பட மூலாதாரம், Getty Images
“அவர்கள் இதுவரை யாருக்கும் மைக்ரோ சிப் விற்றதில்லை. விலங்குகளுக்கு சிப் பொருத்தும் பணியை மேற்கொண்டதாக எந்த ஆவணங்களும் இல்லை. ஆனால், அவர்களைத் தகுதிவாய்ந்த நிறுவனமாக அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர்” எனக் கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த தினேஷ் சிங்கராயர்.
தமிழ்நாட்டில் 2.40 லட்சம் தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
டெண்டரில் விதிமீறல் நடந்துள்ளதாகக் கூறி சிப் கொள்முதல் செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தெருநாய்கள் தொடர்பான பிரச்னையில் கடந்த நவம்பர் 7 அன்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.
நாடு முழுவதும் பள்ளிகள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் தெருநாய்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வளாகங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் வைத்து கருத்தடை செய்ய வேண்டும் எனவும் அவற்றுக்குத் தடுப்பூசி செலுத்திய பிறகு மீண்டும் அதே பகுதிகளுக்குள் செல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
மேலும், நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்துவது குறித்து எட்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சென்னையில் தெருநாய்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
பட மூலாதாரம், Getty Images
மைக்ரோ சிப் எவ்வாறு செயல்படுகிறது?
சென்னையில் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, முதல் கட்டமாக 4,000-க்கும் மேற்பட்ட நாய்களின் உடலில் சிப் பொருத்தும் பணியை சென்னை மாநகராட்சி நிறைவு செய்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் வழங்கியுள்ள தகவலின்படி, நாய்களின் உடலில் செலுத்தப்படும் சிப்களில் அவற்றின் வசிப்பிடம், வார்டு, மண்டலம், இனம், பாலினம், தடுப்பூசி செலுத்திய விவரம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். சிப் அருகில் ஸ்கேனர் இயந்திரத்தைக் கொண்டு செல்லும்போது நாய் குறித்த முழு விவரங்களும் தெரிய வரும்.
“ஆர்.எஃப்.ஐடி (Radio Frequency Identification – RFID) தொழில்நுட்பத்தில் இயங்கும் சிப்களில் நாய் தொடர்பான தகவல்கள் பதிவாகியிருக்கும். இவை நாய்களின் இடமாற்றம் உள்படப் பல்வேறு விவரங்களை அறிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்” என்கிறார் எக்ஸ்ஹீலர் இன்னோவேடிவ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் தினேஷ் சிங்கராயர்.
தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துடன் இணைந்து தெருநாய்களுக்கு சிப் பொருத்தும் பணிகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அதேநேரம், பிற மாவட்டங்களில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கால்நடை பராமரிப்புத் துறையின் இணையதளத்தில் காண முடியவில்லை.
பட மூலாதாரம், spl arrangements
2.40 லட்சம் நாய்களுக்கு சிப்
இந்திய அரசு மேற்கொண்டு வரும் 21வது கால்நடை கணக்கெடுப்புப் பணியின் இறுதி அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால் முந்தைய கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டில் தோராயமாக 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருக்கலாம் எனக் கணக்கிட்டு இருப்பதாக, பெயர் குறிப்பிட விரும்பாத கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் முதல் கட்டமாக 2.40 லட்சம் நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு கால்நடை பராமரித்துறை தொடங்கவுள்ளது.
நாய்களின் உடலில் மைக்ரோ சிப், ரீடர், கழுத்துப்பட்டை (collor) ஆகியவற்றை தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை (Tamilnadu Livestock Development Agency) மூலமாக கொள்முதல் செய்வதற்கான டெண்டரை கடந்த ஆகஸ்ட் மாதம் கால்நடை பராமரிப்புத் துறை கோரியது.
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள விலங்குகள் நல வாரியத்தின் பிறப்புக் கட்டுப்பாட்டு மையங்களுக்கு (ABC) இவற்றை விநியோகிப்பது டெண்டரின் நோக்கமாக உள்ளது.
இதற்கான டெண்டர் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கு செப்டம்பர் 17ஆம் தேதியை இறுதி நாளாக தமிழ்நாடு கால்நடை அபிவிருத்திக் கழகம் அறிவித்திருந்தது.
பட மூலாதாரம், Getty Images
‘காரணம் சொல்லாமல் டெண்டர் ரத்து’
“டெண்டரில் ஐந்து நிறுவனங்கள் பங்கேற்றன. அதில், தொழில்நுட்ப ரீதியாகத் தகுதிவாய்ந்த நிறுவனமாக எங்கள் நிறுவனத்தை தேர்வு செய்தனர். எங்களை எல்1 ஆக அதிகாரிகள் அறிவித்தனர்” என்கிறார், தினேஷ் சிங்கராயர்.
இவர் சென்னையில் ‘எக்ஸ்ஹீலர் இன்னோவேடிவ் சொல்யூசன்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். “நாய்க்கு பொருத்தப்படும் மைக்ரோ சிப் ஒன்றுக்கு 163 ரூபாய் எனவும் கழுத்துப்பட்டை பொருத்துவதற்கு 35 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது சென்னை மாநகராட்சி நிர்ணயித்துள்ள தொகையைவிடவும் குறைவு” என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஆனால், என்ன காரணம் என்று கூறாமல் திடீரென டெண்டரை ரத்து செய்துவிட்டு மறு டெண்டரை கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் அறிவித்ததாக அவர் கூறுகிறார்.
இதுகுறித்துப் பேசிய தினேஷ் சிங்கராயர், “எங்களைத் தேர்வு செய்த அதே டெண்டருக்கு மறு டெண்டர் அறிவிக்கப்பட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. இதைப் பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ரத்து செய்யப்பட்டுவிட்டது’ என்று மட்டும் கூறினர். வேறு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை” என்றார்.
பட மூலாதாரம், spl arrangements
‘உரிமையைப் பறிப்பதுதான் நோக்கம்’ – தீர்ப்பு விவரம்
நவம்பர் 26 அன்று மறு டெண்டரை கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் நடத்தியுள்ளனர். அதில் வேறொரு நிறுவனத்தை கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தேர்வு செய்யவுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் மனுவில் தினேஷ் சிங்கராயர் கூறியுள்ளார்.
முதல் டெண்டரின்போது தகுதியிழப்பு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு அதே டெண்டரை அதிகாரிகள் வழங்க உள்ளதால் அடுத்தகட்ட நடைமுறைகளுக்குத் தடை விதித்து டெண்டரை ரத்து செய்யுமாறு மனுவில் அவர் கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், “முதல் டெண்டரில் பங்கேற்ற நிறுவனத்தின் ஆவணங்கள், பரிசீலனைக் குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இது எப்படியாவது டெண்டரில் தேர்வான நபரின் (எல் 1) உரிமையைப் பறிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளதை உணர்த்துகிறது” என உத்தரவில் கூறியுள்ள நீதிபதி என்.சதீஷ்குமார், டெண்டர் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
வழக்கில் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்திக் கழகம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு டிசம்பர் 18ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கால்நடை பராமரிப்புத் துறை அதன் விளக்கத்தை அளித்தது.
பட மூலாதாரம், spl arrangements
ஆனால், அது போதுமானதாக இல்லையென்று கூறி நீதிபதி ஜனவரி 8ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
“முதல்முறை ஒப்பந்தம் கோரியபோது சிப் பொருத்துவதற்கான விலையைக் குறிப்பிட்டிருந்தோம். அதை TNTenders (டெண்டர் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் அரசு இணையதளம்) தளத்தில் அதிகாரிகள் வெளியிட்டுவிட்டனர். வழக்கமாக, ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்த பிறகே அவர்கள் நிர்ணயித்த விலையை வெளியில் சொல்ல வேண்டும்” எனக் கூறுகிறார், தினேஷ் சிங்கராயர்.
ஆனால், வேறொரு நிறுவனத்துக்கு இந்த டெண்டரை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அதிகாரிகள் விலையை வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட்டுவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
’15 நாட்களில் தகுதி பெற்றது எப்படி?’
“தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனம், மருத்துவ உபகரணங்களை விற்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன்பு நடந்த டெண்டரில் தொழில்நுட்பரீதியான தகுதிகள் இல்லை எனக் கூறி அவர்களை நிராகரித்தனர். ஆனால், மறு டெண்டர் கோரியபோது அவர்களைப் பரிசீலிக்கலாம் எனக் கூறினர்” என்கிறார், தினேஷ் சிங்கராயர்.

மேலும் பேசிய தினேஷ் சிங்கராயர், “குறிப்பிட்ட நிறுவனத்திடம் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் இல்லை. உரிமம் உள்ளதாக வேறொரு நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு முன்பு எத்தனை பேருக்கு மைக்ரோ சிப்பை விநியோகம் செய்துள்ளார்கள் என்பது பற்றிய எந்த விவரங்களும் இல்லை” என்கிறார்.
“கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளிடம் சென்று, ‘எங்களைவிட பெரிய நிறுவனத்தை தேர்வு செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால், 15 நாட்களுக்கு முன்பு தகுதியற்ற நிறுவனம் எனப் புறக்கணிக்கப்பட்ட நிறுவனத்தை தேர்வு செய்தது ஏன்? அதற்குள் என்ன நடந்தது?’ எனக் கேட்டோம். எந்தப் பதிலும் வரவில்லை” எனவும் தினேஷ் சிங்கராயர் தெரிவித்தார்.
“வெறும் 15 நாள்களில் ஒரு நிறுவனத்தை தகுதி வாய்ந்ததாக எப்படி மாற்றினார்கள் எனத் தெரியவில்லை. நாங்கள் குறிப்பிட்ட விலையை வெளியில் அறிவித்துவிட்டு வேறொரு நிறுவனத்தை உள்ளே கொண்டு வருவது நியாயமற்ற செயல் என்பதால் வழக்கு தொடர்ந்தேன்” என்றும் அவர் குறிப்பிடார்.
அரசு செயலாளர் கூறுவது என்ன?
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார் கால்நடை பராமரிப்புத் துறையின் அரசு செயலாளர் சுப்பையன் ஐ.ஏ.எஸ்.
“டெண்டரில் இரண்டு நிறுவனங்கள் பங்கேற்றன. ஆனால் அவர்கள் குறிப்பிட்டுள்ள தொகை அதிகமாக இருந்ததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டு மறுடெண்டர் கோரப்பட்டது” என்று விளக்கமளித்தார்.
அதோடு, “இதுதொடர்பான ஏலம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு