தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டாலும், சந்தையில் அரிசி விலையும் குறைந்து வரும் வித்தியாசமான சூழல் உருவாகியுள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அரிசி விலை கிலோ ரூ.5 முதல் ரூ.8 வரை குறையும் என்று அரிசி மில் உரிமையாளர்களும், வணிகர் சங்கங்களும் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி குறையும் போது அரிசி விலை உயராமல் குறைவது ஏன்? இதனால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு?
“இரண்டு மாதங்கள் விலை உயராது”
தமிழ்நாட்டில் சன்ன ரக அரிசி பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இப்போது மொத்த சந்தையின் சன்ன ரக அரசியின் விலை குறைந்திருப்பதால் 25 கிலோ நெல் மூட்டையின் விலை ரூ.400 வரைக்கும் குறைவாக விற்பனையாகிறது என்கிறார் தென்காசியில் அரிசி மில் நடத்திவரும் வைகுண்டராஜன், “சன்ன ரக அரிசிக்கான ஒரு மூட்டை நெல் ரூ.1400க்கு வாங்கி வந்தோம். ஆனால், இந்த ஆண்டு மூட்டைக்கு ரூ.400 குறைந்துள்ளது” என்றார்.
நெல் அறுவடை தற்போது தொடங்கியிருப்பதால், குறைந்தது இரண்டு மாதங்களுக்கு, கடைகளில் விற்கப்படும் அரிசியின் விலை குறைவாக இருக்கும் என்று கூறிய அவர் “சன்ன ரக அரிசி என்பது 60 முதல் 90 நாட்களில் விளையக் கூடியதாகும். அம்பாசமுத்திரம் உட்பட நெல்லையை சுற்றியுள்ள பகுதிகளில் அறுவடை தொடங்கி ஒருவாரம் ஆகிறது. எனவே அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு அரிசியின் விலை குறையும். கடைகளில் மக்கள் வாங்கும் அரிசி கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.8 வரை குறையக்கூடும். எங்களுடைய மில்லில் இருந்து ஒரு நாளுக்கு 23 டன் அரிசி விற்பனையாகிறது. ” என்றார்.
தமிழ்நாட்டில் மக்களின் அரிசி தேவையில் 50% சில்லறை வணிக கடைகள் மூலமாக பூர்த்தி செய்யப்படுகின்றன என்று கூறும் வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் விக்கிரமராஜா பெரும்பாலான அரிசி வகைகளின் விலை வரும் நாட்களில் குறையப் போகிறது என்பதை உறுதி செய்தார்.
“தமிழ்நாட்டில் ஐந்து லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. அதில் ரேஷன் கடைகளில் கிடைப்பது போக கிட்டத்தட்ட 2.5 லட்சம் டன் அரிசி கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. நெல் கொள்முதல் விலை குறைந்துள்ளதால், கடைகளில் விற்கப்படும் அரிசியின் விலை ரூ.48 முதல் ரூ.50 லிருந்து , ரூ.42 ஆக குறையலாம்” என்ற எதிர்பார்ப்பை நம்மிடம் கூறினார்.
விளைச்சல் பாதிப்பு என்று கூறும் விவசாயிகள்
இந்த ஆண்டு மழை பொழிவு நன்றாக இருந்தாலும், பயிர்களை அறுவடை செய்யும் நேரத்தில் மழை பெய்ததால், பல மாவட்டங்கள் நெல் சேதமாகியுள்ளது என்கின்றனர் விவசாயிகள் சங்கங்கள்.
“இந்த ஆண்டு விளைச்சல் குறைவு, இப்போது கொள்முதல் விலையும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள்தான் கடுமையாக பாதிக்கப்படுகிறோம்” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன்.
“திருச்சி மாவட்டத்தில் பிபிடி எனப்படும் நெல் வகை ( தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் அரிசி வகை) பயிரிட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 13 மூட்டை நெல் கிடைத்த நிலை மாறி இந்த ஆண்டு அதிகபட்சம் எட்டு மூட்டை மட்டுமே நெல் கிடைக்கிறது. தொடர்ந்து மழை பெய்வது மற்றும் வெயில் குறைவாக இருந்த காரணத்தினால் பூச்சி தாக்கி பயிர்கள் சில பகுதிகளில் சேதமடைந்துள்ளன” எனறு அவர் கூறினார்.
நெல் உற்பத்தி குறைந்தாலும் அரிசி விலை குறைவது ஏன்?
