பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
-
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணையில் மாநில நெடுஞ்சாலைகளிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் சாலை ஊர்வலங்களுக்கு (road show) ஏன் தடை விதிக்கக்கூடாது என நீதிமன்றம் கூறியதிலிருந்து, பல அரசியல் தலைவர்களின் சாலை ஊர்வலங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் அரசியல் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடக்கும் விதங்கள் மாறிவிடுமா? நீதிமன்ற ஆணையை வைத்து அரசியல் கட்சிகளின் உரிமைகள் முடக்கப்படுகின்றனவா?
கரூரில் செப்டம்பர் 27-ஆம் தேதி த.வெ.க. தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, மாநில நெடுஞ்சாலைகளிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஊர்வலங்களையும் அரசியல் கூட்டங்களை நடத்த தற்காலிகத் தடைகளை விதித்திருக்கிறது.
இதனால், பிரதான கட்சிகளின் கூட்டங்கள் பல கடந்த சில நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விஜய்யின் கரூர் கூட்டத்தில் நிகழ்ந்த நெரிசலையடுத்து பல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. குறிப்பாக, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கூட்டங்களை நடத்தத் தடை விதிக்க வேண்டுமெனக் கூறி பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.
இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமையன்று விசாரிக்கப்பட்டபோது, தேசிய நெடுஞ்சாலைகளிலும் மாநில நெடுஞ்சாலைகளிலும் பொதுமக்களுக்கு தொந்தரவாக இருக்கும் வகையில், அரசியல் கட்சிகள் பரப்புரை செய்ய ஏன் அனுமதிக்கிறீர்கள் என நீதிமன்றம் அரசுத் தரப்பிடம் கேள்வி எழுப்பியது.
இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு, இதுபோன்ற சாலைகளில் மக்கள் சந்திப்பை நடத்த தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் விரைவில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் என்றும் தெரிவித்தது.
இதனை பதிவுசெய்துகொண்ட நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிட்டது.
பட மூலாதாரம், EPSTamilNadu/X
அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி
இதன் காரணமாக, அ.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் மேற்கொண்டுவரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
அக்டோபர் ஐந்தாம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியிலும் ஆறாம் தேதியன்று நாமக்கல், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிகளிலும் பரப்புரை செய்வார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மக்கள் சந்திப்புகளுக்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அ.தி.மு.கவினர் செய்துவந்தனர். ஆனால், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, இந்த சந்திப்புகளுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, வேறு இடங்களைத் தேர்வுசெய்யும்படி அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் 5, 6ஆம் தேதிகளில் நடக்கவிருந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் நாமக்கல்லிலும் ஈரோட்டிலும் எட்டாம் தேதி முதல் பத்தாம் தேதிவரை மக்கள் சந்திப்பு நடைபெறுமென்றும் அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
சாலைகளில் நடத்த நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், இவை பொதுக்கூட்டங்களாக நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
பட மூலாதாரம், mkstalin/X
ரோட் ஷோ அதிகரிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மேற்கொள்ளவிருந்த மக்கள் உரிமை மீட்பு பயணத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு,பொதுக்கூட்டம் நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, தே.மு.தி.கவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ், இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் ஆகியோர் ‘உள்ளம் தேடி, இல்லம் தேடி’ என்ற பெயரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவருகின்றனர்.
அந்தச் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி – பெங்களூரு சாலையில் தாலுகா அலுவலகம் முதல் 5 ரோடு ரவுண்டானா வரை ரோட் ஷோ செய்து, பிறகு வேனில் பரப்புரை செய்ய அனுமதி கோரப்பட்டது.
ஆனால், கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து ரோட் ஷோவுக்கும் வேன் பிரசாரத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டது, பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் அரசியல் தலைவர்கள் ‘ரோட் ஷோ’ எனப்படும் சாலை ஊர்வலங்களை நடத்துவது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருக்கிறது.
பட மூலாதாரம், DMDK/X
பொதுவாக தேர்தல் நடக்கும் காலகட்டங்களில் முக்கியமான அரசியல் தலைவர்கள், தேர்தல் பரப்புரைக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தங்களுடைய வாகனங்களில் இருந்தபடி பல்வேறு இடங்களுக்கும் சென்று, ஆங்காங்கே மக்கள் மத்தியில் பேசுவது வழக்கம்.
ஆனால், சமீப ஆண்டுகளில் சாலைகளின் இருபுறங்களிலும் மக்கள் நிற்க, அரசியல் தலைவர்களின் வாகனங்கள் நடுவில் செல்வது அல்லது தலைவர்கள் வாகனங்களைவிட்டு இறங்கி நடப்பது போன்ற நிகழ்வுகள் அதிகரித்திருக்கின்றன.
பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்டோர் பலமுறை இதுபோன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
புதிதாக கட்சியைத் துவங்கிய நடிகர் விஜய், முதலில் இரண்டு மிகப் பெரிய பொதுக்கூட்டங்களை நடத்தினார். அதற்குப் பிறகு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் தன்னுடைய பிரத்யேக வாகனத்தில் சென்று பொதுமக்களைச் சந்திக்கும் வகையில் ஒரு பரப்புரை திட்டத்தை வடிவமைத்தார்.
முதல் சில வாரங்களில் பிரச்னை இல்லாமல் நடந்த இந்த சந்திப்பு, கரூரில் நடந்தபோது விபரீதத்தில் முடிந்தது.
பட மூலாதாரம், draramadoss/X
‘கட்சிகளை முடக்கக் கூடாது’
இந்தப் பின்னணியில்தான் ரோட் ஷோக்கள், ஊர்வலங்களை மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் நடத்துவதற்கு தடை விழுந்திருக்கிறது.
ஆனால், இதனைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் அரசியல் செயல்பாடுகளை முடக்கக்கூடாது என்கிறார், அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் எஸ். செம்மலை.
“நெடுஞ்சாலைகளில் நடக்கும் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும்படி உயர் நீதிமன்றம் ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறது. ஆனால், இதனை எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கான ஒரு அம்சமாக ஆளும்கட்சி பயன்படுத்தக்கூடாது.
இப்போது எதிர்க்கட்சிகளின் ரோட் ஷோக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஆனால், இதே தடை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் சாலை ஊர்வலங்களுக்கும் விதிக்கப்படுமா?
கரூர் துயரத்தை வைத்து அரசியல் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்றால், ‘ஹாப்பி ஸ்ட்ரீட்’ போன்ற கொண்டாட்டங்களுக்காக சாலையையே மூடிவைத்து அனுமதி கொடுப்பது எப்படி?” என அவர் கேள்வியெழுப்பினார்.
அரசியல் தலைவர்கள் வருகிறார்கள் என்றால் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி, தேவைப்பட்டால் மாற்றிவிடலாம் என கூறும் அவர், எதிர்பார்த்ததைவிட அதிக கூட்டம் கூடினால், கூடுதல் காவல்துறையை அனுப்பி கட்டுப்படுத்தலாம் என வலியுறுத்தினார்.
“இதெல்லாம் அரசுக்கு இருக்கும் பொறுப்புகள். இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றாமல், இதனை வைத்து எதிர்க்கட்சிகளை கட்டுப்படுத்தக்கூடாது. இதற்கான நெறிமுறைகள் எப்போது வகுக்கப்படும் என்பது தெரியவில்லை. அதுவரை இதுபோன்ற ஊர்வலங்களுக்குத் தடை என்பது அரசின் தோல்வியைத்தான் காட்டுகிறது” என்கிறார் எஸ். செம்மலை.
அன்புமணி ராமதாஸும் இதனைக் கண்டித்திருக்கிறார். “விதிமுறைகள் வகுக்கப்படும்வரை அரசியல் கட்சியின் செயல்பாடுகளை முடக்கிவைக்கக்கூடாது. இதற்கென ஒரு இடைக்கால ஏற்பாட்டை செய்ய வேண்டும்” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், thirumaofficial/X
பிரச்னைக்கான காரணம்
இப்படி ஒரு பிரச்னை எழுந்ததற்குக் காரணமே, தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே பரப்புரை துவங்கியதுதான் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி.
“முதலமைச்சர்தான் முதலில் இதனைத் துவங்கினார். பொதுவாக தமிழ்நாட்டில் தேர்தலுக்கு 3 – 4 மாதங்களுக்கு முன்புதான் அரசியல் நடவடிக்கைகள் சூடுபிடிக்கும். ஆனால், தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு வருடத்திற்கு முன்பே முதலமைச்சர் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ள ஆரம்பித்தார்.
அரசின் திட்டங்களை செயல்படுத்த இந்தப் பயணம் என ஆளும்கட்சி சொல்லலாம். ஆனால், இந்த வசதி எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது. அவர்கள் ரோட் ஷோக்களையும் கூட்டங்களையும்தான் நடத்த முடியும். இதனால்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியும் சுற்றுப் பயணத்தை துவங்கினார்” என்றார்.
பட மூலாதாரம், facebook
இதுபோன்ற ரோட் ஷோக்களை பாரம்பரியமான அரசியல் கட்சிகள் நடத்தும்போது அதில் பெரிய பிரச்னை ஏற்படுவதில்லை எனக்கூறும் மணி, ”இப்போது ஒரு கூட்டத்தில் இதுபோல நடந்தது என்பதற்காக, அதனைச் சாக்காக வைத்து பிற அரசியல் கட்சிகளின் கூட்டங்களை ஒடுக்கக்கூடாது” என்கிறார்.
ரோட் ஷோக்களில் அரசியல் கட்சிகளுக்கான செலவு குறைவு என்பதால், பல கட்சிகளும் அந்த பாணியை விரும்புவதாகச் சொல்கிறார் அவர்.
“பொதுக்கூட்டங்களோடு ஒப்பிட்டால், ரோட் ஷோக்களுக்கு செலவு குறைவு என்றாலும், அதற்கும் கணிசமான அளவில் செலாவகும். பெரிய அரசியல் கட்சிகள் இதுபோன்ற ரோட் ஷோக்களை நடத்த சுமார் 40 லட்ச ரூபாய்வரை செலவழிப்பதாக ஒரு கணிப்பு தெரிவிக்கிறது. பொதுக்கூட்டமென்றால் இதுபோல பல மடங்கு செலவாகும். மக்களைத் திரட்டுவதற்கான செலவுதான் இதில் பெரும் பங்கு.” என்றார் அவர்.
ஆனால், விஜயைப் பொறுத்தவரை இதுபோன்ற ரோட் ஷோக்களுக்கான செலவு மற்ற கட்சிகளோடு ஒப்பிடும்போது குறைவுதான் என்றும், அவர்கள் ஆட்களைத் திரட்ட பணம் செலவழிக்க வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கிறார் மணி.
“ஆகவே ஒட்டுமொத்தமாக தடை விதிப்பது, ஜனநாயகமாக இருக்காது. நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிப்பதுதான் சரியாக இருக்கும்” என்கிறார் ஆர். மணி.
கட்டுப்பாடுகள் அவசியமா?
ஆனால், இதுபோன்ற கட்டுப்பாடுகள் அவசியம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
“தேர்தல் நேரங்களில் இதுபோல ரோட் ஷோக்கள் நடந்தால் பரவாயில்லை. ஆனால், தேர்தல் இல்லாத தருணங்களிலும் இப்படி ரோட் ஷோக்கள் நடத்துவது பெரும் இடைஞ்சல்களை ஏற்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, ஆளுங்கட்சிக்குமே இதுபோல நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும். சாலைகளில் இதுபோல கூட்டங்களை நடத்திவிட்டு, அதில் ஆம்புலன்ஸ்கள் வந்தால் அதைக் குறைசொல்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும்? ஆகவே, நெடுஞ்சாலைகளில் இது போன்ற ரோட் ஷோக்களுக்கு அனுமதி தரவே கூடாது.” என வலியுறுத்துகிறார் அவர்.
