தமிழ்நாட்டில் வரும் பொங்கலை முன்னிட்டு, ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரொக்கத் தொகை குறித்து தமிழக அரசின் அறிவிப்பில் ஏதும் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டுகளைப் போலவே ரொக்கத் தொகையை வழங்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு அளித்துள்ள பதில் என்ன? பரிசுத் தொகை இல்லை என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்யுமா?
தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் தினத்தை ஒட்டி, குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு விலையில்லா வேட்டி, சேலை ஆகியவற்றோடு சேர்த்து அரிசி, சர்க்கரை, கரும்பு போன்ற பொருட்களும் ரொக்கமும் வழங்கப்பட்டுவந்தன.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில், இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி அரிசி அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
ஆனால், இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. பொங்கலை ஒட்டி வழக்கமாக வழங்கப்படும் ரொக்கப் பரிசு ஏதும் வழங்கப்படாதது குறித்து அக்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.
இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பன போன்ற காரணங்களைக் கூறி மக்களுக்கான உரிமைகளை அரசு மறுக்கக்கூடாது. மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியை போராடியோ, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தோ பெற வேண்டிய மாநில அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தவறியதற்காக தமிழக அரசு மக்களை தண்டிப்பது நியாயமற்றது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்களுக்கு கூடுதலாக உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதும், ஆட்சிக்கு வந்த பின்னர் உதவி வழங்க மறுப்பதும் திமுகவின் இரட்டை வேடம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் பொங்கல் பரிசாக ரொக்கத் தொகை வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
நீண்ட கால நடைமுறை
தமிழ்நாட்டில், பொங்கலை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு பரிசு வழங்கும் வழக்கம் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது.
1980களின் துவக்கத்தில், கைத்தறி நெசவாளர்களுக்கு பலனளிக்கும் வகையில், அவர்களிடமிருந்து வேட்டி, சேலைகளை கொள்முதல் செய்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக அளிக்கும் வழக்கம் துவங்கியது.
1983ஆம் ஆண்டில், கிராமப்புற மக்களுக்கு என துவங்கப்பட்ட இந்தத் திட்டம் பிறகு, அரிசி வாங்குவதற்கான குடும்ப அட்டை வைத்திருப்போர் அனைவருக்கும் என விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில், 2009ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை ஒட்டி அரிசி, சர்க்கரை ஆகியவை இலவசமாக வழங்கப்படும் திட்டம் துவங்கப்பட்டது. திட்டம் துவங்கப்பட்ட போது அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம் என்ற வகையில்தான் இந்தத் திட்டம் துவங்கப்பட்டது.
அந்தத் தருணத்தில், தமிழ்ப் புத்தாண்டின் துவக்கமாக தை ஒன்றாம் தேதியை அறிவித்திருந்த தமிழ்நாடு அரசு, அந்த நாளில் பரிசு வழங்குவதைப் போல இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அதற்குப் பிறகு விட்டுவிட்டு இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் 100 ரூபாய் அளவுக்கு ரொக்கம் பரிசாக வழங்கப்படும் வழக்கம் துவங்கியது. அரிசி, பருப்பின் அளவும் அரை கிலோவில் இருந்து ஒரு கிலோவாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 1,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி.
2021ஆம் ஆண்டில் பொங்கல் பரிசுடன் 2,500 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ரொக்கத் தொகை ஏதும் இல்லாமல் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை என 21 பொருட்களைக் கொண்ட பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், பல இடங்களில் வெல்லம் போன்ற பொருட்கள் தரமானதாக இல்லை என்ற புகார்கள் எழுந்தன.
இதற்கு அடுத்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரையுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்தத் தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. கரும்பு, பரிசுத் தொகுப்பில் இடம்பெறாததற்கு கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து கரும்பையும் கொள்முதல் செய்து வழங்க அரசு உத்தரவிட்டது. 2024ஆம் ஆண்டு, அரிசி, சர்க்கரை, கரும்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இந்த எல்லா ஆண்டுகளிலும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்துவந்தது.
இந்த நிலையில்தான் இந்த ஆண்டு, பரிசுத் தொகுப்பு மட்டுமே அறிவிக்கப்பட்டது. ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்படவில்லை.
பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படாதது ஏன்?
இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நிதி நெருக்கடியின் காரணமாகத்தான் இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகையை வழங்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
“கடந்த ஆண்டு புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ. 2,028 கோடி செலவிடப்பட்டுள்ளது. பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ. 37 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ. 276 கோடி மட்டுமே தரப்பட்டது. இந்த நிதிச்சுமையை தமிழக அரசுதான் ஏற்றது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க மட்டும் ரூ. 280 கோடி செலவானது. மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாயை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்குவது குறித்து பரிசீலிக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
அரசு வட்டாரங்களில் இது தொடர்பாகக் கேட்டபோது, “மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய தொகை வரவில்லை. 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. ஒரு அட்டைக்கு ஐநூறு ரூபாய் வழங்குவது என்றாலே சுமார் 600 கோடி ரூபாய் தேவைப்படும். ஆயிரம் ரூபாய் என்றால் சுமார் 1200 கோடி ரூபாய் தேவைப்படும்.
தவிர, சமூகத்தின் பல்வேறு பிரிவினரை மனதில் வைத்து மகளிர் உரிமைத் தொகை, தவப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டும் வருகின்றன. இந்நிலையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கின்றனர்.
இருந்தபோதும் இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் சில நாட்களில் எடுக்கப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.