பட மூலாதாரம், M K Stalin
இன்றைய (22/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கல்வி நிதியின் ஆண்டு பங்கினை நிறுத்தியிருப்பதாக குற்றம் சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது என, தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், “சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் 2025-2026ம் ஆண்டுக்கான கட்டாய 60% பங்களிப்பாக தமிழ்நாட்டுக்குச சுமார் 2,152 கோடி ரூபாய் வழங்கப்படவில்லை. இது சமக்ரா சிக்ஷா திட்டம், கல்வி உரிமைச் சட்டம் 2009 அமலாக்கத்தை கடுமையாக பாதித்துள்ளது.
நிதி பற்றாக்குறை காரணமாக மாநிலத்தில் 43,94,906 மாணவர்கள், 2,21,817 ஆசிரியர்கள் மற்றும் 32,701 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திட்ட அமலாக்க ஆணையத்தின் ஒதுக்கீட்டின்படி மொத்தமாக 3585.99 கோடி ரூபாய் இந்த திட்டத்தில் செலவிடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூறுகிறது.
தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் சபரிஷ் சுப்ரமணியன் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, சமக்ரா சிக்ஷா திட்டமானது, தேசிய கல்விக் கொள்கை 2020, பி.எம். ஸ்ரீ பள்ளிகள் திட்டம் ஆகியவற்றோடு எந்த வகையிலும் தொடர்புடையது அல்ல என்று கூறுகிறது.
சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி பெறுவதற்கான மாநிலத்தின் உரிமையை மத்திய அரசு தடுத்து வைப்பதன் மூலம் கூட்டுறவு கூட்டாட்சி என்ற கொள்கையை புறக்கணிக்கிறது. கல்வி நிதியை நிறுத்துவதானது, கல்வி (பட்டியல் III, உள்ளீடு 25) தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கான மாநிலத்தின் அரசியலமைப்பு அதிகாரத்தை கையகப்படுத்துவதற்கு சமம். மத்திய அரசு மாநிலம் முழுவதும் தேசிய கல்விக் கொள்கை -2020-ஐ முழுமையாக அமல்படுத்தவும், மாநிலத்தில் பின்பற்றப்படும் கல்வி முறையிலிருந்து விலகவும் மாநில அரசை கட்டாயப்படுத்த முயல்கிறது,” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புமணியுடன் மனக்கசப்பு இல்லை : ராமதாஸ்
பட மூலாதாரம், RAMADOSS
அன்புமணியுடன் தனக்கு மனக்கசப்பு இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் அதன் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கடந்த 15, 16-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 9 மாவட்ட செயலாளர்கள், 11 மாவட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
அச்செய்தியில், “பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 82 மாவட்ட செயலாளர்கள், 80 மாவட்ட தலைவர்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனர். மேலும் கட்சிக்குள் அப்பா, மகன் இருவரிடையே கோஷ்டி பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் கட்சியினாிடையே தொடர்ந்து பரபரப்பும், குழப்பமும் நீடித்து வருகிறது.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, “எனக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை. வரும் நாட்களில் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார். கசப்பான செய்தியை என்றும் நான் சொல்வதில்லை, இனிப்பான செய்தியை தான் சொல்வேன்.
பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கப் போவதாக வதந்திகளை கிளப்பி விடுகின்றனர், அவர்கள் யார் என எனக்குத் தெரியும். பாமக நான் உருவாக்கிய கட்சி. அன்புமணியை நானே கட்சியில் இருந்து நீக்குவேனா?” என்று தெரிவித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு : தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை
பட மூலாதாரம், Getty Images
திமுக நிர்வாகி மீது எழுப்பப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளதாக தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், “பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அரக்கோணம் முன்னாள் திமுக நிர்வாகி தெய்வச்செயல் குறித்த புகாரை தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக நிர்வாகி தெய்வச்செயல் சிறுமிகளை அரசியல்வாதிகளுடன் பாலியல் தொடர்பில் இருக்கக் கட்டாயப்படுத்தியதாக அவரின் மனைவி கூறிய தகவல்கள் குறித்து வெளியான ஊடக செய்தியை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதில் திமுக இளைஞர் பிரிவு நிர்வாகியின் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வற்புறுத்தல் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகள் அடங்கும்.
குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அரசியல் தொடர்புகளைக் கருத்தில் கொண்டு, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் தமிழக டிஜிபிக்கு உடனடியாக, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை உறுதி செய்தல், ஒரு சுதந்திரமான விசாரணைக் குழுவை அமைத்தல், எந்தவொரு அரசியல் தலையீட்டையும் தடுப்பது மற்றும் பிஎன்எஸ் 2023 இன் தொடர்புடைய விதிகளின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மூன்று நாட்களுக்குள் எஃப்ஐஆரின் நகலுடன் நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையையும் ஆணையம் கோரியுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்த தெய்வச்செயலை அப்பொறுப்பில் இருந்து நீக்கி திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்: ஜப்பான் புறப்பட்டது முதல் எம்.பி.க்கள் குழு
பட மூலாதாரம், தினகரன்
ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு சென்று விளக்கம் அளிக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட 7 குழுக்களில் முதல் குழு ஜப்பான் புறப்பட்டுச் சென்றது என்று தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், “பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு நேரில் சென்று விவரிக்க பாஜக எம்.பி.க்கள் ரவிசங்கர் பிரசாத், பைஜெயந்த் பாண்டா, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. சஞ்சய் ஜா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்.பி. சுப்ரியா சுலே, சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இவர்களில் 4 பேர் தேசிய ஜனநாயக கூட்டணியையும், 3 பேர் ‘இந்தியா’ கூட்டணியையும் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு குழுவிலும் 6 அல்லது 7 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு குழுவும் 4 அல்லது 5 நாடுகளுக்கு செல்லும். இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஜா தலைமையில் 9 பேர் கொண்ட முதல் எம்.பி.க்கள் குழு தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த குழு ஜப்பான், தென்கொரியா, மலேசியா, இந்தோனீசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்து இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிக்கிறது. இதைத் தொடர்ந்து, திமுக எம்.பி. கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு நாளை (22-ந்தேதி) ரஷ்யா புறப்பட்டு செல்கிறது. இந்த குழு அங்கிருந்து ஸ்பெயின், கிரீஸ், லாத்வியா, சுலோவேனியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறது. கனிமொழி எம்.பி-யிடம் பெற்ற இந்த குழு பயணத்தை முடித்துக்கொண்டு ஜூன் 2-ந்தேதி நாடு திரும்புகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உப்பு உற்பத்தி பாதிப்பு : இறக்குமதி செய்துள்ள இலங்கை
பட மூலாதாரம், wasantha samarasinghe
காலநிலை சீர்கேட்டினால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போதுமான அளவு உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார் என இலங்கையின் வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், “இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் வசந்த சமரசிங்க, உப்பு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் பற்றி பேசப்படுகிறது. கடந்த ஆறு மாத காலப்பகுதிகளில் நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தற்காலிக தீர்மானமாக உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
நாளொன்றுக்கு உப்பு பயன்பாட்டுக்கான கேள்வி 500 மெற்றிக்தொன்னாக காணப்படுகிறது. உணவு பயன்பாட்டை காட்டிலும் பல்வேறு கைத்தொழில் நடவடிக்கைகளுக்கு உப்பு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே உப்பு உற்பத்தி வழமைக்கு திரும்பும் வரையில் குறுகிய கால அடிப்படையில் உப்பு இறக்குமதிக்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அரச நிறுவனத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனூடாக உப்பு மாஃபியா தோற்றம் பெற்றுள்ளதாகவும் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. இறக்குமதி செய்யப்பட்ட உப்பில் ஒரு தொகை தூய்மையாக்கப்பட்டு சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
போதுமான அளவு உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. உப்பு தட்டுப்பாட்டுக்கு இவ்வாரத்துடன் தீர்வு எட்டப்படும். அரசியல் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் பிறிதொரு விடயத்தை தேடிக்கொள்ள வேண்டும். போலியான விடயங்களை உண்மை போன்று எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுக் கொள்கின்றன என்றார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு