பட மூலாதாரம், Getty Images
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை முடிந்திருக்க வேண்டிய சூழ்நிலையில், தமிழகத்தில் இதற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பையே தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை.
இதுதொடர்பான வழக்கின் விசாரணையில், இந்த ஒதுக்கீட்டில் சேரும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளிகளுக்குச் செலுத்துவதில், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலே இதற்குக் காரணமெனத் தெரியவந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக இந்த சட்டத்தின்படி சேர்க்கப்படும் குழந்தைகளுக்காக பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியில் 60 சதவீதத் தொகையை மத்திய அரசு கொடுக்கவில்லையென்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடாததால் தான் நிதி ஒதுக்கவில்லை என்று மத்திய அரசு இதற்கு பதிலளித்துள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கும் இடமளிக்கும் வகையில், கடந்த 2009ஆம் ஆண்டில் இந்தியாவில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (The Right of Children to Free and Compulsory Education Act, 2009) கொண்டு வரப்பட்டது.
அதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்த இந்த சட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் பாலர் வகுப்பிலிருந்து (LKG) எட்டாம் வகுப்பு வரை, மொத்தமுள்ள மாணவர் சேர்க்கையில் 25 சதவீதத்தை ஏழை மாணவர்களுக்கு இடங்களை இலவசமாக ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டது.
இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாநில அரசு வழங்கும். இந்தத் தொகையில் எவ்வளவு தொகையை வழங்கலாம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வாரியம் தான் (PAB-Project Approval Board) ஒப்புதல் அளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்படும் தொகையில் 60 சதவீதத் தொகையை மத்திய அரசு வழங்கும்.
கல்வி உரிமைச்சட்டம் – இந்த ஆண்டு நிலை என்ன?
பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் 12 ஆயிரத்து 970 தனியார் பள்ளிகள் இயங்குவதாகவும், அவற்றில் 63.42 லட்சம் மாணவர்கள் பயில்வதாகவும் சொல்கிறது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இணையதளம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மாணவர்களுக்கான சேர்க்கை அறிவிக்கை மற்றும் விண்ணப்பத்தை அந்தந்த மாநிலத்திலுள்ள பள்ளிக்கல்வித்துறை வெளியிட வேண்டும்.
அதில் விண்ணப்பிப்பவர்களுக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அந்தந்தப் பள்ளிகளில் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, இச்சட்டத்தின்படி மாணவர் சேர்க்கையை நிறைவு செய்ய வேண்டும்.
வழக்கமாக, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் தான் (rte.tnschools.gov.in) இதற்கான அறிவிக்கையும், பள்ளிகளில் சேர்வதற்குரிய விண்ணப்பமும் வெளியிடப்படும். அதில் பெற்றோர் விண்ணப்பித்த பின்பு, அந்தந்த பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும்.
ஒரு பள்ளியில் 25 சதவீத இடத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்திருந்தால் குலுக்கல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரலில் துவங்கி மே 3 ஆம் வாரத்துக்குள் இந்த நடவடிக்கைகள் நிறைவு பெறும்.
கடந்த ஆண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சேர்க்கை ஏப்ரல் 22 துவங்கி மே 20 ஆம் தேதி முடிவடைந்தது.
ஆனால் இந்த ஆண்டில் ஜூன் 2 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், மே இறுதி வாரம் வரையிலும் இதற்கான அறிவிக்கை மற்றும் விண்ணப்பங்கள், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.
இதற்காக தமிழகம் முழுவதும் பல லட்சம் பெற்றோர்கள் காத்திருக்கின்றனர்.
இதுவரை இந்த விண்ணப்பம் வெளியிடப்படாத நிலையில், பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதால், இந்த ஆண்டில் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தில் தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
கட்டாயக் கல்வி சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பை உடனே வெளியிட வலியுறுத்தி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் கடந்த மாதத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்த அமைப்பின் தலைவர் ஈஸ்வரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நிதி ஒதுக்குவது தொடர்பான பிரச்னை
பட மூலாதாரம், Getty Images
இதில் தமிழக அரசின் சார்பில் சில விபரங்கள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021–2022 ஆம் ஆண்டிலிருந்து 2024–2025 வரையிலான நான்காண்டுகளாக கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்காக பள்ளிகளுக்குச் செலுத்த வேண்டிய தொகை, மத்திய அரசின் பங்களிப்பு நிதி, மாநில அரசு வழங்கிய நிதி குறித்த விபரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
அதிலுள்ள தகவல்களின்படி, கடந்த 2021–2022 கல்வியாண்டில் 7745 பள்ளிகளில் 1,21,208 குழந்தைகள், பாலர் வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர். அப்போது 1–8 ஆம் வகுப்பு வரை 2,77,185 மாணவர்கள் படித்து வந்தனர். அந்த ஆண்டில் பாலர் வகுப்பு மாணவர்களுக்காக ரூ.98.43 கோடியும், பிற மாணவர்களுக்காக ரூ.266 கோடியும் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருந்தது.
ஆனால் ரூ.256.17 கோடிக்கு மட்டுமே வாரியம் (PAB) ஒப்புதல் அளித்தது. அதில் மத்திய அரசு 60 சதவீதத் தொகையான ரூ.153.70 கோடி வழங்கியிருக்க வேண்டும்.
இப்போது வரையிலும் அந்தத் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. இருப்பினும் அந்த ஆண்டில் ரூ.363.43 கோடியை பள்ளிகளுக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. இதிலுள்ள தரவுகளின்படி, பாலர் பள்ளி மாணவர்களுக்கான தொகை முழுவதையும் தமிழக அரசே வழங்குவதாகத் கூறுகிறது. பிற மாணவர்களுக்கான கட்டணத்தொகையில் மட்டுமே 60 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது.
அதேபோன்று 2022–2023 கல்வியாண்டில் 7769 பள்ளிகளில் 1,18,582 குழந்தைகள், பாலர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்போது 2,98,486 பேர், மற்ற வகுப்புகளில் படித்துள்ளனர். அந்த ஆண்டில் ரூ.383.59 கோடியை பள்ளிகளுக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. அதிலும் வாரியம் ஒப்புதல் அளித்த தொகையில் மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.188.99 கோடி இதுவரை தமிழக அரசுக்கு வழங்கப்படவில்லை.
அதன்பின் 2023–2024 மற்றும் 2024–2025 ஆகிய இரு கல்வியாண்டுகளிலும், பள்ளிகளுக்குச் செலுத்த வேண்டிய தொகையில் மத்திய அரசால் வழங்க வேண்டிய ரூ.208.20 கோடி மற்றும் ரூ.222.60 கோடி ஆகிய தொகையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை தமிழக அரசும் வழங்கவில்லை என்பதும் மாநில அரசின் சிறப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் சமர்ப்பித்த அட்டவணையில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
‘அறிவிக்கைக்காக காத்திருக்கும் 5 லட்சம் பெற்றோர்’
கல்வி உரிமைச்சட்டத்தில் தமிழக மாணவர்களுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காத காரணத்தால், தமிழக அரசும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை நிலுவையில் வைத்திருப்பதும் இதில் தெரியவந்துள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய ஈஸ்வரன், ”இந்த சட்டத்தின்கீழ், தமிழகத்தில் தற்போது 10 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இப்போதும் இதற்கான அறிவிப்பு எப்போது வருமென்று 5 லட்சத்துக்கும் அதிகமான பெற்றோர், இணையதளத்திலும் இ சேவை மையத்திலும் தேடிக் கொண்டிருக்கின்றனர். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உரசலும், இரு அரசுகளும் ஏழை மாணவர்களுக்கு நிதி ஒதுக்காததும் வழக்கின் விசாரணையில் தெரியவந்துள்ளது.” என்கிறார்.
மத்திய அரசின் பதில் என்ன?
பட மூலாதாரம், Getty Images
மே 22 ஆம் தேதியன்று நடந்த இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக அரசின் சார்பில் வாதிட்ட கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ. ரவீந்திரன், மத்தியில் ஆளுகின்ற கட்சிக்கு தமிழகத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லாததால்தான் நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். நிதி ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் பங்களிப்பு நிதியை ஏன் ஒதுக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர் ஜி.பாபு, சில காரணங்களால் தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் சில கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், மே 23ஆம் தேதியன்று இதற்கான காரணங்களை மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் பதிலாகத் தர வேண்டுமென்று உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணை மே 23ஆம் தேதியான நேற்று மீண்டும் நடந்தது.
வாதத்தின்போது, மத்திய அரசு ‘பெரியண்ணன்’ மனநிலையில் நடந்து கொள்வதாக தமிழக அரசின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன், மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடாததால் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த வாதங்கள் குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய மனுதாரரின் வழக்கறிஞர் பொன்ராஜ், ”நிதியைக் காரணம் காட்டி, மாணவர்களின் கல்வி உரிமையை நிறுத்தி வைக்கக்கூடாது. உடனடியாக மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கையை நாங்கள் முன் வைத்தோம். இதுதொடர்பாக வரும் 28 ஆம் தேதியன்று தமிழக அரசு கூட்டியுள்ள கூட்டத்தின் தீர்மானத்தைக் கேட்டுள்ள நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.” என்றார்.
நீதிமன்றத்தில் மே 23ஆம் தேதி நடந்த விவாதத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தரப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று கூறப்பட்டாலும், அது எதற்கான ஒப்பந்தம் என்பதைக் குறிப்பிடவில்லை.
