• Mon. Feb 2nd, 2026

24×7 Live News

Apdin News

தமிழ் இனத்தின் துன்பியலை வெளிப்படுத்தும் போர்க்களத்தின் பேனாக்கள் | இ.சு.முரளிதரன் 

Byadmin

Feb 2, 2026


தொன்மப் போர்மரபும் காவிய இதிகாசப் புனைவுப் போர்களும் கூட அறத்தின் சாய்மானத்தோடு  நிகழ்ந்ததில்லை. அவ்வாறிருக்கையில் ஈழத்தில் நிகழ்ந்த போரில் அறமீறல்கள் எவ்வாறு அமைந்திருக்குமென்பது கற்பனைக்கும் அற்பாற்பட்டது.
பேரவலமொன்றை எதிர்கொண்டு, மீண்டெழ முடியாத துயரில் தவிக்கின்ற இனமொன்று ‘நாளை விடியுமென்று’ போலிப் பிடிமானத்தோடும், கையறு நிலையோடு வாழ்ந்து வருகின்றது. அதிகாரத்தை எதிர்ப்பதாக, அரசியற் களத்தின் கோமாளிக் கூத்துத் தொடரும் நிலையில், சர்வதேசத்தின் மெளனம் அதிகாரத்திற்குப்  பக்கபலமாகவே அமைந்துள்ளது. காலந்தின்ற நாள்களில், போர்க்களத்தில் பேனா முனைகளின் புரட்சி குறித்த பதிவாக, ஐங்கரன் விக்கினேஸ்வரா இந்நூலைக் கையளிக்கின்றார்.
போரிலக்கிய உருவாக்கம், சகோதர யுத்தம், நூலகலமெரிப்பு, நிலஅபகரிப்பு, புலம்பெயர்வு, காணாமற் போதல், சித்திரவதைகள், பதுங்குகுழி வாழ்வு, குண்டுவீச்சு, பௌத்த ஆதிக்கம், மொழி அதிகாரம், சோதனைச் சாவடி, வண்புணர்வு,  கைதுகள், பரணி பாடுதல், பண்பாட்டு வரைபடச் சிதைப்பு, ஆயுதக்கலாசரம், வன்மப்பரவலாக்கம். என எண்ணற்ற விடயங்களுக்குள்ளே சிக்குப் பிதுங்கி வெளியேறிய இனத்தின் ஒட்டுமொத்தமான துன்பியலை வெளிப்படுத்த போர்க்களத்தின் பேனாக்கள் முனைகிறது.
போராளிகளின் புனிதத்தைக் காவு கொடுக்காத வகையில், புரட்சியின் நெடுஞ்சாலையை விட்டுப் புறம் போகாமல் பயணிக்கின்றார். ஒவ்வொரு படைப்பாளியையும், நாம் சமகால விமர்சனப் பார்வையில் நோக்குவோம். அதாவது நடப்புக் காலத்தில் எவ்வகை நோக்கு நிலை மேலோங்கியுள்ளதோ, அதே வகையான தரிசனத்தில் அளந்துவிட முனைவோம். இதனால் காலத்திற்குக் காலம் மாறுபட்ட படைப்பாளிகள் கொண்டாடப்படுவது உண்டு.  எனினும் தன் இனத்திற்காக, மனித வர்க்கத்தின் எழுச்சிக்காக இலக்கியம் படைத்தவர்களை அடுத்து வரும் காலம், ஏதோவொரு வகையில்  புறந்தள்ளாமல் கொண்டாடும்.  அத்தகைய படைப்பாளிகளை ஐங்கரன் விக்கினேஸ்வரா இந்நூலில் இனங்காட்டுகின்றார்.
சிவ.ஆருரன், கி.பி.அரவிந்தன், அகிலன் திருச்செல்வம், க.வே.பாலகுமார்,  நா.யோகேந்திரநாதன், மகாலிங்கம் பத்மநாதன், பண்டிதர் வீ. பரந்தாமன் போன்றோர் ஈழப் போராட்டத்திற்கு நல்கிய  இலக்கிய பங்களிப்பினைக் குறித்து சிலாகித்துள்ளார். ஊடகவியலாளர்களான மேரி கொல்வின், ஃபிரான்ஸிஸ் ஹரிசன் ஆகியோரின் மனிதாபிமானமும், துணிகரமிக்க செயற்பாடுகளை விதந்தோதுகின்றார். பெண் போராளிகளின் படைப்புகள், கறுப்பு ஜூலை, செம்மணி என்பன குறித்த ஆவணப்பதிவுகள் பற்றி துல்லியமான
தகவல்களை வெளிப்படுத்தும் நூல்களை சிறப்பாக நுணுகி நோக்கியுள்ளார்.
“இளம் எழுத்தாளனையும் வரலாறு ஓர் நாள் விடுதலை செய்யும் எனும் நம்பிக்கைகளுடன்” என நிறைவு செய்வதும், அந்த நம்பிக்கை மெய்யாகிப் போவதும்
நெகிழ்வினைத் தருகின்றது. மேரி கொல்வின் இறுதிக் கட்டப் போர்க்காலத்தில் எதிர் கொண்ட அனுபவங்களையும், சிரியா மற்றும் கிழக்கு தீமோரில் நிகழ்த்திய துணிகரச் செயற்பாடுகளையும் மெய்சிலிர்க்க எழுதிச் செல்லும் பாங்கு வியக்க வைக்கிறது.
ஈழப்போராட்டத்திற்குச் சேறு பூசுகின்ற நச்சுநிரற்படைப்புகளைத் துளியும் விரும்பாதவர் ஐங்கரன் விக்கினேஸ்வரா என்பதனையும் இந்நூல் இனங்காட்டுகின்றது. ஈழப்போராளிகள் மீதான பற்றுதலையும், அவர்களின் செயற்பாடுகளுக்கான மதிப்பினையும் கட்டுரைகளின் வழியே செவ்வனே உணர்த்தியுள்ளார்.
இந்நூல் மாற்றுக் கருத்துகளையும், அகலித்த விவாதத்தினையும் இலக்கிய உலகில் உண்டாக்குமென நம்புகிறேன். அலுப்பூட்டத வகையிலும், பிறரைத் தொந்தரவு செய்யும் வகையிலும் அமைகின்ற நூலே ஆரோக்கியமானது. அத்தயை பண்புகளோடு காணப்படும் “போர்க்களத்தின் பேனாக்கள்”
பாராட்டுதலுக்கு  உரியது.
⁃இ.சு.முரளிதரன் 

The post தமிழ் இனத்தின் துன்பியலை வெளிப்படுத்தும் போர்க்களத்தின் பேனாக்கள் | இ.சு.முரளிதரன்  appeared first on Vanakkam London.

By admin