இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பத்து மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
‘மக்களின் வாக்குரிமையைப் பறிக்க பா.ஜ.கவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக இது அமைந்துள்ளது’ என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
“ஆனால், அவ்வாறு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை” என, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், X/airnewsalerts
படக்குறிப்பு, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்
தீவிர திருத்தப் பணிகள் ஏன்?
மக்கள் இடம்பெயர்வது, விரைவான நகரமயமாக்கல், இளைஞர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவது, போலி பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் சேர்க்கப்பட்டது ஆகியவை சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கமாக உள்ளதாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் பிகாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கில் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியது.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர் பணிகள் குறித்து சில அரசியல் கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன.
பட மூலாதாரம், Getty Images
‘தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதி’
தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘தேர்தலுக்கு மிக நெருக்கத்தில் அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் எஸ்ஐஆர் மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது’ எனக் கூறியுள்ளார்.
அவசரகதியில் செய்யப்படும் எஸ்ஐஆர் நடவடிக்கை என்பது மக்களின் வாக்குரிமையைப் பறித்து பா.ஜ.கவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
‘பிகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல், பழங்குடி மக்கள் உள்ளிட்டோர் அதிகளவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதுடன் இந்த நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாதது அனைவர் மனதில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது’ என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘இதுதொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் (அக்டோபர் 27 அன்று) கலந்து பேசியிருக்கிறோம்’ எனக் கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ‘ நவம்பர் 2 அன்று அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்கு கூட்டம் நடத்தப்படும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
பட மூலாதாரம், X/mkstalin
தமிழக பா.ஜ.க தலைவர் கூறியது என்ன?
முதலமைச்சரின் கருத்தை விமர்சித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “நேரு காலத்தில் இருந்தே இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தமிழ்நாடு அரசாங்கம்தான் செய்ய உள்ளது. அப்படியிருக்கும்போது நடுக்கமும் பயமும் ஏன் வருகிறது?” என்றார்,
தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதிமுக இதனை வரவேற்றுள்ளது.
பட மூலாதாரம், Nainar Nagenthran/Facebook
இ.கம்யூ, வி.சி.க கூறும் காரணம் என்ன?
“குடிரியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒருவரின் குடியரிமையை தீர்மானிப்பதை எஸ்ஐஆர் பணியுடன் இணைத்துள்ளனர். அதைச் செய்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை” எனக் கூறுகிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார்.
“2003-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைப் போல இதைப் பார்க்க முடியாது. இந்தத் திட்டம் மிக ஆபத்தானது” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் விளைவு என்பது பிகாரில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னை முன்வைக்கப்பட்டாலும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து முறையான பதில் வரவில்லை” எனக் கூறுகிறார், இ.கம்யூ கட்சியின் தமிழ் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்.
சிறுபான்மையினரை இலக்காக வைத்து வாக்குரிமையை பறிக்கும் வேலைகள் நடக்க உள்ளதாகக் கூறும் மு.வீரபாண்டியன், “தி.மு.கவுக்கு வாக்களிக்கும் மக்களை இலக்காக வைத்துச் செயல்படுவார்கள். இவ்வாறு மேற்கொண்டால் பிகார் போன்ற நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்கிறார்.
பட மூலாதாரம், D.Ravikumar
படக்குறிப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார்
‘தவறான அணுகுமுறை’ – கோபாலசுவாமி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பது என்பது தவறான அணு குமுறையாக பார்ப்பதாகக் கூறுகிறார், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி.
“பிகாரில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டபோது இறந்து போனவர்களைக் கண்டறிந்து நீக்கினர். தமிழ்நாட்டில் இதுபோன்று இருக்காது என எதிர்பார்க்க முடியாது. நிச்சயமாக இறந்தவர்களின் பெயர்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன” என்கிறார்.
“தமிழ்நாட்டில் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பல லட்சம் பேர் பயணிக்கின்றனர். இதில் சரிபாதி அளவு இரண்டு இடங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் அது தவறானது. இதைக் கண்டறிவது எஸ்ஐஆர் பணிகளில் ஒன்று” எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் 1951-ஆம் ஆண்டு முதல் 2004 வரை எட்டு முறை வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளதாகக் கூறியுள்ள தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்காளர் பட்டியலில் குறைபாடு உள்ளதாக புகார் அளித்துள்ளனர்” எனக் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
‘பல லட்சம் பேர் நீக்கம்’
இதனைக் குறிப்பிட்டுப் பேசும் கோபாலசுவாமி, “2002- 03 ஆம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2007-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலை சரிபார்த்தோம். அப்போதே பல லட்சம் பேரை நீக்கினோம்” என்கிறார்.
” ஒவ்வோர் ஐந்தாண்டுக்கும் இந்தப் பணிகளை மேற்கொள்ள முடியாது. ஆனால் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பணிகளை மேற்கொள்ள முடியும்” என்கிறார் கோபாலசுவாமி
“தேர்தல் வருவதால் போலியான வாக்காளர்களைத் தடுக்க முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.
தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் எழுப்பும் சந்தேகம் குறித்துக் கேட்டபோது, “தலைமை தேர்தல் ஆணையர் நேரடியாக இப்பணியில் ஈடுபடுவதில்லை. தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் தான் ஈடுபட உள்ளனர். தவறாக பணிகளை மேற்கொள்வார்கள் என்றால் அவர்களைக் குறை சொல்வதாகவே பார்க்க முடியும். உண்மையான வாக்காளர்களை நீக்குவதாகக் கூறுவது தவறானது” என்கிறார்.
ஆனால், இதனை மறுத்துப் பேசும் ரவிக்குமார் எம்.பி, “மாநில அரசின் அதிகாரிகளை வைத்து எஸ்ஐஆர் பணிகளை செய்வதாக கூறுகின்றனர். எந்த அதிகாரிகள் என்பது பிரச்னை அல்ல. என்ன செய்யப் போகின்றனர் என்பதுதான் பிரச்னை” என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
எஸ்ஐஆர் – எவ்வாறு நடத்தப்படுகிறது?
போலி வாக்காளர்களைக் கண்டறிந்து தவிர்க்கும் வகையில், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளதாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்தார்.
தகுதியுள்ள வாக்காளர்கள் விடுபடாமல் இருக்கவும் தகுதியற்ற வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படாமல் தவிர்க்கவும் சிறப்புத் திருத்தப் பணி உதவி செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
*ஒரு நபருக்கு வெவ்வேறு இடங்களில் வாக்குரிமை உள்ளது கண்டறியப்பட்டால் அவை நீக்கப்படும்.
*இறந்தவர்களின் பெயர்களை நீக்கவும் சட்டவிரோதமாக குடியேறிவர்களைக் கண்டறிந்து நீக்கவும் எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படுகிறது.
*வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
*பட்டியலில் இடம்பெறாத நபராக இருந்தால் அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
*குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
*திருத்தி அமைக்கப்படும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் இருந்தால் அதனை சரிசெய்து கொள்வதற்கு தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்குகிறது.
*தமிழ்நாட்டில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க உள்ளது.
*டிசம்பர் 9 வரையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளும் டிசம்பர் 9 அன்று புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
*பொதுமக்களிடம் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அவை டிசம்பர் 9 முதல் ஜனவரி 8 வரை பெறப்பட உள்ளது. 2026-ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை இந்தப் பணிகள் நடக்க உள்ளன.
*பிப்ரவரி 7 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.