பட மூலாதாரம், Getty Images
விவசாயிகளுக்கு ஏற்படும் பலவிதமான பாதிப்புகளைத் தடுப்பதற்காக, காட்டுப்பன்றிகளை சுடுவதற்கான பயிற்சி, தமிழக வனத்துறையினருக்கு கோவையில் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் சுட்டுக்கொல்வதை விட, அவற்றை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அப்புறப்படுத்துவதற்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவைப் போல சுட்டுக்கொல்லும் அனுமதியை எளிதாக்க வேண்டுமென்று சில விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், அப்படி எப்போதுமே அனுமதியளிக்க முடியாது என்று தமிழக வனத்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மலைப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள குடியிருப்புகளிலும், விளை நிலங்களிலும், மனித – வன உயிரின மோதல்கள் நடப்பது, அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக, காட்டுப்பன்றிகளால் விவசாயப் பயிர்களுக்கு அதிகளவில் சேதம் ஏற்படுவதாக மாதந்தோறும் மாவட்டவாரியாக நடக்கும் விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டங்களில் பல மாவட்ட விவசாயிகள் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளின் விளைவாக, கடந்த 2023–2024 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. யானைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் காட்டுயிர்களால் ஏற்படும் மனித–காட்டுயிர் மோதல் மற்றும் பயிர்ச்சேதங்களைத் தடுக்க சிறப்புக்குழு அமைப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறப்புக்குழு கொடுத்த பரிந்துரை
தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனவிலங்குகள்) தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் விவசாயிகள் பிரதிநிதிகள், வனத்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, அறிவியல் அறிஞர்கள், காட்டுயிர் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழு, கேரளாவில் மனித – வன உயிரின மோதல்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை நேரில் சென்று கள ஆய்வு செய்து, சில பரிந்துரைகளை அரசிடம் அளித்தது.
அதன் அடிப்படையில், தமிழக வனத்துறையின் சார்பில், கடந்த ஜனவரி 9 ஆம் தேதியன்று ஓர் அரசாணை வெளியிடப்பட்டது.
அதில், மனித – காட்டுயிர் மோதலைத் தடுக்கவும், இரு தரப்பு இழப்புகளைத் தடுக்கவும் பல்வேறு பரிந்துரைகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வனத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காட்டையொட்டிய நிலங்களில் கால்நடைகளுக்குப் பதிலாக கோழி வளர்ப்பை ஊக்குவித்தல், காட்டுக்குள் மேய்ச்சலைத் தடுக்க தீவன வளர்ப்புக்கு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் மானியம் வழங்குதல், அந்நிய களைச்செடிகளை அகற்றுதல், உயிர்வேலி அமைக்க உதவுதல் உள்ளிட்ட பல திட்டங்களைச் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக, கேரளாவைப் போல தமிழகத்திலும் காட்டுப்பன்றிகளைச் சுடுவதற்கு அனுமதி வழங்க வேண்டுமென்ற விவசாய அமைப்புகளின் கோரிக்கையை பரிசீலித்து, அவற்றைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகளை வகுத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, காட்டுப்பன்றிகள் நடமாடும் பகுதிகள், 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் மண்டலம் ‘அ’ என்பது, காப்புக்காட்டிலிருந்து ஒரு கி.மீ. தொலைவு வரையுள்ள பகுதியாகக் குறிக்கப்பட்டு, அங்கு காட்டுப்பன்றிகளை சுட அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்புக்காட்டிலிருந்து 1–3 கி.மீ. வரையுள்ள பகுதி, மண்டலம் ‘ஆ’ என்பதாக வரையறுக்கப்பட்டு, அங்கு வரும் காட்டுப்பன்றிகளைப் பிடித்து வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 கி.மீ, துாரத்துக்கு அதிகமாகவுள்ள பகுதிகளை மண்டலம் ‘இ’ என்று குறிப்பிட்டு, அந்தப் பகுதிகளில் நடமாடும் காட்டுப்பன்றிகளை வனத்துறை சுட அனுமதிக்கலாம் என்றும், கொல்லப்படும் காட்டுப்பன்றிகளை இரசாயனப் பொருள் ஊற்றி புதைக்க வேண்டும் அல்லது முழுமையாக எரிக்க வேண்டும், இதற்கான கணக்கினை வனத்துறை பராமரிக்க வேண்டுமென்றும் அரசாணையில் விளக்கப்பட்டுள்ளது.
களப்பணியாளர்களுக்கு மட்டுமே சுடுவதற்கு பயிற்சி
காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு யாருக்கு பயிற்சியும், அதிகாரமும் வழங்க வேண்டுமென்பதையும் அந்த அரசாணை தெரிவித்துள்ளது.
இதன்படி காட்டுப்பன்றிகள் நடமாட்டமுள்ள ஒவ்வொரு வனச்சரகத்திலிருந்தும் களப்பணியாளர்களாகவுள்ள வனவர் மற்றும் வனக்காப்பாளர் ஆகிய இரு நிலைகளில் உள்ள வன ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
இவற்றுக்கான உபகரணங்கள், துப்பாக்கி சுடும் பயிற்சி, விழிப்புணர்வு, வேட்டை ஏற்பாடுகள், வாகனங்கள், இறந்த பன்றிகளை அழித்தல், எரித்தல் போன்றவற்றுக்குத் தேவையான செலவினம் வனத்துறை மூலமாக அரசால் வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவித்தபடி, ரூ.5 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சியை வழங்கும் தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தின் முதல்வரான சேவாசிங் பிபிசி தமிழிடம், ”தமிழகம் முழுவதும் உள்ள வன அலுவலர்களுக்கு இந்த மாதம் முழுவதும் ஐந்தாறு பிரிவாக பயிற்சி வழங்கப்படவுள்ளது. காட்டுப்பன்றியை சுடும் பயிற்சியாக மட்டுமின்றி, விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் ஊடுருவும் காட்டுயிர்களை துரத்துவது, பாதிப்புக்குள்ளான காட்டுயிர்களை மீட்பது போன்ற பல விதமான பயிற்சி வழங்கப்படவுள்ளது.” என்றார்.
வனத்துறையின் களப்பணியாளர்களுக்குரிய இந்த பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளராக ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், காட்டுயிர் ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு வகுப்புகள் எடுக்கப்படுவதுடன், காட்டையொட்டிய பகுதிகளில் நேரடியாக களப்பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி வழங்குவதற்கு, வனத்துறையில் பணியாற்றும் முன்னாள் ராணுவத்தினர் மட்டுமின்றி, ஆயுதப்படை, அதிரடிப்படை உள்ளிட்ட காவல்துறையின் உயரதிகாரிகளும் பயன்படுத்தப்படுவதாக சந்திரசேகரன் தெரிவித்தார்.
”காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்வது எளிதான காரியமில்லை. இதயம், மூளை, நுரையீரல் பகுதிகளில் சுட்டால் மட்டுமே அவை உடனே இறக்க வாய்ப்புண்டு. இல்லாவிடில் ஓடிவிடும். அத்துடன் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில்தான் வெளியில் வருகின்றன. அதனால் அவற்றைச் சுடும்போது, மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் துப்பாக்கிகளைக் கையாள வேண்டும். அத்துடன் அவற்றைப் பராமரிப்பதும் அவசியம். இவையனைத்துக்கும் பயிற்சி தரப்படுகிறது. கூடுமானவரை சுடாமல் அவற்றை அப்புறப்படுத்த வேண்டுமென்பதையும் இந்த பயிற்சியில் வலியுறுத்திச் சொல்லித் தருகிறோம். ” என்றார் அவர்
காட்டுப்பன்றி – காட்டின் துாய்மைப்பணியாளர்
காட்டுப்பன்றிகள், காடுகளின் துாய்மைப் பணியாளர் என்பதால், அவற்றைப் பெருமளவில் கொல்வது, காடு, காட்டுயிர்களின் சூழல் மற்றும் வாழ்க்கைச் சுழற்சியைப் பாதிக்கும் என்பதும் இந்த பயிற்சியில் கற்றுத்தரப்படுவதாக, பயிற்சியில் பங்கேற்ற களப்பணியாளர்கள் சிலர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
அதனால் வலை வைத்துப் பிடிப்பது, காட்டின் உட்பகுதிகளுக்குத் துரத்துவது ஆகிய நடவடிக்கைகளுக்குப் பின்பு, இறுதி முயற்சியாகவே அவற்றை சுட்டுக்கொல்ல வேண்டுமென்றும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்த பயிற்சி பெற்ற குற்றாலம் வனச்சரகத்தைச் சேர்ந்த வனவர் சங்கர் ராஜா, ”இந்தப் பயிற்சியில் காட்டுப்பன்றியை கொல்வதை விட, அவற்றை அப்புறப்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொண்டோம். வனத்துறையில் ஏற்கெனவே பயன்பாட்டிலுள்ள ரைபிள்களுடன் புதிதாக 7.62 ரக துப்பாக்கியை எப்படிக் கையாள்வது, எவ்வளவு துாரத்தில் பன்றி இருந்தால் அதை எப்படி இயக்குவது என்று தெரிந்து கொண்டோம்,” என்றார்.
”காட்டுப்பன்றிகள் இல்லாவிட்டால் காட்டுக்குள் விதை பரவலும், காட்டைத் துாய்மையாக்கும் பணியும் தடுக்கப்படும். வெளியிலிருக்கும் காட்டுப்பன்றிகளை அடர்ந்த காட்டுக்குள் விட்டு விட்டால் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு குறைவு” என்றார் கடையத்தைச் சேர்ந்த வனவர் அம்பலவாணன்.
பட மூலாதாரம், Getty Images
வனக்காப்பாளர் மற்றும் வனவர் உள்ளிட்ட களப்பணியாளர்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டாலும், இவர்களுக்கு சுடுவதற்கான உத்தரவை வழங்கும் அதிகாரம், வனச்சரக அலுவலர்களுக்கே தரப்பட்டுள்ளது.
அவர்கள்தான் இந்த ஆயுதங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டுமென்றும், அவர்களுக்கு பிஸ்டல்களைப் பயன்படுத்தவும் அனுமதியுள்ளதாக பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் தெரிவித்தார். ஆனால் வனச்சரக அலுவலரும் நினைத்த மாத்திரத்தில் இவற்றைச் சுட அனுமதிக்க முடியாது.
”ஒரு பகுதியில் காட்டுப்பன்றிகளால் தொல்லை இருப்பதாக, விவசாயிகள் உள்ளிட்ட யாரிடமிருந்தாவது வனத்துறைக்கு புகார் வந்தால் அதை கிராம நிர்வாக அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும். அவர்கள் அதை உறுதி செய்தபின்பே, காட்டிலிருந்து எவ்வளவு துாரத்தில் அவை வெளியில் வந்துள்ளன என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப அதைப்பிடித்து காட்டிற்குள் விடுவது அல்லது சுடுவது போன்ற முடிவை வனச்சரக அலுவலர் எடுக்க வேண்டும்.” என்றார் இதுகுறித்து விவரம் அறிந்த ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ்.
கேரளாவில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் முறை!
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மட்டுமின்றி, சேலம் உள்ளிட்ட வேறு மலைப்பகுதிகள் அமைந்துள்ள மாவட்டங்கள், சிவகங்கை மாவட்டம் போன்றவற்றிலும் காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக சந்திரசேகர் குறிப்பிட்டார்.
ஆனால் தமிழகத்தில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை குறித்து இதுவரை தனியாக எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை என்று தமிழக வனத்துறைத் தலைவர் சீனிவாசரெட்டி தெரிவித்தார். தமிழகம் முழுவதும் இவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கூறினார்.
கேரளாவில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்வதற்கு அந்த மாநில அரசு அனுமதி வழங்கி, அதைச் செயல்படுத்தியும் வருகிறது. ஆனால் அங்கு வேறு முறை கையாளப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஐஎப்எஸ் அதிகாரியும், துணை வனப்பாதுகாவலருமான விஜய் ஆனந்த், ”கேரளாவில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து வனத்துறை சார்பில் பயிற்சி பெற்ற துப்பாக்கி சுடும் திறன் பெற்றவர்களை வைத்து, காட்டுப்பன்றிகள் சுடப்பட்டன. பாலக்காடு, மலப்புரம், வயநாடு போன்ற மாவட்டங்களில்தான் இவற்றின் தொல்லை அதிகம். அங்கு மட்டும் 1500, மாநிலம் முழுவதும் சேர்த்து 2500க்கும் அதிகமான காட்டுப்பன்றிகளைக் கொன்றோம்.” என்றார்.
அதன்பின், இந்த முறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்த விஜய் ஆனந்த், அங்கு கிராம ஊராட்சித் தலைவரை கெளரவ வனக்காப்பாளராகவும், ஊராட்சி செயலாளரை அனுமதியளிக்கும் அதிகாரமுள்ள அலுவலராகவும் கேரள அரசு அங்கீகரித்துள்ளதாக கூறினார்.
அதனால் காட்டுப்பன்றிகள் தொல்லை குறித்து, கிராம ஊராட்சித் தலைவரிடமே சம்மந்தப்பட்டவர்கள் முறையிடலாம் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார்..
”ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் லைசென்ஸ் பெற்ற ரைபிள் சூட்டர்களை வைத்து, அவர்களே காட்டுப்பன்றிகளைக் கொன்று விடுகின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரையிலும், முன்பு 2500க்கும் அதிகமான காட்டுப்பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன. அவற்றின் உடலை அழிக்கும் பொறுப்பு ஊராட்சிகளுக்கு இருந்தாலும் விவசாயிகளே அதைச்செய்கின்றனர். ”என்றார் விஜய் ஆனந்த்.
பட மூலாதாரம், Getty Images
கேரளாவை போல இங்கு அனுமதிக்கப்படாது – வனத்துறை
கேரளாவைப் போலவே இங்கும் காட்டுப்பன்றிகளைக் கொல்வதற்கு அனுமதி வழங்க வேண்டுமென்று சில விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஒரு சில அமைப்புகள், விவசாயிகளே இதைக் கொல்ல அனுமதி தர வேண்டுமென்று, விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டங்களில் வலியுறுத்தி வருகின்றன. அதே நேரத்தில் அத்தகைய அனுமதி பல பிரச்னைகளை உருவாக்கும் என்றும் சிலர் ஒப்புக்கொள்கின்றனர்.
நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஏ.எஸ்.பாபு, ”அப்படி அனுமதித்தால் அது தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு அதிகம். அதற்காக காட்டிலிருந்து காட்டுப்பன்றிகள் வெளியே வரும் துாரத்தைக் கணக்கிட்டு, அவற்றைக் கொல்லாமல் பிடித்து, காட்டுக்குள் கொண்டு சென்று விடுவது என்ற திட்டம் எந்த வகையிலும் பயன் தராது. தொடர்ச்சியாக வரும் காட்டுப்பன்றிகளைக் கொல்வது மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையும்.” என்று தெரிவித்தார்.
காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல எளிதாக அனுமதித்திருப்பதால், காடுகளின் துாய்மைப் பணியாளராக விளங்கும் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை, கேரளாவில் குறைந்துள்ளதாகக் கூறுகின்றனர் தமிழக வனத்துறை அதிகாரிகள்.
ஆனால் காட்டை விட்டு வெளியில் வரும் காட்டுப்பன்றிகள்தான் சுடப்படுகின்றன என்பதால் அவற்றின் எண்ணிக்கை குறையவில்லை என்று கூறும் கேரள ஐஎப்எஸ் அதிகாரி விஜய் ஆனந்த், இந்த நடவடிக்கைகளால் விவசாயிகளின் பாதிப்புகளும் புகார்களும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.
காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை பற்றி பிபிசி தமிழிடம் பேசிய தமிழக வனத்துறைத் தலைவர் சீனிவாச ரெட்டி, ”கேரளாவைப் போல இங்கே காட்டுப்பன்றிகளை அழிக்க அனுமதிக்க முடியாது. அதே நேரத்தில் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழக வனத்துறை உறுதியாக இருக்கிறது. அந்த நடவடிக்கை தொடர்ச்சியானதாகவும் இருக்கும். இதனால் நிச்சயம் தீர்வு கிடைக்கும். இதற்குத் தேவைப்படும் நிதியும் அவ்வப்போது ஒதுக்கப்படும்.” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.