பதுபோல தெரியவில்லை” என்கிறார்.
இதே கருத்தை முன்வைக்கும் மதுரையைச் சேர்ந்த ‘எவிடென்ஸ்’ அமைப்பின் கதிர், “பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான வழக்குகளில் குறிப்பிட்ட நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதில்லை” எனக் கூறுகிறார்.
“குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதைத் தாமதம் செய்வதன் மூலம் சமரசங்களுக்கு வழிவகுக்கப்படுகிறது. குற்றவியல் நடைமுறையின் நோக்கம் என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவது தான். அதில் உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

காவல்நிலையங்கள், நீதிமன்றங்கள், போதிய நிதி என இருந்தும் தமிழ்நாட்டில் தண்டனை விகிதம் குறைவாக இருப்பதாகக் கூறும் கதிர், “வழக்குகளைத் தள்ளிப் போடுவதன் மூலம் மக்களுக்கு அயற்சி ஏற்படுகிறது. நீதியைவிட நீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம்” என்கிறார்.
“தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிரான வழக்குகளை காவல்துறை சிறப்பு கவனத்துடன் அணுகுவதில்லை” எனக் கூறும் புனிதப் பாண்டியன், “எல்லா வழக்குகளையும் போலவே பார்க்கின்ற அணுகுமுறை மாற வேண்டும். இங்குள்ள சாதிய சமூகத்தின் வெளிப்பாடுதான் தீண்டாமை என்பதை அரசு நிர்வாகமும் காவல்துறையும் உணர வேண்டும்” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கு எதிரான வழக்குகளில் காவல் துணைக் கண்காணிப்பாளர் புலனாய்வு அதிகாரியாக இருக்கிறார். பட்டியலின மக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும்போது, உண்மைத்தன்மையில் பிழை இருப்பதாகக் கூறி மூடிவிடும் நிகழ்வுகள் அதிகரிக்கின்றன. இதன் காரணமாகவே தண்டனை விகிதம் குறைகிறது” என்கிறார்.
தி.மு.க சொல்வது என்ன?
பட மூலாதாரம், Facebook/Constandine Ravindra
தி.மு.க செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைனிடம் கேட்டபோது, “குற்ற வழக்குகளில் தண்டனை கொடுப்பதை அரசு முடிவு செய்ய முடியாது. அதை நீதிமன்றங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்கிறார்.
“தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகமாக பதிவு செய்யப்படுகிறது என்பது நேர்மறையான விஷயம். ஆனால், குறித்த நேரத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து தண்டனையைப் பெற்றுத் தந்தார்களா என்பது ஆராயப்பட வேண்டும்” என்கிறார், எவிடென்ஸ் கதிர்.
‘பிகாரை போல தமிழ்நாடு இல்லை’ – ரவிக்குமார் எம்.பி
அரசியல்ரீதியாக பட்டியல் சாதி மக்களுக்கு அதிகளவில் பிரதிநிதித்துவம் கிடைக்காதது தான் இதுபோன்ற கொடுமைகள் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளதாகக் கூறுகிறார், ரவிக்குமார் எம்.பி.
“பிகார் மாநிலத்தில் பட்டியல் சாதி மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அங்கு அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் லோக் ஜனசக்தி கட்சி, அதிகார மையமாக வளர்ந்துள்ளது. சமீபத்தில் நடந்த தேர்தலில் 29 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது” என்கிறார்.
“பிகாரில் பட்டியல் சாதி மக்களுக்கு கூடுதல் இடங்களை பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தள கூட்டணி கொடுத்தது. அதன்மூலம் அம்மக்களின் வாக்குகளை ஈர்க்கின்றன. அங்கு இக்கூட்டணி வெற்றி பெறுவதற்கு இது முதன்மையான காரணமாக உள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“ஆனால், தமிழ்நாட்டில் நிலைமை அவ்வாறு இல்லை” எனக் கூறும் ரவிக்குமார் எம்.பி, “இங்கு கூட்டணியில் ஒரு கட்சியாக மட்டும் அவர்களை வைத்துக் கொண்டால் போதும் எனக் கருதுகின்றனர். இதன் மூலம் வாக்குகளைப் பெறுகின்றனர்” என்கிறார்.
‘ஓபிசி மக்களின் வாக்குகளைக் கவரும் உத்தி’
பட மூலாதாரம், Facebook/Punitha Pandian
இதர பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கு பட்டியல் சாதி மக்களின் பலத்தைக் குறைக்கும் உத்தியை தி.மு.க, அ.தி.மு.க ஆகிய பிரதான கட்சிகள் மேற்கொள்வதாகவும் அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கூட்டணியில் இடப்பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடக்கும்போது, ‘கூடுதல் இடங்களைக் கொடுப்பதற்கு விருப்பம் தான். ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெறுவதில் இடையூறு ஏற்படும்’ என்றொரு காரணத்தை பிரதான கட்சிகள் முன்வைக்கின்றனர்” என்கிறார்.
சிறுபான்மையினரை விலக்கி வைத்து பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு பா.ஜ.க முயற்சி செய்வதைப் போல, தமிழ்நாட்டில் பட்டியல் சாதி மக்களை ஓரம்கட்டிவிட்டு பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெறும் முயற்சிகள் நடப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
‘சமூகப் பிரச்னை… அரசியல் அல்ல’
இதனை மறுத்துப் பேசும் தமிழ்நாடு எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவருமான புனிதப் பாண்டியன், “தமிழ்நாட்டில் 44 தனித்தொகுதிகள் உள்ளன. இவற்றில் யார் வேட்பாளர்களாக நின்றாலும் அவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்” என்கிறார்.
“தமிழ்நாட்டில் ஆளும் அரசியல் கட்சியுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் உள்ளது. வி.சி.க போன்ற ஒரு கட்சி, ஆந்திராவிலோ கர்நாடகாவிலோ கேரளாவிலோ இல்லை. எனவே அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை என்று சொல்லிவிட முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய புனிதப் பாண்டியன், “2019 ஆம் ஆண்டில் இருந்து அவர்கள் கூட்டணியில் உள்ளனர். ‘காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாவிட்டாலும் தி.மு.க உடன் கூட்டணியில் நிற்போம்’ என வி.சி.க கூறுகிறது. தி.மு.க கூட்டணியில் உரிய பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் இவ்வாறு ஏன் அவர்கள் கூற வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கும் அளவோடு தான் தி.மு.க இடங்களை ஒதுக்குகிறது. இடப்பங்கீட்டில் திருப்தி உள்ளதால் தான் தி.மு.கவை வி.சி.க ஆதரிக்கிறது. ஒரு சமூகப் பிரச்னையை அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதால் பிரச்னை தீர்ந்துவிடாது” எனவும் அவர் தெரிவித்தார்.
வி.சி.க முன்வைக்கும் விமர்சனம் குறித்து தி.மு.க செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைனிடம் கேட்டபோது, “தமிழ்நாடு அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது” என்கிறார்.
“உயர்கல்வி, மனிதவள மேம்பாடு, தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் நலன் என வெவ்வேறு பொறுப்புகளில் அவர்கள் அங்கம் வகிக்கின்றனர். அந்தவகையில் உரிய பிரதிநிதித்துவத்தை தி.மு.க அரசு கொடுத்து வருகிறது” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு