தேநீர் அருந்துவதற்காக ரயிலில் இருந்து இறங்கி 22 வருடங்களாக தமிழ்நாட்டில் கொத்தடிமையாக சிக்கித் தவித்த கொண்டகோரி சுக்கையா என்கிற கோனேரு அப்பாராவ் இறுதியாக தனது குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தார்.
2003 ஆம் ஆண்டு தனது குடும்ப உறுப்பினர்களை விட்டுப் பிரிந்த அப்பாராவ் கொத்தடிமையாக இருந்தநிலையில், 2025 ஜனவரி 31 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். ஆனால் உடனடியாக தனது குடும்ப உறுப்பினர்களுடன் அவரால் சேர முடியவில்லை.
அவருக்கு அதிக விஷயங்கள் ஞாபகத்தில் இல்லாதே இதற்குக் காரணம். ஆனால் அவர் தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலத்தின் பார்வதிபுரத்திற்கு அருகிலுள்ள ஜம்மிதிவல்சா, ஜிங்கிதிவல்சா போன்ற சில ஊர்களின் பெயர்களைக் குறிப்பிட்டார்.
2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஒடிசா மற்றும் பார்வதிபுரத்தின் எல்லையோர கிராமங்களில் உள்ள உள்ளூர் மக்களை பிபிசி சந்தித்தது.
அப்பாராவ் குறிப்பிட்ட கிராமங்களில் யாராவது அவரை நினைவில் வைத்திருக்கிறார்களா என்று அறியவே இந்த முயற்சி. பிறகு அப்பாராவின் சமீபத்திய நிலை குறித்த கட்டுரையை பிபிசி வெளியிட்டது.
“பிபிசி கட்டுரையைப் பார்த்ததும் அப்பாராவ் குடும்பத்தினர் மார்ச் 10 அன்று எங்களை தொடர்பு கொண்டனர். உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது,” என்று பார்வதிபுரம்-மான்யம் மாவட்ட ஆட்சியர் அ. ஷியாம் பிரசாத் பிபிசியிடம் தெரிவித்தார்
“வேலைக்குச் சென்ற என் தந்தை திரும்பி வராதபோது அவர் இறந்துவிட்டார் என்று நினைத்தோம். பிபிசியில் அவரைப் பற்றி படித்தபோது என் தந்தையை நான் அடையாளம் கண்டுகொண்டேன்,” என்று அப்பாராவின் மகள் சய்யம்மா தெரிவித்தார்.
அப்பாராவ் தற்போது தனது மகள் சய்யம்மா வீட்டில் தங்கியுள்ளார்.
ஒடிசாவை சேர்ந்த அப்பாராவ் எப்படி தமிழ்நாட்டில் கொத்தடிமையாக சிக்கிக் கொண்டார், அவர் எப்படி விடுவிக்கப்பட்டார்?
2003 இல் என்ன நடந்தது…
அப்பாராவை சந்திக்க முனக்காயவல்சாவில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு பிபிசி சென்றது. அங்கு சூழல் கலகலப்பாக இருந்தது.
அப்பாராவின் வேறு சில உறவினர்களும், அவரது சகோதரிகளும் அவரைச் சந்திக்க வந்திருந்தனர். எல்லோரும் சேர்ந்து உணவு சாப்பிட்டபடி 20 வருடங்களுக்கு முந்தைய ஊர் கதைகளை அப்பாராவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
சுக்கையா என்கிற அப்பாராவ் 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை பிபிசியிடம் கூறினார்.
“என்னுடை ஊர் ஒடிசாவில் உள்ள சீனவல்லா கிராமம். 2003 இல் சில நண்பர்களுடன் வேலை நிமித்தமாக சென்னைக்குப் புறப்பட்டேன். எங்கே என்று சரியாக ஞாபகம் இல்லை ஆனால்…தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் தேநீர் அருந்துவதற்காக ரயிலில் இருந்து இறங்கி மீண்டும் ரயிலில் ஏறுவதற்குள் ரயில் கிளம்பி விட்டது. எனவே பாண்டிச்சேரி சென்றுகொண்டிருந்த வேறு ஒரு ரயிலில் ஏறினேன்.
நடுவில் எங்கோ இறங்கி சிவகங்கை மாவட்டம் செல்லும் பேருந்தில் ஏறினேன். அங்கே காபி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஒருவர் என் பெயர், ஊர், வயது போன்ற விவரங்களை கேட்டார். என்னை கிராமத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறி என்னை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றார். அவர் பெயர் அண்ணாதுரை.’
என்னை ஊருக்கு அனுப்பாமல், அன்றிலிருந்து தன் ஆடு, ஆடுகளை மேய்ப்பவராக என்னை ஆக்கிவிட்டார். எப்போது பணம் கேட்டாலும் வங்கிக்கு செல்ல வேண்டும் என 22 ஆண்டுகளாக கூறி வந்தார்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக 2025 ஜனவரி 31 ஆம் தேதி அதிகாரிகள் அப்பாராவை பற்றி தெரிந்துகொண்டு அவரை விடுவித்தனர்.
“அண்ணாதுரை கைது செய்யப்பட்டார்,” என்று அப்பாராவ் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 28, 2025
அப்பாராவ் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்த ஊர் பற்றிய விவரங்களைச் சரியாகச் சொல்ல முடியாததால், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.
முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த அப்பாராவிடம் பிபிசி பேசியது.
அப்போது அவர் பார்வதிபுரம் அருகே உள்ள ஜம்மிதிவல்சா என்றும் ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள ஜம்மிதிவல்சா என்றும் ஊர்களின் பெயர்களை குறிப்பிட்டார்.
அப்பாராவ் குறிப்பிட்ட எல்லா கிராமங்களுக்கும் சென்று அவரது குடும்பத்தினரை கண்டுபிடிக்க பிபிசி முயன்றது. ஆனால் யாருக்கும் அவரைப்பற்றி தெரியவில்லை. அதன்பிறகு இது குறித்து மார்ச் 4 ஆம் தேதி பிபிசியில் செய்தி வெளியிடப்பட்டது.
மாவட்ட ஆட்சியரின் தொலைபேசி அழைப்பு..
பார்வதிபுரம் மாவட்ட ஆட்சியரும் சில குழுக்களை பார்வதிபுரத்தின் சில கிராமங்களுக்கு அனுப்பினார், ஆனால் அவர்களுக்கும் வெற்றி கிடைக்கவில்லை.
கொனேரு அப்பாராவின் குடும்பம் மார்ச் 10 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது என்று பார்வதிபுரம் கலெக்டர் ஷியாம் பிரசாத் பிபிசியிடம் தெரிவித்தார்.
“ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தைச்சேர்ந்த ஒருவர் பிபிசியில் வந்த செய்தியை பார்த்து என்னை போனில் தொடர்பு கொண்டு, கொனேரு அப்பாராவ் என் சகோதரர். ஆனால் அவரது பெயர் கொனேரு அப்பாராவ் அல்ல கொண்டகோரி சுக்கையா என்றும், கோராபுட் மாவட்டத்தில் உள்ள சீனவாலாடா கிராமத்தை சேர்ந்தவர் என்றும் கூறினார்,” என்று மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார்.
பார்வதிபுரத்தில் உள்ள முனக்காயவல்சா கிராமத்துக்கு புலம்பெயர்ந்து அப்பாராவின் மகள் சய்யம்மாவும், மருமகன் தொம்புதூரா சந்துவும் வசித்து வருகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.
மார்ச் 15: தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம்
பார்வதிபுரம் மாவட்ட ஆட்சியர், அப்பாராவின் மகள் என்று கூறிய சாயம்மாவின் குடும்பத்தினர் அளித்த விவரங்களை சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் பகிர்ந்து கொண்டார். அப்பாராவ் கூறிய விவரங்களை ஒப்பிட்டு பார்த்த அதிகாரிகள் அது அவரது குடும்பம்தான் என்று முடிவு செய்தனர்.
தனது தாய் இறந்துவிட்டதாகவும், தந்தையை கவனித்துக்கொள்ள தான் விரும்புவதாகவும் அப்பாராவின் மகள் சாயம்மா, பார்வதிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்.
பார்வதிபுரத்தில் இருந்து அதிகாரிகள் குழு, அப்பாராவின் மகள் மற்றும் மருமகன் சந்துவுடன் ஒரு சிறப்பு வாகனத்தில் அப்பாராவை சந்திக்க சிவகங்கை மாவட்டத்திற்கு சென்றது.
அங்கே அப்பாராவை பார்த்த சாயம்மா அவர் தனது தந்தைதான் என்று உறுதியாகக் கூறினார். ஒருவரை ஒருவர் பார்த்து அவர்கள் கண்ணீர் வடித்தனர்.
“22 வருடங்களுக்குப் பிறகு என் தந்தையைப் பார்த்த அந்தத் தருணம் மிகவும் உணர்ச்சிவசமானது. அப்பா காணாமல் போன 3 மாதங்களிலேயே என் அம்மா துக்கத்தில் இறந்து போனார். இப்போது என் அப்பாவுக்கு நான் இருக்கிறேன். அவர் எங்களுடன் இருப்பார்,” என்று சாயம்மா பிபிசியிடம் கூறினார்.
மார்ச் 17: பார்வதிபுரம் மாவட்டத்தில்…
தமிழகத்தில் சம்பிரதாயங்களை முடித்தபிறகு மார்ச் 17 ஆம் தேதி அப்பாராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் பார்வதிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
சுக்கையாவுக்கு உடனடியாக ஆதார் அட்டை கிடைப்பதை உறுதி செய்வோம் என்று கலெக்டர் கூறினார். ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட அவருக்கு ஆடுகள் வழங்கப்படும் என்றும் தேவைப்பட்டால் ஒரு வீடும் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மார்ச் 18: அப்பாராவ் பிபிசியை சந்தித்தார்
முலக்காயவல்சா கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருக்கும் அப்பாராவ் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திக்க பிபிசி சென்றது.
“என் பெயர் கொண்டகோரி சுக்கையா. ஆனால் நான் அண்ணாதுரையுடன் பணிபுரியும் போது என்னை எல்லோரும் அப்பாராவ் என்றுதான் அழைப்பார்கள். அதற்கு நான் பழகிவிட்டேன். அதனால்தான் என் பெயர் அப்பாராவ் என்று சொன்னேன். அண்ணாதுரை வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு செம்மறி ஆடுகளை மேய்ப்பதுதான் என் தினசரி பணி. பணம் கேட்டால் வங்கிக்குப் போய் கொண்டுவருவதாக சொல்வார். ஆனால் அவர் ஒருபோதும் எனக்கு பணம் கொடுக்கவில்லை. உணவு மட்டும் கொடுப்பார்,” என்று அப்பாராவ் தெரிவித்தார்.
“இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் என் பேரக்குழந்தைகளுடன் விளையாடுகிறேன். அண்ணாதுரை எனக்கு ஈட்டுத்தொகையாக 10 லட்சம் ரூபாய் தர வேண்டும்,” என்று சுக்கையா என்ற அப்பாராவ் கூறினார்.
“என் மாமா காணாமல் போவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு எங்களுக்கு திருமணம் நடந்தது. அவர் காணாமல் போனதும், சென்னை மற்றும் திருப்பதியைச் சுற்றியுள்ள பல இடங்களில் அவரைத் தேடினோம். ஆனால் அவர் கிடைக்கவில்லை,” என்று அப்பாராவின் மருமகன் சந்து பிபிசியிடம் கூறினார்.
“அப்பாராவுடன் சென்றவர்கள் கிராமத்திற்கு திரும்பி வந்துவிட்டனர். ஒருவேளை அவர் இறந்திருப்பார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இப்போது என் மூத்த சகோதரர் திரும்பி வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று அப்பாராவின் சகோதரி சீதா குறிப்பிட்டார்.
“சிறிது காலம் அவரைத் தேடினோம். பிறகு அவர் இறந்துவிட்டார் என்று கருதி அவரைத் தேடுவதை நிறுத்திவிட்டோம்,” என்று அப்பாராவின் மகள் தெரிவித்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு