பட மூலாதாரம், Getty Images
‘மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போது ஃபேமஸ்’ என்று இரு தினங்களுக்கு முன் திருநெல்வேலியில் தனது மத்திய பட்ஜெட் குறித்த விமர்சனத்தைக் கிண்டலாக முன்வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
2025-2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசு, மாநில அரசு செலவில் அமலாகும் திட்டங்களை, சொந்தம் கொண்டாடுவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரம், மாநில பாஜகவினர், ‘உண்மையை ஊருக்கு சொல்வோம்’ என்று கூறி, பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட திட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் யார் சொல்வது உண்மை?
சமீப ஆண்டுகளாக ஒவ்வொரு முறை மத்திய பட்ஜெட் வெளியாகும் போதும் தமிழ்நாட்டில் இந்த விவாதம் எழுகிறது. இந்த ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விமர்சனத்தை பலமுறை முன்வைத்துள்ளார். அத்துடன் நிற்காமல், பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து மாநிலம் தழுவிய பொதுக்கூட்டங்களையும் திமுக முன்னெடுத்துள்ளது. சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று மத்திய அரசை கடுமையாக சாடி பேசினார்.
எனவே, மத்திய பட்ஜெட் தற்போது மைய விவாதத்துக்கு வந்திருக்கும் அரசியல் பிரச்னையாக மாறியுள்ளது. தமிழ்நாடு பாஜகவும் அதற்கு பதில் சொல்லி வருகிறது.
ரூ. 14,200 கோடி திட்டங்களின் பட்டியல்!
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என்னென்ன திட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது என மாநில பாஜகவினர் கடந்த சில நாட்களாக ஒரு பட்டியலை பகிர்ந்து வந்தனர். இணையத்தில் பலமுறை பகிரப்பட்டிருக்கும் அந்த பட்டியலில் உள்ள திட்டங்களின் விவரங்களை குறிப்பிட்டு, அந்தப் பொய்யானது என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு மறுப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் 2025-2026ல் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்ட ஒரு சில முக்கிய திட்டங்கள் என்ற பட்டியல் ஒன்றை பாஜக வெளியிட்டது. அதில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம், சென்னை – விசாகப்பட்டினம் தொழில் வளர்ச்சி திட்டம், சென்னை கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உட்பட தமிழ்நாட்டில் 25 திட்டங்களுக்கு ரூ.14,200 கோடி ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உண்மையை ஊருக்கு சொல்வோம், விரைவில் தமிழகத்தை வெல்வோம்” என்று கூறி பாஜக வெளியிட்ட பட்டியலுக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளது.
பட மூலாதாரம், X/@HRajaBJP
பாஜக பட்டியலை நிராகரிக்கும் தமிழ்நாடு அரசின் சரிபார்ப்புக் குழு
தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கத்தின்படி, பாஜகவினரால் பகிரப்படும் பட்டியலில் உள்ள 24 திட்டங்கள் வெளிநாட்டு கடனுதவி பெற்று அமல்படுத்தப்படும் திட்டங்கள் என கூறப்பட்டுள்ளது. அதிலும் தமிழ்நாடு காலநிலை மீள்தன்மை மற்றும் மறு உருவாக்கம் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கும் திட்டம் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்றும் கூறியுள்ளது.
” உலக வங்கி போன்ற வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து கடனை பெற்று தருவதற்கான இணைப்பாக மட்டுமே மத்திய அரசு செயல்படுகிறது என்றும், இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கவில்லை. பட்ஜெட்டில் தமிழ்நாடு அல்லது சென்னை என்ற பெயரில் உள்ள வெளிநாட்டு நிதியுதவி பெறும் மாநில அரசு திட்டங்களை எடுத்து அவை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கிய திட்டங்கள் என பொய்யான தகவலை பரப்புகின்றனர்” என்றும் தமிழ்நாடு உண்மை அறியும் குழு சுட்டிக்காட்டுகிறது.
மேலும், “சென்னை மெட்ரோ ரயில் (இரண்டாம் கட்டம்) மாநில அரசின் திட்டமாக தொடங்கப்பட்டு, பின்னர் தொடர் கோரிக்கைகளின் மூலம் ஒன்றிய அரசின் உதவி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கூட, மாநில அரசு நிதி மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கடன் போக ஒரு சிறு பகுதியை தான் ஒன்றிய அரசு வழங்குகிறது.” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், X/@tn_factcheck
மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்திய திமுக
“தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை, நீதியும் இல்லை” என்று கூறி மத்திய அரசை கண்டித்து பிப்ரவரி 8ஆம் தேதி திமுக பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தனது தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், “திருக்குறளை மேற்கோள் காட்டினால் போதும், தமிழ்நாட்டை ஏமாற்றிவிடலாம் என்று நிதியமைச்சர் நினைக்கிறார். பிகார், பிகார் என்று ஆறு முறை கூறுகிறார். ஏன்? அங்கு தான் சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது. கடந்த முறை ஆந்திரா, ஆந்திரா என்று கூறினார்கள். ஏனென்றால் அப்போது ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது” என்று பேசினார்.
பட்ஜெட் 2025-26 ன் மூலம், வரி செலுத்தும் 3.2 கோடி மத்திய தர வர்க்கத்தினரையும், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள பிகாரில் உள்ள 7.65 கோடி மக்களையும் பாஜக கவர நினைக்கிறது என்பது மட்டும் தெரிகிறது என்று கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம்.
திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி, மத்திய பட்ஜெட் மேற்கு வங்கத்துக்கு எதிராக இருப்பதாக குற்றம் சாட்டினார். பிகாருக்கு அள்ளி கொடுத்து, மேற்கு வங்கத்துக்கு ஒன்றும் வழங்கவில்லை என்று கூறிய அவர், மேற்கு வங்கத்துக்குக் கிடைக்க வேண்டிய 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதி இன்னும் கிடைக்கவில்லை என்றார்.
பட மூலாதாரம், X/@mkstalin
ஒருபுறம் பிகாருக்கு அதிக நிதி ஒதுக்கியது விமர்சிக்கப்படுகிறது. மறுபுறம், மத்திய அரசு என்ற முறையில் எந்த மாநிலத்துக்கு அதிக உதவி தேவையோ அதற்கு தானே அதிகம் வழங்க முடியும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இந்த குழப்பம் ஒரு கூட்டாட்சியில் நிலவுவது இயல்பு தான் என்று கூறுகிறார், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி (மிட்ஸ்) நிறுவனத்தின் இயக்குநரும், இந்திய பிரதமர் மோதியின் பொருளாதார ஆலோசனைக் குழுவுக்கு 2022, 2023 காலகட்டத்தில் ஆலோசகராக இருந்தவருமான பேராசிரியர் சுரேஷ்பாபு கூறுகிறார்.
” பொதுவாக ஒரு கூட்டாட்சி அரசு என்றால், வளங்களை பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது தான் அதன் அடிப்படை அம்சமாகும். ஆனால் அது அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற வேண்டும். பட்ஜெட் மற்றும் தேர்தல் நடைபெறும் காலம் கிட்டத்தட்ட ஒத்துபோவதாக இருக்கும். எனவே தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சில சாதகங்கள் பட்ஜெட்டில் இருக்க தான் செய்யும். பிகாருக்கு கண்டிப்பாக உதவிகள் தேவை, அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களின் எண்ணிக்கையை பார்த்தால் தேர்தல் நடைபெறும் மாநிலம் என்ற காரணத்தை புறக்கணித்துவிட முடியாது” என்று குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், MIDS
தமிழ்நாடு சொல்வது என்ன?
பல்வேறு துறைகளில் நாட்டில் சிறந்து விளங்கினாலும், தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை, தமிழ்நாடு வைத்த கோரிக்கைகளில் ஒன்று கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டாகும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை மெட்ரோ ரயில் புதிய ரயில்வே திட்டம், ஏற்கெனவே உள்ள திட்டங்களுக்குக் கூடுதல் நிதி, குடிநீர் திட்டம், வீடு கட்டும் திட்டம், ஃபெஞ்சல் புயல், மிக்ஜாம் புயல்களுக்கான நிவாரணம் என பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று தமிழ்நாடு குறிப்பிடுகிறது.
மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 37,907 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு கேட்டிருந்தது. மத்திய அரசு 276 கோடி ரூபாய் நிதி வழங்கியிருந்தது. அதே போல் ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 6,675 கோடி ரூபாயை தேசிய பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து தமிழ்நாடு அரசு கேட்டிருந்தது. ஆனால், அந்த தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதியையும் தமிழக அரசு கோரியிருந்தது.
தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கவில்லை என்பது இங்கே குற்றச்சாட்டு இல்லை, வழக்கமாக கொடுக்க வேண்டிய நிதியையே கொடுக்கவில்லை என்று கூறுகிறார் பேராசிரியர் வீ. அரசு.
“மிக்ஜாம் மற்றும் பெஞ்சல் புயல் நிவாரண நிதியை போதிய அளவு கொடுக்கவில்லையே. மாநில அரசு தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திடவில்லை என்பதால், பிஎம்ஸ்ரீ பள்ளிகளை உருவாக்குவதற்கான ரூ.228 கோடியை வேறு திட்டத்துக்கு மடை மாற்றியிருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று தமிழக அரசு கூறுவது தவறில்லை. பாஜக சிந்தாந்த ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் தாக்க முயல்கிறது. அதற்கு பொருளாதார உத்தியை கையாள்கிறது பாஜகவின் மத்திய அரசு.” என்று அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், V Arasu
பாஜகவின் பதில் என்ன?
இந்த குற்றச்சாட்டுகளை பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தொடர்ந்து மறுத்து வருகிறார். மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ276 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், “அப்படியென்றால், மீதமுள்ள ரூ.37,631 கோடி எங்கிருந்து பெற்றீர்கள்? எப்படி செலவு செய்தீர்கள் என்பதை சொல்ல முடியுமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
“மத்திய அரசின் திட்டங்களில் நீங்கள் மேலும் இணைவதற்கு மறுப்பதற்கு காரணம், வெளிப்படைத்தன்மையோடு, ஊழல் இல்லாத திட்டங்களை அளிக்கிறது மத்திய அரசு என்பதால் தானே?உங்களின் மலிவான, உங்களின் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான அரசியலில் தமிழக மாணவர்களை பகடைக் காயாக வைத்திருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
பட மூலாதாரம், X@narayanantbjp
மத்திய அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வு 2025- அறிக்கை தமிழ்நாடு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, தோல் அல்லாத காலணி உற்பத்தியில் வேகமாக முன்னேறி வருவதை சுட்டிக்காட்டி வெகுவாக பாராட்டியது. இந்தியாவின் காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் 38%, மற்றும் தோல் ஏற்றுமதியில் 47% தமிழ்நாடு பங்கு வகிக்கிறது, இந்த துறை 2 லட்சத்துக்கும் மேலான வேலை வாய்ப்புகளை உருவாக்கிறது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
தேசத்தின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றியும், அதிக வரி செலுத்தியும் வரும் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது சரியான அணுகுமுறை அல்ல என்றும் தமிழ்நாடு அரசு கருதுகிறது. கேரளாவிலும் இதே கருத்து எதிரொலிக்கிறது.
“இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மத்திய – மாநில நிதி பகிர்வு பற்றிய அதிருப்தியால் வரக் கூடியவை. நிதி ஆணையத்தின் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட வளர்ந்த மாநிலங்களுக்கு அதிருப்தி நிலவுகிறது” என்பதை குறிப்பிட்ட பேராசிரியர் சுரேஷ்பாபு, “இந்த மாநிலங்கள் தாங்கள் வளர்ச்சி அடைந்ததற்காக ‘தண்டிக்கப்படுவதாக’ கருதுகிறார்கள். நிதி ஆணையத்தின் ஒதுக்கீடுகளில் சில மாற்றங்கள் வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்துக்கு செல்லும் போது, அவர்களின் பிரச்னைகளும் வேறு மாதிரியாக இருக்கும். உதாரணமாக முதியோரின் எண்ணிக்கை அதிகரிக்கும், அவர்களுக்கான சமூக பாதுகாப்பு தேவைப்படும், அதற்கான நிதி ஆதாரம் தேவைப்படும்.” என்றார்.
தமிழ்நாட்டின் நிதி நிலைமை எவ்வாறு உள்ளது?
தமிழ்நாட்டின் கடன் அதிகரித்து வருகிறது என்றாலும், சமாளிக்க முடியாத நிலை இன்னமும் ஏற்படவில்லை என்கிறார் சுரேஷ்பாபு. “மாநிலத்துக்கு தற்போதைய தேவை வருவாய் அதிகரிப்பு. ஆனால், ஜி எஸ் டி அறிமுகப்படுத்திய பிறகு மாநிலங்கள் தங்கள் வருவாயை அதிகரிக்க, வரிகளை விதிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன. மாநிலத்தின் செலவுகள் குறையாத அதேநேரத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இப்படியான நிலையில், முதலீடுகள் குறையும், அது வளர்ச்சியை பாதிக்கும்” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு