பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டுக்கு மொழி சார்ந்த அரசியலும் சர்ச்சைகளும் புதிதல்ல. தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த ஒரு நூற்றாண்டில் பல மொழி சார் போராட்டங்களும் சர்ச்சைகளும் வெடித்திருக்கின்றன.
அந்த வகையில், “தமிழ்நாட்டில் உள்ள, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது. உங்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுத் தேர்கின்றனர். பிறகு ஏன் அந்த கொள்கைகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளக் கூடாது?” என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது.
”மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று பிளாக்மெயில் செய்வதை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினில் தொடங்கி, திமுகவின் கூட்டணி கட்சிகள், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என பல தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பாஜக தலைவர்கள் அதற்கு எதிர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தோற்றுப் போய்விட்டது என்பதை ஒத்துக்கொள்ள மாட்டீர்களா? தமிழ்நாட்டில் கல்வியை வைத்து இருதரப்பு மக்கள் உருவாகுகின்றனர். ஒரு தரப்பினர், உயர்நிலைக்கு செல்கின்றனர், மற்றொரு தரப்பினர் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும், துப்புரவு செய்ய வேண்டும், ஏனெனில் அவர்கள் அரசுப் பள்ளியில் படித்திருக்கின்றனர், இருமொழிகள்தான் அவர்களுக்குத் தெரியும். அந்த இரு மொழிகளும் உருப்படியாக தெரிகிறதா?” என பேசியிருக்கிறார்.
உண்மையில் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையில் படித்தவர்கள் சாதிக்கவில்லையா, இந்தி உட்பட வேறு எந்த மொழியையும் மூன்றாவது மொழியாக படிக்காததால் அவர்கள் தங்கள் வாழ்வில் பெரும் இன்னல்களை சந்தித்தார்களா?
இந்த கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியாக, இருமொழிக் கொள்கையில் படித்த சிலரிடம் பிபிசி தமிழ் பேசியது. அவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
‘தாய்மொழியில் அறிவியல் கற்பது திறன்மிக்கது’
கரூர் மாவட்டத்திலுள்ள வேடிச்சிப்பாளையம்தான் சுதாகர் பிச்சைமுத்துவின் சொந்த ஊர். விவசாயம்தான் இவர் குடும்பத்தின் வாழ்வாதாரம். அம்மா அரசுப்பள்ளியில் தையல் ஆசிரியையாக இருந்தவர். 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் முழுக்க தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்.
தற்போது, ஸ்காட்லாந்தின் எடின்பரோவில் உள்ள ஹெரியட்-வாட் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் நுட்பப் பள்ளியில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இயந்திர பொறியியல்தான் இவருடைய முதன்மை துறை.
“திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி இயற்பியல் படித்தேன், அப்போது, தமிழில் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு இருந்தது. எனவே, பட்டப்படிப்பு வரையிலும் தமிழ் மொழியில்தான் படித்தேன் எனலாம்.” என்கிறார்.
உயர்கல்வியில் ஆங்கிலத்தில் புலமையாக இல்லாதது நிச்சயமாகக் கடினமாக இருந்தது என்கிறார் சுதாகர்.
“நிறையவே கடினமாக இருந்தது, குறிப்பாக முதுகலை படிக்கும்போது இன்னல்கள் இருந்தன. ஏனெனில், நிறைய ஆய்வுக் கட்டுரைகளை படிக்க வேண்டியிருந்தது. அதற்கு ஆங்கிலப் புலமை வேண்டும். எனக்கு ஆரம்பத்தில் வார்த்தைகளை கோர்வையாக ஆங்கிலத்தில் எழுதுவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், என்னுடைய சொந்த பயிற்சியால் ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை வாசித்தபிறகு, ஆங்கில மொழி எனக்கு புலப்பட்டது. ஆங்கிலத்தில் நம்பிக்கையாக முன்சென்று பேசினால்தான் அந்த மொழியை பேச முடியும். அப்படித்தான் ஆங்கிலத்தை கற்றுக்கொண்டேன்.” என்கிறார்.
பட மூலாதாரம், Pitchaimuthu Sudhagar/Facebook
மூன்றாவது மொழியாக ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேவை பள்ளிப் படிப்பில் தனக்கு ஏற்படவில்லை எனக்கூறும் சுதாகர், சர்வதேச அளவில் இணைப்பு மொழியாக உள்ள ஆங்கிலத்தை கற்றுத் தேர்வது அவசியம் என வலியுறுத்துகிறார்.
ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு பணி நிமித்தமாக செல்லும்போது, ஆரம்பத்தில் ஆங்கிலம் சற்று சரிவர பேச இயலாததால் சங்கடப்பட்டிருப்பதாகக் கூறும் சுதாகர், பின்னாட்களில் எந்த நாட்டுக்கு செல்கிறோமோ அந்த நாட்டின் மொழியை ஓரளவுக்கு கற்றுக்கொண்டு விடுவதாக தெரிவிக்கிறார்.
வேலை, வாழ்வாதாரத்துக்காக எந்த மொழியையும், எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும், அதில் எவ்வித பிரச்னையும் இல்லை என்பது அவருடைய வாதமாக இருக்கிறது.
“தாய்மொழியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கற்பது அதை இன்னும் திறம்பட புரிவதற்கு வழிவகுக்கும்.” என்கிறார் அவர்.
பள்ளி கல்விக்காக கூடுதலாக ஒரு மொழியை படிப்பது மாணவர்களுக்கு சுமைதான் என்றும், அதற்கு பதிலாக ஆங்கிலத்தை இன்னும் திறம்பட, வாழ்க்கைக்கு பயனளிக்கும் வகையில் கற்றுக் கொடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்துகிறார் அவர்.
“இப்போது ஒரு மொழியை Duolingo போன்ற செயலிகள் வாயிலாக எளிதில் கற்கலாம், எளிதில் தொடர்புகொள்ளலாம். எனவே நவீன அறிவியல் யுகத்தில் மொழி என்பது பிரச்னை அல்ல. ஒரு மொழியை கூடுதலாக கட்டாயமாக படிக்க வேண்டும் என்ற அவசியம் குழந்தைகளுக்கு இல்லை” என்கிறார் அவர்.
இவர் தமிழ்நாட்டில் உள்ள பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்களை உருவாக்கும் குழுக்களில் பங்கேற்றிருக்கிறார். மேலும், தமிழ்நாடு அரசு நடத்திய பல நிகழ்வுகளிலும் இவர் விருந்தினராக கலந்துக்கொண்டுள்ளார்.
தனது துறையில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார் இவர். தவிர, இவருடைய ஆய்வுக்குழு, சூரிய சக்தி மூலம் மின்சக்தி, பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வது என பல்வேறு தளங்களில் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
‘தேவை என்றால் மொழிகளை கற்கலாம்’
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூனம்பட்டி என்றொரு சிறிய கிராமம். மொத்தமாகவே 100 வீடுகள்தான் உள்ள அந்த ஊரிலிருந்து 2004-ல் பொறியியல் முடித்தார் ஜெகதீஸ்வரன்.
“என் கிராமத்தில் நான்தான் முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரி” என்கிறார்.
பள்ளிப் படிப்பு முழுக்க தமிழ்-ஆங்கில வழிக் கல்வி. 10-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியிலும் பின்னர் 11,12-ஆம் வகுப்புகளை தனியார் பள்ளியிலும் படித்துள்ளார்.
” பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால், சென்னையில் இருக்கும் நிறைய பிரபலமான பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. ஆனால், அம்மாவும் அப்பாவும் விவசாயக் கூலிகள், பொருளாதார சூழல் சென்னைக்கு சென்று படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை. நான் முதல் மகன் வேறு. எனக்குப் பிறகு இரண்டு தங்கை, இரண்டு தம்பிகள் உள்ளனர். எனவே, என் ஊருக்கு 5 கி.மீ தொலைவிலேயே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பொறியியல் படித்தேன். கல்லூரி செல்ல பயணம் செய்வதற்கு பணம் இல்லை என்றாலும் நடந்து சென்றுவிடலாம் என இந்த கல்லூரியைத் தேர்ந்தெடுத்தேன்” என தான் படித்த சூழலை நினைவுகூர்கிறார் ஜெகதீஸ்வரன்.
ஜெகதீஸ்வரனுக்கும் கல்லூரியில் ஆங்கிலம் பிரச்னையாக இருந்துள்ளது. எனினும், “கஷ்டப்பட்டு படித்து தேறினேன்.” என்கிறார் ஜெகதீஸ்வரன்.
“ஆனால், வேலை கிடைக்க மிகவும் கடினப்பட வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 20 நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல முயற்சித்திருப்பேன். எழுத்துத் தேர்வில் தேறிவிடுவேன், ஆனால், நேர்காணலில் தோல்வியடைந்து விடுவேன். எனவே, நேர்காணல்கள் குறித்த பயம் இருந்தது” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Jegadeeswaran
விடாமுயற்சியுடன் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து தன் வேலைக்கு எது அவசியமோ அதை கற்றுக்கொண்டிருக்கிறார் ஜெகதீஸ்வரன்.
“நான் பணியற்றும் நிறுவனம் சீனாவை தளமாகக் கொண்டு, டெல்லியில் செயல்படும் நிறுவனம். எனவே, உயரதிகாரிகளிடம் பேச எனக்கு ஆங்கிலம் தேவைப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக பேசி கற்றுக்கொண்டேன்.” என்கிறார் அவர்.
தமிழ்-ஆங்கில வழிக் கல்வியில் படித்ததால்தான் பொருளாதார ரீதியாக தன்னுடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பதாக அவர் கூறுகிறார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வரும் ஜெகதீஸ்வரன், டெல்லியில் சுமார் 18 ஆண்டுகளாக வசித்துவருகிறார். தன்னுடைய வாழ்வாதாரம் டெல்லியை சார்ந்தது என்பதால், மற்றவர்களுடன் பேசி இந்தி கற்றுக்கொண்டேன் என்கிறார் அவர்.
”டெல்லிவாசிகள் போலவே இப்போது என்னால் இந்தி பேச முடியும். இதற்கு தனிப்பட்ட பயிற்சி வகுப்புகள் தேவையில்லை. தேவைப்பட்டபோது நானே கற்றுக்கொண்டேன். படிப்புக்காக பள்ளிக்கூடத்திலிருந்து மூன்றாவது மொழி எனக்குத் தேவையில்லை. படிக்காதவர்கள் எவ்வளவோ பேர் டெல்லியில் உள்ளனர். அப்படியே பேசிப்பேசி அவர்கள் அந்தந்த மொழிகளை கற்றுக்கொள்கின்றனர்.” என்கிறார் அவர்.
‘இருமொழிக் கொள்கையே உயர்த்தியது’
“எனக்கு மட்டுமல்ல, அமெரிக்காவில் இப்போது பணிபுரியும் என் இரு மகன்களுக்கும் இருமொழிக் கொள்கைதான் உதவிகரமாக இருந்தது. என் மகன்களுள் ஒருவர் ஐடி துறையிலும் மற்றொருவர் கட்டடக் கலை வல்லுநராகவும் உள்ளார்.” என்கிறார் அ. வெற்றிவேல்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வெற்றிவேல், சௌதி அரேபியாவில் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கான உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றியவர். இவரும் தமிழ்-ஆங்கில வழிக் கல்வியில்தான் பள்ளிப்படிப்பை முடித்தவர்.
“நான் பணியாற்றிய நிறுவனம், ஜெர்மன், பிரான்ஸில் அந்த உபகரணங்களை உற்பத்தி செய்கின்றனர். அனைத்து நாடுகளுக்கும் பயணித்திருக்கிறேன். ஆங்கிலத்தில் வலுவாக இருந்ததுதான் உதவியது. ஆங்கிலம் எனக்குக் கடினமாக இல்லை. பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்களிடம் பேச வேண்டும், அதற்கு ஆங்கிலம் ஒன்றுதான் உதவியாக இருக்கும்.” என்கிறார் அவர்.
தன் குழந்தைகள் சௌதியில் பள்ளியில் படித்தபோது, இந்திய தூதரகம் நடத்தும் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் தான் இருக்கும் என்றும் அதில் இந்தி, ஆங்கிலம், அரபு மொழி கற்க வேண்டியிருந்ததாகவும் கூறுகிறார் அவர். “நாங்கள் அச்சமயத்தில் நிர்வாகத்திடம் பேசி எங்கள் குழந்தைகள் தமிழ் மொழி கற்க வழிவகை செய்தோம்” என்கிறார் வெற்றிவேல்.
‘திறனும் திறமையுமே அவசியம்’
சென்னை பல்லாவரத்தில் தனியார் பள்ளியில் படித்த சாண்ட்ரா மேபல், 2-ம் வகுப்பு வரை இந்தி மொழி படித்துள்ளார்.
“உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்தி மொழி தேவையற்றதாகவும் கஷ்டமானதாகவும் இருந்தது. பள்ளியில் படிப்பதே பிடிக்காமல் இருந்தது. பின்னர், வேறு பள்ளிக்கு மாறினேன். அங்கு இந்தி இல்லை, பின்னர்தான் மிகவும் பிடிக்க ஆரம்பித்தது. 10-ம் வகுப்பு சமச்சீர் கல்வியில்தான் படித்தேன். இப்போது வரைக்கும் நான் அடிப்படை கல்வியில் வலுவாக இருக்கிறேன். என் வாழ்க்கையில் எங்கேயும் இந்தி மொழியை நான் பயன்படுத்தியதில்லை. சினிமா, பாடல்கள் போன்ற பொழுதுபோக்குக்குதான் தேவைப்பட்டது. அதற்கும் சப்டைட்டில் இருக்கிறது” என்கிறார் சான்ட்ரா.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்கல் பொறியியல் படித்த சான்ட்ரா, 2019 முதல் பிரிட்டனில் ஏரோஸ்பேஸ் நிறுவனமொன்றில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
“பல்வேறு அவசியங்களுக்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம், அந்தந்த மொழிகளை சிறிது கற்றுக்கொள்வேன். அது போதும், வாழ்க்கைக்கு தேவையென்றால் நானே கற்றுக்கொள்வேன்” என்கிறார்.
பட மூலாதாரம், Sandra Mabel
“இந்தி மொழியோ வேறு எந்த மொழியாக இருந்தாலும் என் வாழ்வாதாரத்துக்குத் தேவையென்றால் கற்றுக்கொள்வேன். ஒரு மொழியை கற்றுக்கொள்வதற்கு பதிலாக என் திறமை, அறிவு, நேரம் இவற்றை திறன்களை கற்றுக்கொள்வதில்தான் ஈடுபடுத்துவேன.” என்கிறார் அவர்
சிறுவயதிலேயே ஒரு மொழியை படித்தால்தான் அது நன்கு பதியும் என்ற வாதத்தை அவர் மறுக்கிறார்.
“இப்போதும் எனக்கு தேவையென்றால் வேற்று மொழிகளை கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டாம் என்ற எண்ணம் எனக்கு இல்லை. பேச்சு மொழியாக தமிழ் தான் எனக்குக் கைகொடுத்தது. அரசுப்பள்ளி, இருமொழிகள் தான் தெரியும் என்பது எந்த விதத்திலும் தரக்குறைவு அல்ல,” என்கிறார் சான்ட்ரா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு