• Tue. Apr 29th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி யாழில் போராட்டம் (படங்கள் இணைப்பு)

Byadmin

Apr 29, 2025


சிரேஷ்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி தர்மரத்தினம் சிவராம் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபி முன்பாக தர்மரத்தினம் சிவராம் மற்றும் செல்வராஜா ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட முன்னரே, நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியில் பெருமளவான பொலிஸார் சீருடைகளுடனும், சிவில் உடைகளுடனும் குவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் பெருமளவான புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதுடன், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்தனர்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு, பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊடகவியலாளர் செல்வராஜா ரஜீவர்மன் ‘உதயன்’ பத்திரிகையின் அலுவலக செய்தியாளராகக் கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் யாழ். ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

The post தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி யாழில் போராட்டம் (படங்கள் இணைப்பு) appeared first on Vanakkam London.

By admin