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையைத்தான் மத்திய அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறும் மனுதாரர் ஈஸ்வரன், ”கல்வி உரிமைச்சட்டம் 2009 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கை இப்போதுதான் வந்துள்ளது. அது சார்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டு நிதியை மறுப்பது சட்டப்படியும் நியாயப்படியும் தவறானது.” என்றார்.
ஈஸ்வரனின் இந்த கூற்றை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
எதிர்க்கட்சிகளின் விமர்சனம்
பட மூலாதாரம், Edappadi Palaniswami/Facebook
வழக்கு விசாரணைக்கு இடையில், அரசியல்ரீதியாகவும் இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ”அதிமுக ஆட்சியில், கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 25 சதவீத ஏழை மாணவர்களுக்கான கட்டணத்தை மாநில அரசே முழுமையாகச் செலுத்தியது. மத்திய அரசு நிதி ஒதுக்காததால் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை என்று திமுக அரசு சொல்கிறது.
இது மாநில அரசு ஒதுக்க வேண்டிய நிதி. அதைத் தராமல் அடுத்தவர் மீது பழி போடுகிறது. மாணவர்கள் விண்ணப்பித்தால்தானே அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டுமென்று மாணவர் சேர்க்கைக்கான இணையத்தையும் முடக்கியுள்ளது.” என்று கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி, ”ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின்கீழ், தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.2,151 கோடி நிதி கிடைக்காததால், நிதி கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஐயத்தில் இந்த ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாணவர் சேர்க்கையை தமிழக அரசு தாமதித்து வருகிறது. இதை நிறுத்தி வைக்கக்கூறும் எந்த காரணத்தையும் ஏற்க முடியாது.
கடந்த ஆண்டே இதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க நான் வலியுறுத்தினேன். ஆனால் இப்போதுதான் வழக்குத் தொடுத்துள்ளது. மத்திய அரசிடமிருந்த நிதி பெறுவதில் தமிழக அரசு தோல்வி அடைந்ததற்காக ஒரு லட்சம் ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிக்கக்கூடாது. கல்வி உரிமைச்சட்டத்தின்படி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை உடனே தமிழக அரசு வெளியிட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
வழக்கின் தீர்ப்பு குறித்த அச்சம்
பட மூலாதாரம், Getty Images
இரு அரசுகளும் நிதி ஒதுக்காததோடு, இந்த ஆண்டில் இதுவரை மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வராததால், பல லட்சம் குழந்தைகளின் பெற்றோர் காத்திருந்து ஏமாற்றமடைந்துள்ளனர் என்றும், இந்த ஒதுக்கீட்டில் குழந்தையை தனியார் பள்ளியில் சேர்க்க நினைத்து, எந்தவொரு முன்னேற்பாடும் இல்லாமல் இருந்த ஏழைப் பெற்றோர் பலரும் இப்போது செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள் என்றும் மனுதாரர் ஈஸ்வரன் கூறுகிறார்.
கோவை குறிச்சியைச் சேர்ந்த பெயிண்டர் சதீஷ், ”இந்த சட்டத்தின் கீழ், எனது வீட்டுக்கு அருகிலுள்ள 2 தனியார் பள்ளிகளில் ஏதாவது ஒன்றில் என் மகனை சேர்க்கலாம் என்று கடந்த ஆண்டிலிருந்தே இதற்காக தகவல் சேகரித்து எப்படி விண்ணப்பிப்பது என்றும் தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் இந்த ஆண்டில் இப்போது வரை விண்ணப்பம் வராத நிலையில், எல்லாப் பள்ளிகளிலும் அட்மிஷன் முடிந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை.” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தன் மகளுக்கு இந்த சட்டத்தின்கீழ் ஒரு பள்ளியில் சேர்க்க நினைத்திருந்த தொண்டாமுத்துாரை சேர்ந்த குமார், அறிவிக்கை வராத நிலையில், இடம் கிடைக்காதோ என்ற அச்சத்தில், சற்று தொலைவில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டதாகச் சொல்கிறார். இனிமேல் மாணவர் சேர்க்கைக்காக அறிவித்தாலும் அதனால் தன்னைப் போன்ற ஏழை மக்களுக்கு பயனில்லை என்கிறார் அவர்.
”எனது வழக்கின் தீர்ப்பு எப்படி வருமென்று தெரியவில்லை. எப்படியிருப்பினும் இந்த நிதியை மத்திய அரசு மறுக்கமுடியாது. அதற்காக இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.
மத்திய அரசு மறுத்தாலும் தமிழக மாணவர்களின் நலனை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிக்கையை உடனே துவக்க உத்தரவிட வேண்டும். ஆண்டுக்கு ரூ.300 கோடி என்பது தமிழக அரசின் நிதிநிலையில் சிறிய தொகைதான். ஆனால் இதனால் ஒரு லட்சம் ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள்.” என்கிறார் ஈஸ்வரன்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு