‘தமிழைப் படித்தால் பிச்சை எடுக்கக்கூட உதவாது’ என நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாகக் கூறி மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் அதற்கு எதிர்வினையாற்றினார் . இந்த விவகாரத்தில் ஒவ்வொருவர் பேசியது குறித்தும் சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் நிலவுகின்றன. உண்மையில் யார் என்ன சொன்னார்கள்?
இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினரான கமல்ஹாசன், பிப்ரவரி நான்காம் தேதி தனது முதல் உரையை நிகழ்த்தினார். அந்த உரையின் ஒரு பகுதியாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைக் குறிப்பிட்டு பேச ஆரம்பித்தார் கமல். “பிரிய சகோதரி, பவதிபிச்சாந்தேகி என்று தெலுங்கில் இசைபாடி வந்த அந்த மாமனிதர், இசைமேதை தியாகராஜன். அவர் பிக்ஷா பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்திற்கு உதவாது என்று தெரிந்தவர்கள் நீங்கள். நீங்கள் வெள்ளைக்காரக் கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
அதன் பிறகு உங்கள் பிச்சைப் பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சைக் குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர் இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்கிறீர்கள்? தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதா? ஓரளவு உண்மைதான். ஒரு தெற்கத்தி அறிவுரை தந்தாய். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே. தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்.” என்று குறிப்பிட்டார்.
அவரது இந்தப் பேச்சு குறித்து செய்தி வெளியானபோது, தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாது என நிர்மலா சீதாராமன் கூறியதாகவும் அதற்கு கமல்ஹாசன் பதிலளித்ததாகவும் சில ஊடகங்கள் குறிப்பிட்டன. இதையடுத்து நிதியமைச்சரின் அலுவலகம் இது குறித்து விளக்கமளித்தது. அதாவது, “கடந்த 2025 மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்வில், நிதியமைச்சர் அவர்கள் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்களின் கூற்றையே தெளிவாக மேற்கோள் காட்டினார்; அது அவருடைய சொந்தக் கருத்து அல்ல” என அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது.
பட மூலாதாரம், SANSAD TV
நிர்மலா சீதாராமன் பேசியது என்ன?
2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், தேசிய கல்விக் கொள்கை, பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக விவாதம் நடந்துவந்தது. இந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழக அரசை பொறுத்தவரை, அவர்கள் தமிழக மாணவர்கள் விஷயத்தில் பொறுப்புடன் செயல்படவில்லை” என்று கூறியதோடு வேறு சில வார்த்தைகளையும் தெரிவித்திருந்தார்.
இதற்கு தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். “அமைச்சரின் பதில் வலியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு, தமிழக எம்.பிக்கள், தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள் என அமைச்சர் கூறி இருக்கிறார்” என்று குறிப்பிட்டார். இதையடுத்து தனது வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
மார்ச் 11ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது தர்மேந்திர பிரதான் விவகாரத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அப்போது பெரியாரின் பெயரைக் குறிப்பிடாமல், ‘விடுதலை’ இதழில் வெளியானதாகக் கூறி ஒரு பகுதியை வாசித்தார். “தமிழ் படித்தால் பிச்சைகூடக் கிடைக்காது. – இந்த ஒரு வரி போதும். இருந்தாலும் முழுவதும் படிக்கிறேன் – தமிழ் படிப்பது பிச்சை எடுப்பதைத் தவிர, உயிர் வாழ வேறு ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, இதற்காக செலவுசெய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஒரு அனுபவப் புலவர் பாடியிருக்கிறார் என்று அவர் (பெரியார்) பேசியிருக்கிறார். அப்படிப் பேசியவரின் புகைப்படத்தை உங்கள் அலுவலகங்களில் மாட்டி வைத்திருக்கிறீர்கள். மேசைகளில் வைத்திருக்கிறீர்கள். எல்லா இடங்களிலும் வைத்திருக்கிறீர்கள். அவரை வணங்குகிறீர்கள்” என்று குறிப்பிட்டார் நிர்மலா சீதாராமன்.
நிதியமைச்சரின் இந்தப் பேச்சிற்கு எதிர்வினையாகவே கமல்ஹாசன் தனது முதல் உரையில் பேசியிருந்தார்.
பட மூலாதாரம், SANSAD TV
படக்குறிப்பு, கோப்புப் படம்
தமிழ் குறித்த பெரியாரது எழுத்தின் பின்னணி
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டும் கட்டுரை, 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி ‘விடுதலை’ இதழில் தலையங்கமாக வெளியானது எனக் குறிப்பிடப்பட்டு, வே. ஆனைமுத்து தொகுத்த ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ நூலின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கட்டுரைக்கு ‘தமிழ்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
‘வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள் என்றும் இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது’ என்றும் இந்தக் கட்டுரை துவங்குகிறது. இந்தக் கட்டுரையில் தமிழ்ப் புலவர்கள், கம்ப ராமாயணம், தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி இலக்கிய நூல்கள் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் பெரியார்.
‘இந்தக் கடவுள்களும் சமயங்களும் உள்ளவரை இந்நாட்டு மனிதர்கள் உருப்படப் போவதில்லை என்பதுதானே முடிந்த முடிவு. இதைச் சொல்லக்கூட இந்த நாட்டில் (என்னைத் தவிர) ஆளே இல்லையே’ என்கிறார் பெரியார்.
“மந்திரி கலைஞர் கருணாநிதி, தமிழுக்குக் கேடு வந்தால் மந்திரி பதவியை விட்டுவிடுவேன் என்று எதற்காகச் சொல்ல வேண்டும்? ஏன் அநாவசியமாக முட்டாள்கள் வைத்த கண்ணியில் மாட்டிக்கொள்ள வேண்டும்? ஒழுக்கம், நாணயம் கெட்டால் பதவியை விட்டுவிடுவேன், ஏன் உயிரைக்கூட விட்டுவிடுவேன் என்று கூறலாம். அதைவிட்டுவிட்டு, தமிழைக் காப்பாற்றாவிட்டால் அதற்குக் கேடுவந்தால், பதவியை விட்டுவிடுகிறேன் என்றால் அதற்காகவா மக்கள் ஓட்டுக் கொடுத்தார்கள்?
நம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து, நிர்வாகம், மக்களிடம் பேச்சு இவற்றைத் தமிழில் நடத்துகிறோம். சமயத்தை, சமய நூல்களை, இலக்கியத்தை தமிழில் கொண்டு இருக்கிறோமே, இதற்கு மேலும் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும்?
தமிழ் காட்டுமிராண்டி காலத்து மொழி. நாகரிக காலத்திற்கு, பகுத்தறிவு காலத்திற்கு, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற காலத்திற்கு, ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்ற காலத்திற்குத் தமிழ் பயன்படுமா? வேஷத் தமிழரை அல்ல; உண்மைத் தமிழரைக் கேட்கிறேன். சொல்லுங்கள் (நீங்கள் சொல்லும் சமாதானத்தைப் பல ஆயிரம் புத்தகமாக அச்சுப்போட்டு வெளிப்படுத்துகிறேன்). எவ்வளவோ வேலைசெய்ய வேண்டி இருக்கிற மந்திரி பதவியில் உட்கார்ந்துகொண்டு, ‘தமிழுக்குக் கேடுவந்தால் பதவியை விட்டுவிடுகிறேன்’ என்கின்ற மந்திரிக்கும், ஊர் ஊராய்த் திரிந்து குட்டிச்சுவராக வேண்டிய கோயில்களை எல்லாம் கட்டிமுடிக்கும் திருப்பணியில் இருந்த மந்திரிக்கும் தூரத்தில் என்ன வித்தியாசம்? நான் இதை மந்திரிமீது குறைகூற எழுதவில்லை. மந்திரிக்கு உள்ள பகுத்தறிவு எனக்கு நன்றாய்த் தெரியும்.
தமிழ் பற்றிய இந்தக் கருத்து இன்றைய கருத்தல்ல. இந்தி எதிர்ப்புக் காலம் தொட்டு எனக்கு இந்தக் கருத்துதான். இது மந்திரிகளுக்கும் தமிழுக்காக இன்று பாடுபடுபவருக்கும் தெரியும்” என்று அந்த தலையங்கத்தில் கூறும் பெரியார், முடிவாக தனிப்பாடல் ஒன்றை மேற்கோள் காட்டி முடிக்கிறார்:
“அடகெடுவாய்! பலதொழிலும் இருக்கக் கல்வி
அதிகமென்றே கற்றுவிட்டோம்; அறிவில்லாமல்
திடமுளமோ கனமாடக், கழைக்கூத்தாடச்,
செப்பிடுவித் தைகள் ஆடத் தெரிந்தோம் இல்லைத்;
தடமூலைவே சையராகப் பிறந்தோம் இல்லை;
சனியான தமிழைவிட்டுத் தையலார்தம்
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோம் இல்லை;
என்ன சென்மம் எடுத்துஉலகில் இரக்கின்றோமே”
தமிழ் படித்ததால் பிச்சைகூட கிடைக்கவில்லை; தமிழ் படித்தது பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர்வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, இதற்காகச் செலவு செய்த காலத்தை வேறுதுறையில் செலவிட்டால் வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதையும் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ் கற்ற அனுபவப் புலவர் மேற்கண்ட பாடல் மூலம் எடுத்துக்காட்டி இருக்கிறார்.” என்று முடிகிறது இந்தக் கட்டுரை.
பெரியார் மேற்கோள் காட்டும் பாட்டு, படிக்காசு தம்பிரான் என்பவர் எழுதியது. க.த. திருநாவுக்கரசு எழுதிய தனிப்பாடல் திரட்டு இந்தப் புலவரைப் பற்றிய சில தகவல்களைத் தருகிறது. பொன்விளைந்த களத்தூரில் பிறந்த இவரது இயற்பெயர் அறியப்படவில்லை. கி.பி. 1686 முதல் கி.பி. 1723வரை இவர் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. தொண்டை மண்டல சதகம், தண்டலார் சதகம், வேளூர் கலம்பகம் ஆகியவை இவரால் இயற்றப்பட்டவை. பிற்காலத்தில் துறவியாக மாறி தருமபுர ஆதீனத்தில் தம்பிரானாகவும் ஆனார்.
இவர் எழுதிய தனிப்பாடல்களில் ஒன்றுதான் ‘சனியான தமிழ்’. சில தொழில்களைக் குறிப்பிட்டு, அவற்றைக் கற்காமல், கல்வி கற்றுவிட்டதால் பிச்சை எடுத்துப் பிழைப்பதாக அந்தப் பாடல் கூறுகிறது.
“அடகெடுவாய்! பலதொழிலும் இருக்கக் கல்வி
அதிகமென்றே கற்றுவிட்டோம்; அறிவில்லாமல்
திடமுளமோ கனமாடக், கழைக்கூத்தாடச்,
செப்பிடுவித் தைகள் ஆடத் தெரிந்தோம் இல்லைத்;
தடமூலைவே சையராகப் பிறந்தோம் இல்லை;
சனியான தமிழைவிட்டுத் தையலார்தம்
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோம் இல்லை;
என்ன சென்மம் எடுத்துஉலகில் இரக்கின்றோமே”
அதாவது, “பிழைப்பதற்குப் பல வகையான தொழில்கள் இருக்கும்போது அவற்றின் தன்மையை அறியாமல், கல்வியே மற்றவற்றைக் காட்டிலும் மேன்மையுள்ளதென்று படித்துவிட்டோம். எல்லாரும் மயங்குமாறு வித்தைகளைச் செய்யவும், வானுற உயர்ந்த மூங்கில் கம்பத்தின் மீது நின்று கூத்தாடவும், கண்கட்டி வித்தைகள் புரியவும் கற்கவில்லை. விலை மகளிராகவும் பிறக்கவில்லை. சனி போன்று துன்பம் செய்கின்ற தமிழ்க் கல்வியைக் கைவிட்டு, அழகிய பெண்களுடன் வாழ்ந்து, அவர்களுக்காகத் தூதாய்ச் செல்லும் தொழில் செய்தும் உயிர் பிழைக்கவில்லை. மாறாக இவ்வகையான பிறவியை எடுத்து உலகில் பலரிடம் பிச்சை எடுத்து வருந்துகிறோம்” என்பது இந்தப் பாடலின் பொருள்.
பெரியாரின் தமிழ் குறித்த கட்டுரைகள், ‘பெரியார்: ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ நூலின் இரண்டாவது பகுதியில் மொத்தமாக இடம்பெற்றுள்ளன. அந்தக் கட்டுரைகளின் ஒட்டுமொத்த சாரமாக, மொழியை பயன்பாட்டிற்கான சாதனமாக பயன்படுத்துவதைத் தாண்டி, கூடுதல் பற்று வைக்கத் தேவையில்லை என்பதையே திரும்பத் திரும்பக் கூறுகிறார். இன்றைய நிலையில் வேகமாக முன்னேற தமிழைவிட, ஆங்கிலம்தான் சிறந்த சாதனம் என்றும் குறிப்பிடுகிறார் பெரியார்.