இந்தக் கட்டுப்பாட்டை ஒரு சதியாக பார்க்க வேண்டியதில்லை எனக்கூறும் அவர், தெருமுனைக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்தலாம், மேலும் இதுபோன்ற கூட்டங்களை நடத்த எல்லா மாவட்டங்களிலும் பொதுவான இடங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.
”இந்தக் கட்டுப்பாடுகளை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதாவது, பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் அமைக்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் தேவை. பொதுக்கூட்டங்களை நடத்த விரும்பாவிட்டால், அது போன்ற மைதானங்களில் வாகனங்களை நிறுத்தி தலைவர்கள் பேசலாம். இதற்காக சாலைகளை பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்பட வேண்டும்” என்கிறார் குபேந்திரன்.
பட மூலாதாரம், TVK
அரசு இதுபோன்ற கூட்டங்களுக்கா விதிமுறைகளை வகுப்பதாக இருந்தால் அதனை உடனடியாகச் செய்ய வேண்டும் என்கிறார் எஸ். செம்மலை.
“அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம் அறிக்கையளிக்கும் வரையிலோ, அல்லது உயர் நீதிமன்ற கிளை அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை வரும்வரையிலோ காத்திருக்கக்கூடாது. அரசின் நிர்வாக நடவடிக்கையாக உடனடியாக இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவேண்டும். அப்படி அந்த விதிமுறைகளை வகுக்கும்போது, அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளையும் கேட்டுத்தான் வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் அது ஒரு தலைப்பட்சமானதாக பார்க்கப்படும்” என்கிறார் எஸ். செம்மலை.
‘ஆளும்கட்சிக்கு தொடர்பில்லை’
ரோட் ஷோக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளுக்கும் ஆளும்கட்சிக்கும் தொடர்பில்லை என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான ஜே. கான்ஸ்டைன்டீன் ரவீந்திரன்.
“இந்தக் கட்டுப்பாடுகள் உயர் நீதிமன்றத்தின் ஆணையின் பேரில்தான் நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இதனை தி.மு.க. அரசு செய்வதாகப் பார்க்கக்கூடாது. மாநில அரசு செய்வதாகத்தான் பார்க்க வேண்டும். மாநில அரசில் யார் இருந்தாலும் இதைத்தான் செய்ய வேண்டியிருக்கும்” என்கிறார் ஜே. கான்ஸ்டைன்டீன் ரவீந்திரன்.
தவிர, இதுபோன்ற கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகுதான் வகுக்கப்படும் என்கிறார்.
“இதுபோன்ற கூட்டங்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகுதான் வகுக்கப்படும். இல்லாவிட்டால் அது ஜனநாயகபூர்வமானதாக இருக்காது. உச்ச நீதிமன்றம் இதுபோன்ற கூட்டங்களுக்கு சில நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதேபோல, ஐ.நாவும் சில வழிமுறைகளை தந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட, பதிவுசெய்யப்பட்ட எல்லாக் கட்சிகளையும் அழைத்து அவர்களது கருத்துகளைக் கேட்டு இந்த வழிமுறைகள் வகுக்கப்படும்” என்கிறார் கான்ஸ்டைன்டீன்.
தமிழ்நாட்டில் இதுபோல நெரிசல் ஏற்படுவதற்கான அபாயம் சுமார் 20 மாநாகராட்சிப் பகுதிகளில்தான் அதிகம் இருப்பதாகக் குறிப்பிடும் கான்ஸ்டைன்டீன், மற்ற இடங்களில் எந்தத் தலைவர்களாக இருந்தாலும் சாதாரணமாகப் பேசிவிட்டுச் சென்றுவிடலாம் என்கிறார்.
விதிமுறைகளை வகுப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு