பட மூலாதாரம், Getty Images
சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்திருந்தது.
ரெட் அலர்ட் (அதி கனமழை) என்பது 20 செ.மீக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதை குறிக்கும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் ,பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் கனமழை முதல் மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் வேலூர், திருப்பத்தூர், திருச்சி, சேலம், தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
திரும்பப் பெறப்பட்ட ரெட் அலர்ட்
ஆனால் அக்டோபர் 22-ஆம் தேதி காலை இந்த ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது. புதன்கிழமை வெளியான தகவலின்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது.
பட மூலாதாரம், X@ChennaiRmc
அக்டோபர் 22-ஆம் தேதி மழை நிலவரம்
அக்டோபர் 22ம் தேதி காலை 8.30 மணி முதல் அக்டோபர் 23ம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 13 செ.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டம் அரூரில் 11 செ.மீ மழை பெய்துள்ளது.
நாமக்கல்லில் மோகனூர், நீலகிரியில் விண்ட் வர்த் எஸ்டேட், திருப்பூரில் வெள்ளக்கோயில் ஆகிய இடங்களில் 9 செ.மீ மழை பதிவாகியது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, நீலகிரியில் க்ளென்மார்கன், விழுப்புரம் ஆவலூர்பேட்டை ஆகிய இடங்களில் 8 செ.மீ மழை பதிவாகியது.
சென்னை புறநகர் பகுதிகளில் மேடவாக்கத்தில் 4 செ.மீ மழையும் நுங்கம்பாக்கத்தில் 2 செ.மீ மழையும் பதிவானது.
பட மூலாதாரம், Getty Images
வலுவிழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என்று அக்டோபர் 21-ஆம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அன்றே அது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது. அப்போது அது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அது புயலாக மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அக்டோபர் 22-ஆம் தேதி கூற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அக்டோபர் 22-ஆம் தேதி வெளியான அறிக்கையின்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதன் அடுத்த நிலையான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
பட மூலாதாரம், imd.gov.in
எச்சரிக்கை கொடுத்த இடங்களில் ஏன் கனமழை பெய்யவில்லை?
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை பொய்யாகி போவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் கனமழை குறித்து எச்சரிக்க தவறியது என்ற விமர்சனத்தை வானிலை ஆய்வு மையம் எதிர்கொண்டுள்ளது.
அதே போன்று, வானிலை ஆய்வு மையம் எச்சரித்த தினங்களில், எச்சரித்த இடங்களில் மழை பெய்யாமல் போனதும் உண்டு.
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கைக்கும் வானிலை நிகழ்வுக்கும் இடையில் உள்ள இடைவெளியை பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்து பிபிசி தமிழிடம் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் ஒய்.இ.ஏ. ராஜ் விளக்கமாக பேசினார்.
வானிலை நிகழ்வுகளை 100% யாராலும் முழுமையாக கணிக்க முடியாது என்பதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
“வானிலை எச்சரிக்கைகள் எப்போதுமே 80-85% சரியாக இருக்கும். 100% சரியாக யாராலும் கணிக்க முடியாது” என்றார்.
இந்த முறை என்ன நடந்தது என்று விளக்கி பேசிய அவர், “வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும் என்று முதலில் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அது வலுவிழந்து கரையை கடந்தது என்று கூற முடியாது, நகர்ந்து சென்றது என்றுதான் கூற வேண்டும். எனவே புதன்கிழமை மதியம் முதலே மழை குறைய தொடங்கியது” என்றார்.
பட மூலாதாரம், Y.E.A. Raj
முதலில் இருந்த வானிலை நிகழ்வில் அடுத்தடுத்த நேரத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று சுட்டிக்காட்டும் அவர், “இந்த வானிலை நிகழ்வு தமிழ்நாட்டின் மேல் நிலவினாலும் இதன் மேகங்கள் ஆந்திராவின் பக்கம் குவியத் தொடங்கின. அதனால்தான் இப்போது ராயலசீமா பகுதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும். வானிலை நிகழ்வு ஒரு புறமும் அதன் மேகங்கள் மறுபுறமும் என சீரான நிலை இல்லாமல் இருப்பது வட கிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படக் கூடும்,” என்றார்.
மேலும், ”புயல் போன்ற நிகழ்வில் அதன் மையம் எங்கு உள்ளது என்று தெளிவாக கூற முடியும். எனவே அது குறித்த கணிப்புகளும் சரியாக இருக்கக் கூடும். ஆனால் காற்றழுத்த தாழ்வுப் பகுதி போன்ற நிகழ்வுகளில் அதன் மையம் எங்குள்ளது என்று மிக தெளிவாக கூற முடியாது. எனவே சில மாற்றங்கள் இருக்கும். சென்னையிலிருந்து சுமார் 65 கி.மீ தள்ளி உள்ள அரக்கோணத்தில் 15 செ.மீ மழை பதிவாகியிருந்தது” என்றார்.
மேலும் வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் முழுவதும் தவறு என்று கூற முடியாது என்கிறார் ஒய்.இ.ஏ. ராஜ்.
“புதன்கிழமை பரவலாக ஆங்காங்கே மழை பெய்துள்ளது. சென்னையை சுற்றி பல இடங்களில் 3 முதல் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.” என்கிறார்.
