
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. இந்தப் பணிகள் எப்படி நடக்கின்றன, வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர். – Special Intensive Revision – SIR) நவம்பர் 4ஆம் தேதியன்று மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி மொத்தம் 9 மாநிலங்களிலும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களிலும் இந்த எஸ்.ஐ.ஆர். பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பிகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர். பல சர்ச்சைகளுக்கு உள்ளானது.
தமிழ்நாட்டிலும் ஆளும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருந்தபோதும், தற்போது வாக்காளர் பட்டியலுக்கான இந்த சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக, 2002-2005 காலகட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையானது, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மாநிலம் முழுவதும் நடைபெறும்.
தமிழ்நாட்டில் சுமார் 6.36 கோடி வாக்காளர்கள்
இந்தக் காலகட்டத்தில் அனைத்து வாக்காளர்களும் தங்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இந்தப் பணிகள் நவம்பர் 4ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 7ஆம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் வீடுதோறும் படிவங்களைக் கொடுத்து பூர்த்தி செய்யும் பணி நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதிவரை ஒரு மாத காலத்திற்கு நடக்கவுள்ளது. இதற்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்படும்.
அதில் விடுபட்ட பெயர்களைச் சேர்க்கவும் ஆட்சேபணைகளைத் தெரிவிக்கவும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்படும். இது தொடர்பான விசாரணைகள், சேர்த்தல்கள் முடிவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் நவம்பர் 4ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் இதற்கான பணிகளைத் துவங்கியுள்ளனர்.
சென்னையில் மட்டும் 3,718 அலுவலர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணிகள் எவ்வாறு நடக்கும்?
நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரையிலான காலகட்டத்தில் வாக்காளர்களிடம் அவர்களைப் பற்றிய படிவங்களைக் கொடுத்து பூர்த்தி செய்யும் பணிகள் நடக்கும். அதன்படி தற்போது வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) சமீபத்திய வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வீடு வீடாகச் சென்று இதற்கான படிவங்களை விநியோகித்து வருகின்றனர்.
இந்தப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளும் வாக்காளர்கள் அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளைப் பூர்த்தி செய்து திரும்ப வாக்குச் சாவடி அலுவலர்களிடமே தர வேண்டும்.
ஒரு வீட்டிற்கு பிஎல்ஓ செல்லும்போது அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தால், வேறொரு நாள் மீண்டும் அந்த வீட்டிற்குச் சென்று பார்க்க வேண்டும். மூன்று அல்லது நான்கு முறை இது போலச் செய்ய வேண்டுமென அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஒரு வீட்டிற்கு அலுவலர் செல்லும்போது, வாக்காளர் பட்டியலில் இருப்பவர்கள் அந்த வீட்டில் இல்லாமல், புதிதாக யாராவது குடி வந்திருந்தால் அவர்களுக்கு படிவம் வழங்கப்பட மாட்டாது. அந்த வீட்டில் ஏற்கெனவே குடியிருந்தவர்கள் அருகிலுள்ள தெருக்களில் குடியேறியிருந்தால், அலுவலர்கள் அங்கு சென்று இந்தப் படிவங்களை வழங்குகின்றனர்.
பல தருணங்களில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதற்கு உதவுகின்றனர். ஆனால், அங்கு குடியிருந்தவர்கள் வேறு தொகுதிக்குச் சென்றுவிட்டால் இதே அலுவலர்களால் அந்தப் படிவங்களை அங்கு தர முடியாது. இந்தப் பகுதியில் இருப்பவர்கள் அவர்களுக்கு வாங்கி வைத்து உதவலாம்.
ஒரு வீட்டில் ஐந்து வாக்காளர்கள் இருந்தால், வீட்டில் இருக்கும் ஒருவரே அனைத்துப் படிவங்களையும் வாங்கி வைத்து, பிறகு பூர்த்தி செய்து அளிக்கலாம்.

இந்தப் படிவத்தில் என்ன கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்?
வாக்காளர்களிடம் கொடுக்கப்படும் படிவங்களைப் பொறுத்தவரை அவை தனித்துவமானவை. அதாவது, ஒவ்வொரு வாக்காளரும் அவர்களுக்கென வழங்கப்படும் படிவங்களை மட்டுமே பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
அதற்குக் காரணம், அந்தப் படிவத்தில் ஏற்கெனவே அவர்களது பெயர், முகவரி, வாக்குச் சாவடி, தொகுதி, புகைப்படம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இதனால், இன்னொருவர் இந்தப் படிவத்தைப் பயன்படுத்த முடியாது.
இந்தப் படிவத்தில் மூன்று பிரிவுகளில் தகவல்கள் கேட்கப்படுகின்றன. முதல் பிரிவில், சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அதாவது, பிறந்த தேதி, ஆதார் எண், மொபைல் எண், பெற்றோர் பெயர்கள், துணைவர் பெயர் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
இரண்டாவது பிரிவில், முந்தைய சிறப்புத் தீவிர திருத்தத்தின்போது (2002 – 2005) இடம்பெற்றிருந்த தகவல்களை அளிக்க வேண்டும். வாக்காளரின் பெயர், முந்தைய அடையாள எண், உறவினரின் பெயர், மாவட்டம், தொகுதி போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.
மூன்றாவது பிரிவில், உறவினர்களைப் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அதாவது, இரண்டாவது பிரிவில் எந்த உறவினரின் பெயர் அளிக்கப்பட்டதோ அவர்களைப் பற்றிய விவரங்களை இங்கே எழுத வேண்டும். இவையெல்லாம் தவிர தற்போதைய புகைப்படம் ஒன்றையும் இந்தப் படிவத்தில் ஒட்ட வேண்டும்.
இந்த விவரங்களைப் பூர்த்தி செய்தபிறகு, அந்தப் படிவத்தை அதே பிஎல்ஓ-விடம் ஒப்படைக்கலாம். படிவத்தை அளித்த அலுவலர்களே சில நாட்களுக்குப் பிறகு வந்து படிவங்களைப் பெற்றுக்கொள்வார்கள் அல்லது அவர்களை மொபைல் போனில் அழைத்து படிவங்களைக் கொடுக்கலாம்.

முந்தைய வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயரை எப்படி அறிவது?
முந்தைய வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது பெயர்களை வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான voters.eci.gov.in-இல் இருந்து பெற முடியும். ஆனால், ஒரு சாதாரண வாக்காளரால் 2002 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிந்தைய பட்டியலை எடுத்துப் பார்த்து, அதில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்வது சாத்தியமா?
அப்படியான சூழலில் “வாக்காளர்களை அணுகும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், தங்களிடம் 2002 – 2005 ஆகிய ஆண்டுகளின் வாக்காளர் பட்டியலை வைத்திருப்பார்கள். அவர்கள், இந்த விவரங்களைப் பூர்த்தி செய்ய உதவுவார்கள்” என்கிறது சென்னை மாநகராட்சி.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய வாக்குச் சாவடி நிலை அலுவலரான ராஜேஷ், நிறைய பேர் இது தொடர்பாக கேட்பதாகத் தெரிவித்தார்.
“இதற்கு முன்பாக இருந்த வாக்காளர் பட்டியல் குறித்து பலர் சந்தேகம் கேட்கிறார்கள். வேறு சிலரிடம் பழைய வாக்காளர் அடையாள அட்டை இருக்காது. ஆகவே அவர்களது விவரங்களை எங்களிடம் இருக்கும் பட்டியலில் இருந்து எடுத்து பூர்த்தி செய்து கொடுக்கிறோம். சிலர் இடம் மாறிச் சென்றிருப்பார்கள். அவர்களைத் தெரிந்தவர்கள் இருந்தால் படிவங்களைக் கொடுத்து விடுகிறோம்” என்கிறார் ராஜேஷ்.
ஆனால் பெரும்பாலானவர்களுக்கு, தாங்கள் வேறு இடத்தில் இருந்து புதிய இடத்திற்கு வந்திருக்கிறோம், இப்போது என்ன செய்வது என்பதே கேள்வியாக இருக்கிறது என்கிறார் மற்றொரு பிஎல்ஓவான நேசமணி.
வாக்காளர்கள் இந்தப் படிவங்களைப் பூர்த்தி செய்து திரும்ப அளிக்கும்போது முந்தைய வாக்காளர் பட்டியல் விவரங்களை அளிக்காவிட்டாலோ, அளித்த விவரங்கள் பொருந்தாவிட்டாலோ, அந்த வாக்காளர்கள் தங்கள் பிறந்த தேதியையும் இடத்தையும் உறுதி செய்யும் வகையிலான ஆவணங்களை வழங்க வேண்டியிருக்கும்.

யார் என்ன ஆவணங்களை வழங்க வேண்டும்?
முந்தைய வாக்காளர் பட்டியல் விவரங்களை வழங்க முடியாதவர்கள் மூன்று பிரிவுகளில் அடங்குவார்கள்:
- கடந்த 1987க்கு முன்பாக இந்தியாவில் பிறந்தவர்கள்,
- கடந்த 1987ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிறந்தவர்கள்,
- மூன்றாவதாக, 2004க்குப் பிறகு இந்தியாவில் பிறந்தவர்கள்
இதில் 1987க்கு முன் பிறந்தவர்கள் தங்கள் பிறந்த தேதியையும் பிறந்த இடத்தையும் நிரூபிக்கும் வகையிலான ஆவணங்களை வழங்க வேண்டும்.
இரண்டாவதாக, 1987 முதல் 2004க்குள் பிறந்தவர்கள் தங்களுடைய பிறந்த தேதி/இடம் ஆகியவற்றை நிரூபிக்கும் சான்றிதழையும் தாயாரின் பிறந்த தேதி/இடத்தை நிரூபிக்கும் சான்றிதழையும் வழங்க வேண்டும்.

இறுதியாக, 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள், தங்களுடைய பிறந்த தேதி/இடம் ஆகியவற்றை நிரூபிக்கும் சான்றிதழையும் தந்தை, தாய் ஆகிய இருவரின் பிறந்த தேதி/இடத்தை நிரூபிக்கும் சான்றிதழையும் வழங்க வேண்டியிருக்கும்.
பிறந்த தேதியையும் இடத்தையும் உறுதி செய்யும் ஆவணங்களாக பத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ளது. அதன்படி, மத்திய, மாநில அரசுகளின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள், பல்கலைக் கழகங்களின் சான்றிதழ், மாநில அதிகாரிகளால் வழங்கப்படும் நிரந்தர உரிமைச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வழங்கலாம்.
இத்தனையையும் தாண்டி, வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டால் என்ன செய்வது?
டிசம்பர் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, அதில் தங்கள் பெயர்கள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அப்படி பெயர் விடுபட்டவர்கள் இது தொடர்பான படிவங்களைப் பூர்த்தி செய்துகொடுத்து பெயரை இணைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு