“திரைவாழ்க்கையின் உச்சத்தை விட்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன்” விஜயின் அரசியல் மேடைகளில் இந்த வார்த்தையை அவர் அடிக்கடி உச்சரித்தார். இதுவே அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினரின் பிரசாரத்திற்கும், மறுபுறம் எதிர்க்கட்சியினரின் விமர்சனத்திற்கும் வழிவகுத்தது.
விஜய் போன்றே திரையுலகத்தில் புகழின் உச்சத்தை எட்டிய பல நடிகர்களுக்கும் அரசியல் ஆசை இருந்திருக்கலாம். அரசியலில் கால் பதிக்க ஆசைப்பட்டு, அரசியல் கருத்துக்களை பகிரங்கமாகக் கூறிய ரஜினிகாந்த், அரசியலில் கால் பதித்து தேர்தலை சந்தித்த கமல்ஹாசன் என ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் அரசியல் களம் சூடுபிடித்தது
இந்த இருபெரும் தலைவர்கள் இருந்த போதே விஜயகாந்த் அரசியலில் களம் கண்டு 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சியான போதிலும், விஜய் போல பெரிய வெற்றியைப் பெறும் அளவுக்கு அவரது கட்சி எழுச்சி காணவில்லை.
தமிழ்நாடு அரசியலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பின்னர் மற்றொரு சினிமா நட்சத்திரத்தால் எழுச்சி காண முடியவில்லை. 2026 தேர்தலில் விஜய் ஆட்சியமைப்பதற்கு தேவையான தனிப்பெரும்பான்மை பெறாத போதிலும், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளார்.
இந்த பகுதியை காண்பதற்கு ஜாவாஸ்கிரிப்ட் கொண்ட ஒரு நவீன உலாவியும், நிலையான இணைய இணைப்பும் தேவை.
முடிவு எதிர்பார்க்கப்படுகிறது
சமீபத்திய முடிவுகளைக் காண பக்கத்தைப் புதுப்பிக்கவும்
சட்டப்பேரவைத் தேர்தல் 2026 – முன்னிலை, முடிவுகள்
ரஜினிகாந்தின் அரசியல் “வாய்ஸ்”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 90களில் ரஜினி வாய்ஸ் என்பது அரசியலில் பேசுபொருளானது
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல ஆண்டுகள் இருந்த ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த விவாதங்கள் 1990களின் மத்தியில் தொடங்கியது. 1996ம் ஆண்டு தேர்தலின் போதுதான் முதன் முறையாக “ரஜினி வாய்ஸ்” என்ற வார்த்தை தமிழ்நாடு அரசியலில் பேசு பொருளானது.
பாட்ஷா திரைப்படத்தின் 100 வது நாள் வெற்றிவிழாவில் பேசிய ரஜினிகாந்த், ”தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம்” பற்றி பேசியது பெரும் பேசு பொருளானது.
இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும், அப்போதைய மாநில அமைச்சராக இருந்த இருந்த ஆர்.எம்.வீரப்பனும் அப்போது மேடையில் இருந்தார்.
இதன் பின்னர் ஆர்.எம்.வீரப்பன் தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டது குறித்து அண்மையில் ஆர்.எம். வீரப்பனின் வாழ்க்கை ஆவணப்படத்தில் பேசிய ரஜினிகாந்த் தான் பேசிய சூழல் பற்றி குறிப்பிட்டார்.
இதன் பின்னர் 1996 தேர்தலின் போது இந்த பிரச்னை பெரிதாக வெடித்தது. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டில் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்தார்.
அதிமுகவுக்கு எதிரான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த், “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்று பேசினார். இந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது.
தோல்விக்கு பல்வேறு அரசியல் சூழல்கள் இருந்த போதிலும் ரஜினிகாந்தின் ஆதரவுக் குரல் பேசு பொருளானது.
தனது திரைவாழ்வின் உச்சத்தில் இருந்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அப்போதிருந்து ரசிகர்கள் மத்தியில் எழுந்த போதிலும், 20 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினிகாந்த் முழுநேர அரசியலுக்கு வரவில்லை. ஆனால் திரைப்படங்களில் மறைமுகமான அரசியல் வசனங்கள் எப்போதுமே தொடர்ந்தது.
தொடங்காமலே முடிந்து போன அரசியல்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசியலில் ஈடுபடும் முடிவை திரும்பப் பெற்றார் ரஜினி
இறுதியாக 2017ம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார் ரஜினிகாந்த். ஆனால் இதிலிருந்து 3 ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று பரவியநிலையில் அரசியலில் தான் ஈடுபடப்போவதில்லை என அறிவித்தார். இத்துடன் ரஜினியின் அரசியல் வாழ்க்கை முழுவீச்சில் தொடங்கும் முன்பே முடிந்து போனது.
இது பற்றி பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் ஆய்வாளர் ராமு மணிவண்ணன், ”ரஜினிகாந்த் ஒரு முக்கிய தருணத்தை தவறவிட்டு விட்டார்” என்று கூறினார்.
அதே நேரத்தில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோருக்கு இருந்தது போன்ற அரசியல் பின்புலமும் ரஜினி காந்துக்கு இல்லை என்கிறார் ராமு மணிவண்ணன்.
”எம்ஜிஆரைப் பொறுத்தவரையிலும் கட்சி தொடங்கும் முன்னரே திமுகவில் பொருளாளராக இருந்தார். ஜெயலலிதா அதிமுகவில் கொள்கைப்பரப்புச் செயலாளராக இருந்தார்” என்பதைப் குறிப்பிடும் ராமு மணிவண்ணன், அரசியல் பற்றிய தனது நிலைப்பாட்டில் நிலையின்றி இருந்தது ரஜினிகாந்த் மீதான நம்பிக்கை குறைக்க காரணமாக இருந்திருக்கும் என்கிறார்.
படக்குறிப்பு, கமல்ஹாசன் 2018ம் ஆண்டு அரசியலில் நேரடியாக களமிறங்கினார்.
கமல்ஹாசனின் அரசியல் “மையம்”
கமல்ஹாசன் 2018ம் ஆண்டு அரசியலில் நேரடியாக களமிறங்கினார். ஜெயலலிதா மறைவு மற்றும் கருணாநிதி உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சூழலில், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை அவர் தொடங்கினார்.
இவரது கட்சி 2019 மற்றும் 2021 தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வெற்றி ஏதும் பெறவில்லை. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 3.7 சதவீத வாக்குகளை இவரது கட்சி பெற்ற நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார் கமல்ஹாசன். 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இவரது மக்கள் நீதி மய்யம் தேர்தலில் களமிறங்காத நிலையில், திமுகவை ஆதரித்தது.
ரஜினிகாந்த் போன்றே கமல்ஹாசனுக்கும் பின்னால் நிலையான அரசியல் பின்புலம் இல்லை என கூறுகிறார் பேராசியர் ராமு மணிவண்ணன்.
ரஜினி, கமல் ஹாசன் போன்றோர் திரையுலகில் வெற்றிகரமாக இயங்கினாலும், திரையுலக வெற்றி மட்டுமே அரசியலுக்கு உதவாது என்கிறார் அவர்.
பட மூலாதாரம், TVK
படக்குறிப்பு, சரியான நேரத்தை பயன்படுத்தியதன் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார் விஜய்
ரஜினி, கமலிடமிருந்து விஜய் எவ்வாறு மாறுபடுகிறார்?
ரஜினி காந்த் அரசியலுக்கே வராமல் விலகிவிட்ட நிலையில், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பின்னர் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்த்தவில்லை.
இவர்கள் இருவருக்கும் இல்லாத பின்புல அரசியலுடன் நிதி பின்புலமும் விஜய்க்கு இருக்கிறது எனக் கூறுகிறார் பேராசியரியர் ராமு மணிவண்ணன்.
சரியான நேரத்தை பயன்படுத்தியதன் விளைவாக தேர்தலில் விஜய் தாக்கம் ஏற்படுத்தியுள்ளார் என கூறும் ராமு மணிவண்ணன், சினிமா மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்திலிருந்து தலைவராக உருவாகியிருக்கிறார் என்கிறார்.
ஜனரஞ்சகமான தலைவராக உருவெடுப்பது என்பது, விஜய்க்கு இன்னும் நிகழ வேண்டும் என குறிப்பிடும் அவர், மக்களின் உணர்வு சார்ந்த தலைவராக அவர் உருவெடுப்பது அவருடைய எதிர்கால அரசியல் செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கிறது என்று கூறுகிறார்.
சரியான நேரத்தில் அரசியலுக்கு வந்திருக்கும் விஜய்க்கு, தேர்தல் வெற்றி மட்டுமே எதிர்காலம் கிடையாது என கூறும் பேராசிரியர்
அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்துவது, கட்சியை அமைப்பாக கொண்டு செல்வது ஆகியவற்றை பொறுத்தே விஜயின் எதிர்காலம் அமையும் என கூறுகிறார்.
‘தமிழ்நாட்டின் ஜென் ஸி தருணம்’
மாணவர் இயக்கங்கள் மூலம் அரசியலில் வளர்ச்சி கண்ட திராவிட இயக்கங்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் மாணவர்களை அரசியல்படுத்தாமல் விட்டதன் தவறுதான் தற்போது அவர்களை பாதித்திருக்கிறது என தான் நம்புவதாகவும் குறிப்பிட்ட ராமு மணிவண்ணன், விஜய்க்கு கிடைத்திருக்கும் வெற்றி தமிழ்நாட்டின் ஜென் ஸி தருணம் என கூறுகிறார்
திமுக, அதிமுக என இருகட்சிகளிலுமே மாணவர் அமைப்புகள் வலுவாக இல்லை என கூறும் அவர், 50 வயதைக் கடந்தவர்களும் மாணவர் அமைப்பிலும், இளைஞர் அமைப்பிலும் இருந்தது இதன் விளைவு தான் என்கிறார்.
”இளைஞர்கள் இன்று விஜயை தேர்வு செய்திருக்கும் நிலையில் இவர்களை அரசியல்படுத்தி, அமைப்பாக அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் நிலையில் விஜய் இருக்கிறார்.” என்கிறார் அவர்.