வெளிமாநிலங்களிலிருந்து இந்த ஆண்டு அதிக அளவில் அரிசி வாங்கியதால் தான் தமிழ்நாட்டில் விளைந்துள்ள நெல்லுக்கு குறைவான விலை நிர்ணயிக்கப்படுவதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறுகிறார்.
“கர்நாடகாவில் சுமார் 28 லட்சம் ஏக்கர் நிலம் விளைவிக்கப்படுகிறது, அங்கே, இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக உள்ளது. எனவே அவர்களிடமிருந்து குறைந்த விலைக்கு நெல் வாங்கி சேமித்து வைக்கப்பட்டுள்ளது.” என்கிறார் அவர்.
மேலும், “கடந்த ஆண்டு ஒரு மூட்டை நெல் ரூ.1800 வரை விற்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தனியார் மில்களில் ரூ.1200 அல்லது ரூ.1300க்கு கேட்கிறார்கள். அரசு விற்பனை மையத்தில் சுமார் ரூ.1400 நிர்ணயிக்கப்படுகிறது. பயிர் செய்ததை விற்க முடியாமல் போகுமோ என்ற பயத்தில் கேட்கும் விலைக்கு விற்க விவசாயிகள் தயாராகவுள்ளனர்” என்றார்.
தமிழ்நாட்டில் பயன்படுத்துவதில் 90% புழுங்கல் அரிசியாகவும் 10% பச்சரிசியாகவும் இருக்கிறது. “இதில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொன்னி அரிசி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பொன்னி என்று கூறும் போது, கர்நாடகா பொன்னி தான் சந்தையில் அதிகம் கிடைக்கிறது. கன்னியாகுமரியில் மோடா ரக குண்டு அரிசி பயன்படுத்தப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் விளையும் அரிசி 71% பயன்படுத்தப்படுகிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவிலிருந்து 29% அரிசி வருகிறது” என்கிறார்.
குறைந்தபட்ச ஆதார விலை கேட்கும் விவசாயிகள்
“தமிழ்நாட்டில் மழைப்பொழிவு காரணமாக நெல் விளைச்சல் அதிகமாக இருக்கலாம் என்று சில வாரங்களுக்கு முன்பு வரை எதிர்ப்பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஃபெஞ்சல் புயலுக்கு பின் நிலைமை மாறியுள்ளது” என்கிறார் எம்.ஐ.டி.எஸ் நிறுவனத்தில் மூத்த ஆய்வாளராக இருக்கும் உதயபாரதி.
“குறிப்பாக பொங்கல் பண்டிகை காலத்தின் போது பரவலாக பெய்த மழை பயிர்களை சேதப்படுத்தி, அறுவடையை தாமதப்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தில் அறுவடைக்காக இருந்த இயந்திரங்களை, பொங்கல் நேரத்தில் ஆந்திராவுக்கு வாடகைக்கு அனுப்பி வைத்திருந்தனர் விவசாயிகள்” என்கிறார். நெல் விளைச்சலில் சரிவு ஏற்படும் சமயத்தில் கொள்முதல் விலையும் சரிந்திருப்பது நேரடியாக விவசாயிகளைத்தான் பாதிக்கும் என்று ஆய்வாளர்களும், விவசாயிகளும் தெரிவிக்கிறார்கள்.
இந்த சூழலை கணக்கில் கொண்டுதான் குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் கேட்கிறோம். எம்.எஸ்.சுவாமிநாதன் முன்மொழிந்த அடிப்படையில் விலையை தீர்மானித்து அதனை சட்டப்படி உறுதி செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையை தருவதே விவசாயிகளுக்கான நிரந்தர தீர்வாக இருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
“1970களில் நெல் ஒரு மூட்டை ரூ.40க்கு விற்கப்பட்டது. அப்போது வங்கி மேலாளர் ஒருவருக்கு ரூ.150 சம்பளமாக இருந்தது- அதாவது நான்கு மூட்டை நெல். இன்று வங்கி மேலாளருக்கு ரூ.1 லட்சம் சம்பளம் கிடைக்கும், ஆனால் நெல் மூட்டையின் விலை ரூ.1800ஐ தாண்டவில்லை. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற கமிட்டி கூறியுள்ளது. பல ஆண்டுகளாக போராடிய போதும் இன்னும் கிடைக்கவில்லை” என்கிறார் அய்யாகண்ணு.