”வானிலை கணிப்புகளை பொருத்தவரை கடலில் நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக கண்காணிக்க வழியில்லை. தரையில் உள்ள நிகழ்வுகளை கண்காணிப்பது போல கடலில் கண்காணிக்க முடியாது. கடல் நிகழ்வுகளை பொருத்தவரை செயற்கைக்கோள் தரவுகளை நம்பியிருக்க வேண்டும். அது நிலத்தை நெருங்கி வரும் போதுதான் ரேடார் கொண்டு தகவல்கள் சேகரிக்க முடியும்” என்றார் ஒய்.இ.ஏ. ராஜ்.
பட மூலாதாரம், B.Amudha
இந்த குழப்பத்துக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பி. அமுதா பிபிசி தமிழிடம் பேசுகையில், “நாங்கள் கொடுத்த ரெட் அலர்ட்டை திரும்பப் பெற்றதில் தவறு இல்லை. மக்களின் பாதுகாப்பு கருதி, அப்போதிருந்த தரவுகள் அடிப்படையில் அதிகனமழை எச்சரிக்கை கொடுத்தோம். ஆனால் நிலைமைகள் மாறிய போது அதை திரும்பப் பெற்றோம்” என்றார்.
தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான அதே நேரத்தில் மேலும் மூன்று வானிலை நிகழ்வுகள் இருந்தன என்று சுட்டிக்காட்டும் அமுதா, “ஒரு கட்டத்தில் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் இரண்டு பகுதிகளிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. இது மட்டுமல்லாமல் தெற்கு அரைக்கோளத்தில் மேலும் இரண்டு நிகழ்வுகள் நிலவின. அது புயலாக வலுப்பெற்ற போது, தனது ஆற்றலைக் கொண்டு மேகங்களை தன் பக்கம் இழுக்க தொடங்கியது.” என்றார்.
மேலும், ”பிறகு இதிலிருந்து முழுவதும் விலகி வேறு பக்கம் சென்று விட்டது. அப்போது இங்கிருந்த வானிலை நிகழ்வு வலுப்பெற முடியவில்லை. இந்த நிகழ்வை, இது இப்படி நடக்கும் என்று முன்கூட்டியே 100% கணிப்பது என்பது சாத்தியமில்லை. கடல் மீது இந்த நிகழ்வுகள் நடப்பதால் நாம் செயற்கைக்கோள் தரவுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
கணிப்புகளை துல்லியமாக்க என்ன செய்ய வேண்டும்?
வானிலை கணிப்பு மாதிரிகள் (weather prediction models) என்பவை கணினி அடிப்படையிலான கணிப்புகளே. எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கும் வெவ்வேறு தகவல்கள் கணினிக்கு வழங்கப்படும். அதை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து ஒரு கணிப்பை கணினி வழங்கும்.
வானிலை ஆய்வாளர்கள் அந்த கணிப்பை புரிந்து கொண்டு தங்கள் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தின் மூலம் வானிலை அறிக்கைகள் தயாரிக்கின்றனர்.
கணினிகளுக்கு வழங்கப்படும் தரவுகளை துல்லியமாக்குவது, வானிலை கணிப்புகளை மேலும் துல்லியமாக்க உதவும்.
“வானிலை கண்காணிப்புகளை மேம்படுத்த வேண்டும், அதன் மூலம் கணிப்புகளை மேம்படுத்த முடியும். இந்திய வானிலை மைய மாதிரிகள் போலவே, Joint Typhoon Warning Centre (JTWC), Global Forecast System (GFS), European Centre for Medium-Range Weather Forecasts (ECMWF) என பல்வேறு வானிலை கணிப்பு மாதிரிகள் உள்ளன. இந்த கணிப்புகளுக்கு இடையே சில வித்தியாசங்கள் இருக்க தான் செய்யும்” என்றார் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் அமுதா.
2021-ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு பிறகு பேரிடர்களை முன்கூட்டியே கணிக்கும் வகையிலான வானிலை மாதிரிகளை அமைக்க அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறி தமிழக அரசு ரூ.10 கோடியை 2022-23 பட்ஜெட்டில் ஒதுக்கியது.
இத்திட்டத்தின் கீழ் சூப்பர் கணினிகள், வானிலை பலூன்கள், இரண்டு ரேடார்கள், 100 தானியங்கி வானிலை நிலையங்கள், 400 தானியங்கி மழை அளவிடும் நிலையங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
“இந்தியாவில் 559 கண்காணிப்பு மையங்கள் இருந்த காலம் மாறி தற்போது 1000க்கும் மேற்பட்ட மழை அளவிடும் நிலையங்கள் மற்றும் வானிலை கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 65 தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் 80 மழை அளவிடும் நிலையங்கள் உள்ளன. சென்னையில் முதலில் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் மட்டுமே கண்காணிப்பு மையங்கள் இருந்தன. அந்த தரவுகளை வைத்து மட்டுமே கணிப்புகளை தயாரிக்க வேண்டும். ஆனால் தற்போது சென்னையிலேயே பல்வேறு இடங்களில் இந்த மையங்கள் இருப்பதால் பரவலான தரவுகள் கிடைக்கின்றன, எனவே கணினி மாதிரிகள் மேம்பட்டுள்ளன” என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு