குஜராத்தில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின் (APMC) கிடங்கு, விவசாயிகள் விற்க கொண்டு வந்த நிலக்கடலையால் நிரம்பி வழிகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேர்க்கடலையின் சந்தை விலை, மவுண்ட் (maund – தோராயமாக 20 கிலோ) ஒன்றுக்கு ரூ.70 குறைந்துள்ளது. ஆனால், குஜராத் ஜூனாகத் கிரவுண்ட்நட் 9 (ஜிஜேஜி-9) மற்றும் காதிரி-6 எனும் இரு வேர்க்கடலை ரகங்களுக்கு அதிக சந்தை விலை கிடைத்துள்ளது. இதற்கு காரணம்? தமிழ்நாட்டு வியாபாரிகள் அதிகளவில் இந்த இரு ரகங்களையும் அதிக விலைக்கு வாங்குகின்றனர்.
எந்தெந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வாங்குகின்றனர்?
வேர்க்கடலை பயிர் பெரும்பாலும் மூன்று முதல் நான்கு மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிடும். “தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் மூன்று பருவங்களில் வேர்க்கடலைகளை பயிரிடுகின்றனர். ஒன்று காரி பருவம் (ஜூன்), காரி பருவத்திற்கு பிந்தைய பருவம் (செப்டம்பர் -அக்டோபர்) மூன்றாவது ராபி பருவம் (டிசம்பர்-ஜனவரி) ஆகிய பருவங்களில் பயிரிடுகின்றனர்” என, ஜூனாகத் வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் பேராசிரியர் ராஜேஷ் மடாரியா கூறுகிறார்.
“தமிழ்நாட்டில் காரி பருவம் அதாவது பருவமழை காலத்தில் பயிரிடப்படும் வேர்க்கடலை அவ்வளவு நன்றாக இருக்காது. எனவே, அதிகளவிலான வேர்க்கடலை எண்ணெய் ஆலைகளுக்கு அனுப்பப்படும். அத்தகைய வேர்க்கடலைகள் விதைப்பதற்கு சிறந்தது அல்ல. காரி பருவத்திற்கு பிந்தைய பருவத்தில் பயிரிடப்படும் வேர்க்கடலை, டிசம்பர் – ஜனவரி மாதம் ராபி பருவத்தில் அறுவடை செய்யப்படும். இதனால், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு அச்சமயத்தில் பயிரிடுவதற்கு வேர்க்கடலை விதைகள் கிடைக்காது என்பதால் அவர்கள் குஜராத்தை சாந்திருக்கின்றனர்” என மடாரியா பிபிசி குஜராத்தியிடம் தெரிவித்தார்.