• Sun. Apr 19th, 2026

24×7 Live News

Apdin News

"தமிழ்நாட்டில் கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது.. மோடி பிரதமராக இருப்பது இந்தியாவுக்கு பெருமை" – கோவை கூட்டத்தில் கர்ஜித்த இ.பி.எஸ்

Byadmin

Apr 18, 2026


கோவையில் இன்று (ஏப்ரல் 18) அதிமுக-பாஜகவின் என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது,

“இன்று இந்தியாவே கோவையைத் திரும்பிப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இது, தமிழகத்தில் நடக்கும் தேர்தல். தமிழகத்தை சுரண்டிப் பிழைத்துக் கொண்டிருக்கும் குடும்பத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் நடக்கும் தேர்தல். குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தல். ஊழல் நிறைந்த மக்கள் விரோத ஆட்சி அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்திருக்கிறது, அதிமுக தலைமை தாங்குகிறது, மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவீர்களா?

தீயசக்தி திமுக அழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை தோற்றுவித்தார். அதன்பின் அம்மா சிறப்பான ஆட்சி கொடுத்தார்கள். பிரதமர் மோடி அவர்கள் உலகத் தலைவர்களால் பாராட்டும் அளவுக்கு இந்திய நாட்டின் பெருமையை உயர்த்திப் பிடித்தவர். நம் நாட்டை எத்தனையோ பிரதமர்கள் ஆண்டுள்ளனர், ஆனால் இந்தியா நாட்டிற்கு பிரதமர் மோடி வந்தபின்னரே பெருமை அதிகரித்துள்ளது.

இரவு, பகல் பாராமல் உழைக்கும் தலைவர் மோடி. அதிமுக, பாஜக ,பாமக, அமமுக மற்றும் பல கட்சிகள் இணைந்து அற்புதமான வெற்றிக் கூட்டணி அமைந்துள்ளது. திமுகவின் ஐந்தாண்டுகாலத்தில் 5 லட்சம் கோடி கடன் தான் சாதனை, கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.

2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி மட்டுமே, ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன். தமிழ்நாடு வளர்ச்சிபெற எந்த் நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அதிமுக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தேவையான நிதியும் திட்டங்களும் பெற்றோம், முதன்மை மாநிலமாக இருந்தோம்.

பிரதமர் எங்களின் வேண்டுகோளை ஏற்று நடந்தாய் வாழி காவிரி திட்டத்துக்கு 11,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். ஆனால் திட்டத்தை முதல்வர் நிறைவேற்றவில்லை, மத்திய அரசு திட்டம் கொடுக்கவில்லை என்று அவதூறு பரப்புகிறார்.

பிரதமர் மோடி கொடுத்த திட்டத்தை ஏன் செயல்படுத்தவில்லை? இப்படிப்பட்ட ஆட்சி தேவையா? கோவை, திருப்பூர், நீலகிரி என 23 தொகுதிகளில், 2021 தேர்தலில் 17 இடங்களை வென்றோம். இன்றைக்கும் அதே கூட்டணி, 23 தொகுதிகளிலும் 100க்கு 100 வெற்றி பெறும். அதுவும் கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை. 2021ல் 10க்கு 10 வென்றோம். ஒரு இடம் கூட திமுகவுக்குக் கிடைக்கவில்லை, திமுக ஆட்சி செய்தாலும் கோவையில் ஆட்சி செய்தது அதிமுக.

அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை என்று சொல்வதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி. திமுக ஊழல் ஆட்சி செய்கிறது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை. தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மூலைமுடுக்கெல்லாம் கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, சிறுமி முதல் பாட்டி வரை பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. இந்த தேர்தல் திமுகவை வீழ்த்தும் தேர்தல். அதிமுக ஆட்சி அமைந்த மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும். போதையில்லா மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதி, திட்டம் பெற்று தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக உருவாக்குவோம். நம் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், பாஜக வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்திலும், பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும், அமமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும். 210 இடங்களில் நம் கூட்டணி வெல்வதற்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

By admin