பட மூலாதாரம், Getty Images
தன் மனைவியின் போலியான புகாரின்பேரில் காவல்துறை தன்னைத் துரத்துவதால், தலைமறைவாக இருப்பதாகவும் காவல்துறை 25 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால், தன் மகனை, இவர் கடத்திச் சென்றிருப்பதாக அவரது மனைவி வீடியோ வெளியிட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?
சென்னையைச் சேர்ந்த பிரசன்னா ஷங்கர், அமெரிக்காவில் ஒரு மனித வள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்திவருகிறார். இவருக்கு திருமணமாகி, 9 வயதில் மகன் இருக்கிறார். தற்போது இந்தத் தம்பதியினர் விவாகரத்து பெறும் முயற்சியில் இருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் இவர்களது மகனை யார் வைத்துக் கொள்வது என்பது தொடர்பாக இரு தரப்பும் மாறி, மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார் பிரசன்னா.
அந்தப் பதிவில் தானும் தனது மனைவியும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகவும் ஆனால், தனது மனைவிக்கு திருமணத்தைத் தாண்டிய உறவு இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து, இருவரும் விவாகரத்து பெரும் முயற்சியில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும், விவாகரத்து பெற்றால் மனைவிக்கு தான் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில், அதில் திருப்தியடையாத மனைவி, தான் அவரைத் தாக்கியதாகவும் அவரைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் நிர்வாண வீடியோக்களை வெளியிட்டதாகவும் புகார் அளித்தார் எனவும் பிரசன்னா தெரிவித்திருக்கிறார்.
“இந்தப் புகாரை விசாரித்த சிங்கப்பூர் காவல்துறை, இவை அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் என்று கூறி குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தது. நான் இந்தியாவில் விவாகரத்திற்காக விண்ணப்பித்தேன். மனைவி அமெரிக்காவில் விவாகரத்திற்காக விண்ணப்பித்தார். இந்த வழக்கை வைத்து என் மகனை அமெரிக்காவுக்கு கடத்திச் செல்ல முயற்சித்தார். இதனால் சர்வதேச குழந்தை கடத்தல் வழக்கு ஒன்றை நான் அமெரிக்காவில் பதிவுசெய்தேன். குழந்தையை என்னிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது”, என்றும் பிரசன்னா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில், “எங்களது ஊரான சென்னைக்கு வரும்படி மனைவி சொன்னார். நாங்கள் இருவரும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். நான் 9 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் மாதம் 4.3 லட்ச ரூபாய் கொடுப்பதாகவும் ஒப்புக்கொண்டேன். குழந்தையை இருவரும் பாதி – பாதி நேரம் வைத்துக்கொள்வதாக ஒப்புக்கொண்டோம். சிறிது காலம் இப்படிச் சென்றது. ஆனால் எங்கள் ஒப்பந்தப்படி, மகனின் பாஸ்போர்ட்டை ஒரு பொதுவான லாக்கரில் வைக்கவில்லை. பிறகு அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செல்லாது எனச் சொல்லிவிட்டு, அமெரிக்காவில் விவாரத்திற்கு மனு செய்யப்போவதாகச் சொன்னார்”, என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ”பிறகு காவல்துறையிடம் புகார் அளித்து, குழந்தையை மீட்டுத் தரும்படி சொன்னார். நான் காவல்துறைக்கு என் தரப்பு விளக்கத்தை அளித்தேன். என் மகன் என்னுடன் சந்தோஷமாக இருப்பதை வீடியோ காலிலும் காண்பித்தேன். ஆனால், காவல்துறை என் வீட்டிற்குச் சென்று எனது தாயாரிடம் என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள். எனது நண்பர் கோகுலை மூன்று நாட்களாக வழக்குப் பதிவுசெய்யாமல் பிடித்து வைத்திருக்கிறார்கள்.” எனது தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
இதற்குப் பிறகு, பிரசன்னாவின் மனைவி வெளியிட்ட வீடியோ ஒன்று ஊடகங்களில் வெளியானது. அந்த வீடியோவில் தன் கணவர், மகனை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுவிட்டதாக குற்றம்சாட்டியதோடு, வேறு பல தீவிரமான குற்றச்சாட்டுகளையும் சுமத்தினார்.
“என்னுடைய 9 வயது மகனை மூன்று வாரங்களாகக் காணவில்லை. நானும் என் மகனும் அமெரிக்க குடிமக்கள். மூன்று வாரங்களுக்கு முன்பாக என்னையையும் என் மகனையும் ஒரு சொத்து விவகாரம் தொடர்பாக, எனது கணவர் வலுக்கட்டாயமாக இங்கே வரவழைத்தார். எனக்கும் எனது கணவருக்கும் இடையில் திருமணம் தொடர்பான பிரச்னை சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு நடுவில், எனது கணவரின் பி.ஏ. எனக் கூறிக்கொண்டுவந்த கோகுலகிருஷ்ணன் என்பவர், என் மகனை வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டுபோய்விட்டார். அவர் எனது மகனை, எனது கணவரிடம் விட்டாரா அல்லது எங்கே வைத்திருக்கிறார் என்பது தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்”, என்று பிரசன்னாவின் மனைவி அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “இதனால்தான் காவல்துறையில் புகார் அளித்து, அவர்கள் என் மகனைக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டுமெனக் கேட்டேன். அவருடைய பி.ஏ. என் மகனை அழைத்துச் சென்று, எங்கே வைத்திருக்கிறார், காசுக்காக மிரட்டுகிறார்களா என்பதெல்லாம் தெரியவில்லை. எனக்குப் பயமாக இருக்கிறது. அமெரிக்கத் தூதரகமும் சென்னை நகரக் காவல்துறையும் எனக்கு உதவிசெய்ய முயல்கிறார்கள். கடந்த இரண்டாண்டுகளாக நாங்கள் அமெரிக்காவிலிருந்து வந்து சிங்கப்பூரில் இருந்தோம். என் மகனின் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு என் கணவர் சிங்கப்பூரை விட்டு ஓடிவிட்டார். அதனால், என் மகனை எங்காவது கடத்திக்கொண்டு போய்விடுவாரோ என்ற பயமும் இருக்கிறது”, என்று குறிப்பிட்டார்.
“பிரசன்னாவின் பாலியல் தாக்குதல்களுக்கு நான் ஆளாகியிருக்கிறேன். இது தொடர்பாக சிங்கப்பூர் காவல்துறை அவரைக் கைதுசெய்து, நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது. அவரிடம் நிறைய காசு இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கக்கூடாது. நான் ஒரு அமெரிக்க குடிமகள். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அமெரிக்காவில் நான் வழக்குத் தொடரக்கூடாது என ஆர்டர் வாங்குகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பாக, சான் பிரான்சிஸ்கோவில் பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக ஒரு ரகசிய நடவடிக்கையில் கைதாகியிருக்கிறார். அதனால்தான் கம்பனியில் அவருடைய பதவியை இழந்தார். சென்னை நகரக் காவல்துறையிடமிருந்து உதவி தேவை. என் மகனை அவர்கள் மீட்டுத் தர வேண்டும்” என்று அந்த வீடியோவில் பிரசன்னாவின் மனைவி கூறியிருந்தார்.
இதேபோல பிரசன்னாவும் ஒரு வீடியோ பதிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தன் மகனுடன் இருக்கும் காட்சிகள் இருந்தன.
இதற்குப் பிறகு மீண்டும் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரசன்னா, காவல்துறையின் பிடியில் இருக்கும் தன்னுடைய நண்பரை விடுவிக்க வேண்டுமென்றால் திருமங்கலம் காவல்துறை 25 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
“எனது மனைவி அவரது முழு சம்மதத்தோடு என் மகனை என் நண்பர் கோகுல கிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். அவர் என்னிடம் மகனை ஒப்படைத்தார். இதற்குப் பிறகு எனது நண்பர் மகனைக் கடத்திவிட்டதாகவும் அவனைக் கொன்றுவிடக்கூடும் என்றும் என் மனைவி புகார் அளித்தார். இதற்குப் பிறகு காவல்துறையினர் என்னுடைய வழக்கறிஞர் பிரேம் ஆனந்திடம் 2 லட்ச ரூபாய் கேட்டுள்ளனர். அவரும் என் அறிவுரையை மீறி அந்தப் பணத்தைக் காவல்துறையினரிடம் அளித்துள்ளார். ஆனால், என்னிடம் நிறைய பணம் இருப்பது தெரிந்தவுடன் கூடுதலாக பணம் கேட்டனர். சுமார் 25 லட்ச ரூபாயை கேட்டிருக்கின்றனர். அவர்கள் மாநில எல்லைகளைக் கடந்து, கர்நாடக மாநிலத்திற்குச் சென்று பெங்களூர் நகர காவல்துறைக்குக்கூட தெரிவிக்காமல் அங்கிருந்து என் நண்பரைக் கைதுசெய்துள்ளனர்” எனக் கூறியிருந்தார்.
இது குறித்து திருமங்கலம் காவல்துறையிடம் கேட்டபோது, எந்தத் தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
“இது போன்ற வழக்குகளில், குழந்தையை யாரிடம் இருந்தால் பாதுகாப்பு என்பதை ஆராய்ந்து நீதிமன்றம் முடிவெடுக்கும். பெற்றோரில் ஒருவர் தன்னிடம் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், குழந்தையின் நீண்ட கால நலனை மனதில் வைத்து இதனை நீதிமன்றம் ஆராயும், முடிவுசெய்யும். ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு மாதிரியானது” என்கிறார் மூத்த வழக்கறிஞரான அஜிதா.
இந்நிலையில் காவல்துறை இது தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில், “தனக்கும் தனது மனைவிக்கும் இடையிலான பிரச்னையைத் தீர்க்க உதவி ஆணையரும் உதவி ஆய்வாளரும் பணம் கேட்டதாக குறிப்பிட்டதால், அதன் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க துணை ஆணையர் நியமிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் இந்தத் தகராறு குறித்து முறையான விசாரணை நடத்துவதற்காக வழக்கு சென்னை பெருநகர காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு துணை ஆணையருக்கு மாற்றப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டிருக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.